கடந்த 1980 ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையாளராக அகமது படேலை நான் சந்தித்தேன். ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதையே அவர் விரும்புவார். இருந்தாலும், எனது வார இதழான நய் துனியாவுக்கு பேட்டி அளிக்க அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். ஆத்திரமூட்டும் வகையில் அமைந்த பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் துல்லியமாகப் பதில் அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த 35 ஆண்டுகளாக அவரை நண்பராகவும் அரசியல்வாதியாகவும் அறிந்திருந்தேன். டெல்லியில் அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமின்றி, பொது வாழ்க்கையின் அடிப்படை தார்மீக கோட்பாடுகளுக்கும் நேர்மையாளராகவும் அர்ப்பணிப்புக் கொண்டவராகவும் இருந்தார். கட்சியை வைத்துப் பல தலைவர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால், அகமது படேலோ தனது சொந்த அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு மேலாக எல்லாவற்றையும் செய்தார்.
குறிப்பாக, இந்திரா காந்தியால் வளர்க்கப்பட்ட தலைவர்களின் தலைமுறையின் மறைவுக்குப் பிறகு, நவீன காலங்களில் சிறந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவராக அகமது படேல் விளங்கினார். நரசிம்மராவுக்கு பிந்தைய காலத்தில் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தோன்றியவுடன், காங்கிரசுக்கு எதிர்காலம் இருண்டதாகத் தோன்றியது.
அகமது படேல் மற்றும் சில தலைவர்களின் எதார்த்தமான, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் 2004 ஆம் ஆண்டு மத்தியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. அவரது அரசியல் வியூகத் திறன், தாழ்மையான நடத்தை, அனைவருக்கும் செவிசாய்க்கும் திறன் ஆகியவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு விவேகமான மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்க உதவியது. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒன்றிணைத்து மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வர உதவியது.
கூட்டணியிலிருந்த 24 – க்கும் மேற்பட்ட கட்சிகளின் பல முறை பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டபோது, அவர்களைச் சமாதானப்படுத்தி, கூட்டணியில் தொடரச் செய்தவர் அகமது படேல். ‘சோனியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பவர்’ என அரசியல் விமர்சகர்கள் அகமது படேலை அழைத்தனர். என்னைப் பொருத்தவரை, அவர் காங்கிரஸ் கட்சியின் தீயணைப்பு வீரர்.
1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறுநாள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அப்போது நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் கே.ஆர்.நாராயணன் ஆகியோரைக் கொண்ட கட்சி விவகாரக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
இதனை அறிந்து என் வீட்டுக்கு விரைந்து வந்த அகமது படேல், நீங்கள் கட்சியிலிருந்து விலகினால் நானும் விலகுவேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து நம்மைப் போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக விலகினால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்படாதா? என்று கேட்டார்.
அதேசமயம், என் அரசியல் குரு ஹர்கிஷன் சிங் சுர்ஜித் என்னை ஆசுவாசப்படுத்தி, ராஜினாமாவைத் திரும்பப் பெற வலியுறுத்தினார்.
ஹர்கிஷன் சிங் சுர்ஜித்திடம் சொல்லி, காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் விலகுவதைத் தடுத்து நிறுத்துமாறு அகமது படேல் கேட்டுக் கொண்ட விசயம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
அகமது படேலின் இரவு நேர அரசியல் பிரசித்தி பெற்றது. நண்பர்களையும், எதிர்முகாமில் இருப்பவர்களையும் அழைத்து அறிவுரை மற்றும் தகவல்களை வழங்குவார்.
திடீரென ஒரு நாள் இரவு எனக்கு போன் செய்து, கபாப் உணவு எடுத்து வருகிறேன் தயாராக இருங்கள் என்று சொன்னார். சொன்னபடி வீட்டுக்கு கபாப் எடுத்து வந்தார். இருவரும் மகிழ்வுடன் சாப்பிட்டோம். அரசியலில் அவர் மிருகத்தனமாக செயல்பட்டார். 24 மணி நேரமும் காங்கிரஸ் அரசியலை அவர் சுவாசித்தார். ஆனால், அவரது மோசமான எதிர்ப்பாளர்களுக்குக் கூட அவர் தீங்கு செய்ய முயலவில்லை.
சோனியா காந்தி தலைவராக இருந்த இக்கட்டான காலகட்டத்தில், அகமது படேலின் காதுகளும் கண்களும் சோனியாஜியை நோக்கியே இருந்தன. காங்கிரஸ் கட்சியை தமது திறமையால் சோனியா காந்தி தூக்கி நிறுத்தினார். இதில் அகமது படேலின் பங்கும் குறைந்ததல்ல. சோனியா காந்திக்கு ஆலோசனை கூறிய போதெல்லாம், கட்சியின் நலனுக்காக அவரது நண்பர்களை எல்லாம் தியாகம் செய்ய அவர் தயங்கியதில்லை. நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தாலும், அவருக்கு எதிரிகள் இருந்ததில்லை. அவர் ஒருபோதும் கட்சியைக் காட்டிக் கொடுத்ததில்லை என்பதை, காங்கிரஸ் கட்சியிலிருந்த அவரது எதிர்ப்பாளர்கள்கூட நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் அகமது படேல் அவசியம் தேவைப்பட்டார். காங்கிரஸில் அவருக்கு மாற்று யாரும் இல்லை. இந்திய ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. சாமானியர்களின் பார்வையில் அரசியல்வாதிகள் மரியாதை இழந்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், அமைதியான, உணர்ச்சிவசப்படாத, நேர்மறை அணுகுமுறை கொண்ட அகமது படேலை நாம் இழந்துள்ளோம்.
கட்டுரையாளர் : ஷாஹித் சித்திக். (காங்கிரஸின் சிறுபான்மைப் பிரிவின் தலைவராக இருந்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். நய் துனியா என்ற இந்தி இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.)