அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு அரசியல் செயலாளராக பணியாற்றி, உறுதுணையாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் திரு அகமது படேல் அவர்களது மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து தேர்தலுக்கு நிதி திரட்டுவது, வேட்பாளர்களுக்கு விநியோகம் செய்வது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிக சிறப்பாக செயல்பட்டவர் திரு அகமது படேல்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களது ஆலோசனையின் பேரில் தலைநகர் டெல்லியின் ஜவகர்பவன் அறக்கட்டளையின் செயலாளராக இருந்து, பிரமாண்டமான எழில் மிகுந்த மாளிகையை எழுப்புகிற முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதிலும், மாற்றுக்கட்சியினரோடு தொடர்பு கொள்வதிலும் அவரைப்போன்று சிறப்பாக செயல்படுபவர்களை காண்பது மிக மிக அரிதாகும். 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். குஜராத் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு வந்த அவரது பங்கு காங்கிரஸ் கட்சியினர் எவராலும் மறக்க இயலாது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இன்று ஒரு சோகமான நாள். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த திரு அகமது படேல் அவர்களது மறைவு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவரது மகனுக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.