நவம்பர் 19: அன்னை இந்திரா காந்தி அவர்களின் 103வது பிறந்த நாள் சிறப்பு கட்டுரை – படித்து பகிர்விர் !
ராஜதந்திரி, அரசியல்வாதி மற்றும் பண்டித ஜவஹர்லால் நேருவின் மகள் என பன்முகத்தன்மை கொண்டவர் இந்திரா காந்தி. லால் பகதூர் சாஸ்திரி மறைவுக்குப்பின் இந்தியாவின் பிரதமரானவர். 1967-1971, 1971-1977 மற்றும் 1980-1984 ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை 3 முறை பிரதமராகப் பதவி வகித்தவர். இன்று வரை இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகள் பணியாற்றியவர்.
1975-77 ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதன் மூலம் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்தார்.
காந்தி என்ற பெயர் அவரது குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த மகாத்மா காந்தியால் வந்ததல்ல. தெற்கு குஜராத் பாருச் நகரைச் சேர்ந்த பெரோஸ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டபின் இந்திராவுடன் காந்தி என்ற பெயரும் சேர்ந்து கொண்டது.
அவரது அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அவரது கொள்கைகள் பல நேரங்களில் கடுமையாக இருந்திருக்கின்றன.
எனினும், இந்தியாவின் வளர்ச்சிக்காக இந்திரா காந்தி ஆற்றிய பங்கெடுப்பு இன்றும் நினைவுகூரப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் அவரது சிறந்த செயல்பாடுகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்திய அரசியல் வரலாறு மற்றும் அரசியலில் இந்திரா காந்தியின் பெயர் தொடர்ந்து நிலைத்திருக்கும் வகையில் பணியாற்றியிருக்கிறார்.
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியின் சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன…
பசுமைப் புரட்சி
இந்தியா தொன்று தொட்டே விவசாயப் பொருளாதாரம் சார்ந்த நாடாகும். கிராமங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளனர். பசி, பட்டினி, வறுமை, வேலையில்லா திண்டாட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதே சுதந்திர இந்தியாவின் பிரதமர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
5 ஆண்டுத் திட்டங்கள் மூலம் நேரு மற்றும் சாஸ்திரி அரசுகள் கொள்கைகளை வகுத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தன.
அப்போது இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக அமெரிக்கா இருந்தது. இந்தியத் தலைவர்களுக்கும், அவர்களது கொள்கைகளுக்கும் அப்போதை அமெரிக்க அதிபர் கென்னடி ஆதரவாக இருந்தார். கென்னடி மறைவுக்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டு நிக்சன் அதிபரான பிறகு இந்திய-அமெரிக்க உறவுகளில் சரிவு ஏற்பட்டது.
இதன்பின்னர், லிங்கன் பி. ஜான்சன் அதிபரானதும், அமெரிக்காவுக்கு இந்திரா காந்தி பயணம் மேற்கொண்டார். அப்போது, ஜான்சனை இந்திரா காந்தி பெரிதும் கவர்ந்தார். அமெரிக்காவிடம் இருந்து மேலும் உணவு மற்றும் வளர்ச்சிக்கான உதவியை அமெரிக்காவிடமிருந்து பெற இந்திரா காந்தியின் பயணம் வழி ஏற்படுத்தியது. எனினும், அதன்பிறகு, இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. உபரி உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மாற்றம் செய்து அதிபர் ஜான்சன் கொண்டு வந்த பொதுச் சட்டம் 480, இந்த விரிசலுக்குக் காரணமானது. அதன்பிறகு, வியட்நாமுடன் நடந்த போரில் ஆதரவு அளிக்க மறுத்த இந்தியாவின் நிலையும் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த முக்கிய உணவு தானியங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த சமயத்தில்தான், நார்மன் போர்லாக்கின் பசுமைப் புரட்சிக் கொள்கையை இந்திரா காந்தி அரசு கையில் எடுத்தது.
விவசாயத்தை தொழிற்துறைக்கு மாற்றி, அதிக மகசூல் தரும் விதைகள் போன்ற நவீன முறைகள் கையாளப்பட்டன. பூச்சிக் கொல்லி மருந்துகள், உரம் மற்றும் ட்ராக்டர்கள், நீர்ப்பாசன வசதிக்கான கருவிகள் என நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
வங்கிகள் தேசியமயம்
கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அவசரச் சட்டம் மூலம் 14 தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார். வங்கி நிறுவனங்களின் அவசரச்சட்டம் (கையகப்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் கீழ் மாற்றுவது)என்ற பெயரிடப்பட்டது.
இதன்மூலம், 14 பெரும் வர்த்தக தனியார் வங்கிகளிடம் இருந்த நாட்டின் 70 சதவீத முதலீடு மத்திய அரசுக்குத் திருப்பிவிடப்பட்டது.
கடந்த 1947 முதல் 1955 வரை தொடங்கப்பட்ட 361 வங்கிகள் தோல்வியடைந்த நிலையில், கணிக்க முடியாத நிலையில் இந்த வங்கிகள் செயல்பட்டதுதான் தேசிய மயமாக்கப்பட்டதற்கு முதல் காரணம். எந்த உத்தரவாதமும் இல்லாததால், பணம் போட்டவர்கள் இழப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டதால், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொழிற்துறை மற்றும் வியாபாரிகளின் மீது மட்டும் கவனம் செலுத்தி, விவசாயத் துறையை இந்த வங்கிகள் கண்டுகொள்ளாதது மற்றொரு காரணம். 1950 முதல் 1967 வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் விகிதம் 2.3 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகக் குறைந்ததும் மற்றொரு காரணம்.
வங்கிகளை தேசியமயமாக்கிய இந்த அவசரச் சட்டம், முதன்மை துறைகள், விவசாயம், சிறு தொழில்கள், சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் எளிதாகக் கடன் பெற உதவியது. அதைவிட, இந்த அவசரச் சட்டத்தின் மூலம் கிராமப் புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் புதிதாக வங்கிகளை அமைக்க வழிவகுத்தது.
1971 இந்திய-பாக் போர்
1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் (அப்போது மேற்கு பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) மீது ஆபரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது. அதன்மூலம் வங்காள மக்கள், மாணவர்கள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் ஆயுதப் படையினரை வெளியேற வைத்தது. பாகிஸ்தான் ராணுவக் குழு 1970 தேர்தல் முடிவுகளை ரத்து செய்து, பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானை கைது செய்தது.
1970 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட உள்நாட்டு ஒத்துழையாமையை அடக்கக் கிழக்கு பாகிஸ்தானின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் விரிவான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உள்ளூர் மக்களைச் சோதனை செய்ய பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தீவிரவாதிகள் உதவினர். வெகுஜனக் கொலைகள், நாடு கடத்தல், இனப் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறின.
அதனால், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து தப்பித்த 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். 3 கோடி பேர் இடம்பெயர்ந்தனர். முஜிப்நகரில் வங்கதேச மாகாண அரசு உருவாக்கப்பட்டு, கல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்ட அரசாங்கமாகச் சென்றபோது, இந்தியா தற்காலிகமாகத் தஞ்சம் அளித்தது.
1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதி வட இந்தியாவில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியபோது, இந்தியா போரில் இறங்கியது. கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பிரதமர் இந்திரா காந்தி முழு ஆதரவு அளித்தார். அனைவரையும் அகதிகளாக ஏற்கும் போது ஏற்படும் செலவைவிட, மேற்கு பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது பொருளாதார ரீதியாகச் செலவைக் குறைக்கும் என்று இந்திரா காந்தி மதிப்பிட்டார். வங்கதேச படைகளுடன் இணைந்து இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல், 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டாகாவில் பாகிஸ்தான் சரணடைந்தது. இதனையடுத்து, 13 நாட்கள் நடந்த போர் முடிவடைந்தது.
1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வங்கதேசத்துக்கு அதிகாரப்பூர்வ விடுதலை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வங்கதேசத்தை அங்கீகரிக்க ஐ.நா. சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது. மற்ற நாடுகள் அனைத்தும் வங்கதேசத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
சிம்லா ஒப்பந்தம்
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின், வங்கதேச விடுதலைக்குப் பிறகு, இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் இந்திய-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ மற்றும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் கையெழுத்திட்டனர். வங்கதேசத்துக்கு ராஜ்ய ரீதியிலான அங்கீகாரத்தைப் பாகிஸ்தான் அளிக்க இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்தியது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பினரும் அமைதியான முறையில் மற்றும் ராஜ்ய ரீதியிலான முறையில் கருத்துவேறுபாடுகளைக் களைந்து கொள்வதென, இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினை ராஜ்ய ரீதியில் தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தவிர மூன்றாவது நாடு ஏதும் குறுக்கிட இந்தியா அனுமதிக்க மறுத்துவிட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி, போர் நிறுத்தக் கோடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோடாக (எல்ஓசி) மாற்றப்பட்டது. பரஸ்பர வேறுபாடுகள் மற்றும் சட்ட விளக்கங்களைப் பொருட்படுத்தாமல், ஒருதலைபட்சமாக அதை மாற்ற இரு தரப்பினரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
மன்னர் மானியம் ஒழிப்பு
அரசியல் சாசனத்தில் 26 ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது. அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1947 ஆம் ஆண்டு முதல் மன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, 1949 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, மன்னர் ராஜ்யங்கள் மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. கடந்த 1969 ஆம் ஆண்டு இது தொடர்பான சட்டம் மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா தோற்றுப் போனது. இதன்பிறகு, 1971 ஆம் ஆண்டு 26 ஆவது சட்டத்திருத்தம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மன்னர் மானியம் ரத்து செய்யப்பட்டது. எல்லா குடிமக்களுக்கான சரிசமமான உரிமைகள் அடிப்படையிலும், அரசின் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆபரேஷன் புத்தர் புன்னகை
ஆபரேஷன் புத்தர் புன்னகை என்ற பெயரில் கடந்த 1974 ஆம் மே 18 ஆம் தேதி இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த 1972 ஆம் ஆண்டு மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்த பிரதமர் இந்திரா காந்தி, அணுகுண்டு சோதனைக்கான பணியைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுகுண்டு தயாரிப்பில் பொறியியல் மற்றும் பரிசோதனை குறித்த வளர்ச்சி நடவடிக்கையும் முடிவு எடுக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்த அணுகுண்டு ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் ராணுவ தளத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதில் முக்கிய ராணுவ தளபதிகள் பங்கேற்றனர். பொக்ரான் 1 என்று அழைக்கப்பட்ட முதல் அணுகுண்டு சோதனைக்குப் புத்தரின் புன்னகை என்று பெயரிடப்பட்டது. இந்த சோதனையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பினர்களும் உறுதி செய்தனர். இந்த அணுகுண்டு சோதனையை அமைதியான அணுகுண்டு வெடிப்பு என்று குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,அணுத் திட்டங்களுக்கு இது உண்மையிலேயே உந்துதலாக இருக்கும் என்று அறிவித்தது.
முதல் விண்வெளிப் பயணம்
இந்திரா காந்தி ஆட்சியில் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட் ராகேஷ் சர்மா கடந்த 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இன்டெர்கோஷ்மாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோயுஸ் டி-11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பறந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இன்டெர்கோஸ்மாஸ் என்பது சோவியத் விண்வெளித் திட்டமாகும். சோவியத் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் இந்தியா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது. விண்வெளியில் சர்மா 7 நாட்கள் 40 நிமிடங்களைக் கழித்தார். அவருடன் சோவியத் ஒன்றியத்தின் 2 வீரர்களும் சென்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட 43 ஆய்வுகளை இந்த குழுவினர் விண்வெளியில் நடத்தினர்.
விண்வெளியிலிருந்து திரும்பியதும், சோவியத் ஒன்றியத்தின் கதாநாயகன் என்ற விருதை வழங்கி ராகேஸ் சர்மா கவுரவிக்கப்பட்டார். அவருக்கும் உடன் சென்ற 2 சோவியத் ஒன்றிய வீரர்களுக்கும் நாட்டின் உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருதை வழங்கி இந்தியா கவுரவித்தது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்
கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 8 ஆம் தேதிகளில், பஞ்சாப் அமிர்தசரஸில் பொற்கோயில் அமைந்துள்ள ஹர்மந்திர் சாஹிப் காம்ப்ளக்ஸில் சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைப் பிரதமர் இந்திரா காந்தி முடுக்கிவிட்டார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.
சீக்கியர்களுக்குத் தனி நாடு கேட்டு காலிஸ்தான் இயக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. 1940 களில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 70 – களிலும் 80 – களிலும் வளர்ச்சியடைந்தது.
ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தமதாமி தக்சால் தலைவர் ஜர்னாய்ல் சிங் பிந்தரன்வாலே முக்கிய காரணமாக இருந்தார். இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவராக விளங்கிய பிந்தரன்வாலே, தனி நாடு போராட்டத்துக்கு மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். பொற்கோயில் வளாகத்தில் தஞ்சம் அடைந்த அவர்களை அப்புறப்படுத்தும் வகையிலேயே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் 83 ராணுவ வீரர்கள், 493 மக்கள் உள்ளிட்ட 575 பேர் கொல்லப்பட்டனர் என அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கையே, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தமது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் ஆகியோராலேயே பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாகிப் போனது.
வெளிநாட்டுக் கொள்கை
இந்திரா காந்தியின் ஆட்சியின் வெளிநாட்டுக் கொள்கை, தெற்காசியாவில் இந்தியாவை அதிகாரமிக்க நாடாக உயர்த்தியது.
இந்திய-வங்கதேச போருக்குப் பிந்தைய வெற்றி, தெற்காசியாவில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. அதேசமயம், போருக்குப் பின் செய்து கொண்ட ஒப்பந்தமும், பாகிஸ்தானுடனான உறவை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவியது.
வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை எதிர்த்த இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு கொண்டது சிறந்த வெளிநாட்டுக் கொள்கையாக இன்றும் பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனத்துடனான இஸ்ரேல் மோதலில், இஸ்ரேலுக்கு எதிராக இந்திரா இருந்தார். பின்னர் இஸ்ரேலின் ஆதரவாளராக மாறினார்.
துர்கா தேவி என்று அழைத்த வாஜ்பாய்
உலகிலேயே மிகவும் பிரபலமான இந்தியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. அவரது வலுவான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் இந்தியாவை அதிகாரமிக்க நாடு என்ற நிலைக்கு உயர்த்த வழி ஏற்படுத்தியது. பல அதிரடி நடவடிக்கைகளால் இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணி என்று அழைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், இந்திரா காந்தியைக் கடவுளுக்கு இணையாகப் பல அரசியல் கட்சியினர் ஒப்பிட்டனர். அடல் பிஹாரி வாஜ்பாய் ஒருபடி மேலே போய், இந்திரா காந்தியை துர்கா தேவி என்று அழைத்தார்.
தன் மீது சர்ச்சைகள் இருந்தாலும், இந்தியா தான் இந்திரா, இந்திரா தான் இந்தியா என்பதை மக்கள் மனதில் ஆணித்தரமாக விதைத்துப் போயிருக்கிறார் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி.