ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணின் இறப்பை நினைத்துப் பார்க்கும் போது திகிலூட்டுவதாக உள்ளது. இல்லை, அது இயற்கையான இறப்பு இல்லை. அது கொலை-உத்தரப்பிரதேச அரசின் பக்கபலத்துடன் காவல் துறை செய்த கொலை.
ஒரு நிமிடம் சிந்திப்போம் : கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தலித் பெண், புகார் கொடுப்பதற்காகப் பல மணி நேரம் காவல் நிலையம் முன்பு காத்துக் கிடந்துள்ளார். காவல் நிலையம் கொண்டு வரப்பட்டபோது, அந்தப் பெண்ணுக்கு நினைவு இருந்தது. ”ஆம், என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்” என அந்தப் பெண்ணின் வாக்குமூலம் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைப்படி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான மையத்துக்கு அந்தப் பெண்ணை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. விதிமுறைகளின்படி, 24 மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணை பாலியல் தாக்குதல் குறித்த தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, பரிசோதனையைத் தாமதப்படுத்தி, விந்து தொடர்பான தடயவியல் ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர்.
அந்த பெண் அளித்த மரண வாக்குமூலத்தில், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், அதனைச் செய்தவர்களின் பெயர்களையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மரண வாக்குமூலத்தைக் கண்டுகொள்ளாமல், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பதை தடயவியல் அறிக்கை தெளிவுபடுத்துவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார் ஓர் உயர் காவல் துறை அதிகாரி.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பெண் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் விந்து ஏதும் தென்படவில்லை என்றும் தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல…! உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்குக் காவல் துறையினர் மாற்றினர். அந்த பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட மாஜிஸ்திரேட் மிரட்டும் காணொளியும் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வுகள் எல்லாம் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்தப் பெண் உயிருடன் இருந்தாலோ அல்லது அவரது உடலை விரைந்து எரிக்காவிட்டாலோ, அந்தப் பெண்ணே சாட்சியாக்கிவிடக்கூடும் என்று பயந்துள்ளனர். எனவே, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதற்கான அனைத்தையும் செய்திருக்கின்றனர்.
அந்தப் பெண்ணின் மரணத்தோடு மாநில அரசின் கொடுமை நின்றுவிடவில்லை. இறந்தபிறகு காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நிகழ்த்தி, பிரேதப் பரிசோதனையில் வெளிப்படக்கூடிய அத்துனை ஆதாரங்களையும் காவல் துறை அழித்துள்ளது. அந்தப் பெண்ணின் உடலை எடுத்து வந்து அதிகாலை 2.30 மணிக்கு பெட்ரோல் ஊற்றிக் காவல் துறையினரே எரித்துள்ளனர். ”இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும், இப்போது எரிக்காதீர்கள்” என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கதறிய கதறல், காவல் துறையினரின் காதுகளில் கேட்கவே இல்லை.
அந்தப் பெண்ணின் உடலை எரிக்கும் முன், குடும்பத்தாரைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை வீட்டில் வைத்துப் பூட்டி, தங்கள் மகளின் முகத்தைக் கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை அந்த காக்கி உடை பாவிகள்.
”மகள் முகத்தில் மஞ்சளைத் தடவிக் கொள்கிறேன்” என்று இறந்த பெண்ணின் தாயார் காவல் துறை அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சினார். கல்நெஞ்சக்காரர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணின் உடலை எரித்துவிட்டனர்.
இந்த சூழ்நிலையில், ஏதாவது நீதி கிடைக்கும் என்று எவராலும் எதிர்பார்க்க முடியுமா? ஒருவேளை நீதி வழங்கப்பட்டால் கூட, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கிடைக்குமா? இது கடினம்,மிகவும் கடினம். இப்போது செய்திகளில், ”பாஜகவிடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” என்ற புதிய கோஷங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
அதேநேரத்தில், நமது நீதி பரிபாலன முறைகள் கூட அச்சுறுத்துகின்றன. சமீபத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், சம்பவ இடத்திலிருந்த அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. மறுபுறம், எல்கர் பரிஷத் வழக்கில் எந்த வன்முறையும் நடக்காத போதிலும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்றவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போதிலும், அவர்களை நீதிமன்றம் தண்டித்து சிறைக்கு அனுப்பியுள்ளது. தற்போதைய நீதி பரிபாலன முறை, பழைய மனு தர்ம முறையைப் போல், சாதி அடிப்படையில் தண்டனை வழங்குவது போல் தெரிகிறது.
எந்த திசையை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்? முன்னேயா அல்லது பின்னேயா? குற்றவாளி சாட்சிக் கூண்டில் நிற்பது போல், இன்று நமது நீதித்துறையும் நீதி பரிபாலன முறையும் நீதியின் முன்பு நின்று கொண்டிருக்கின்றன, நாடு திசைமாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
இறுதியாக என்னிடம் உள்ள ஒரு கோரிக்கை:
அந்த பிஞ்சு உடல் காவல் துறையினரால் எரிக்கப்பட்ட இடத்திலிருந்தோ, நிலத்தில் அவள் நடந்து சென்ற இடத்திலிருந்தோ ஒரு பிடி மண்ணைக் கொண்டு வந்து, அந்த பெண்ணின் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னத்தை உருவாக்குவோம்.
எரிக்கப்படும் முன்பு, மகள் முகத்தில் மஞ்சள் பூசவேண்டும் என அந்தத் தாய் விரும்பினாள். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண் சிலையாக நின்றபின், முகத்தில் மஞ்சளைப் பூசுவோம். இதன் மூலம் அந்தப் பெண்ணிடம் நாம் மன்னிப்பு கேட்போம்; அஞ்சலி செலுத்துவோம்.
இவ்வாறு நாம் செலுத்தும் அஞ்சலி, அந்த பெண்ணின் பெற்றோருக்கும் தாய் திருநாட்டுக்கும் ஆறுதலைத் தருமா?
இதுதான் நமது கேள்வி. இது தான் ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியின் கேள்வி.
கட்டுரையாளர்: தேவனூரா மகாதேவா (பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர். நாட்டில் சகிப்பின்மை அதிகரித்ததைக் கண்டித்து, இரு விருதுகளையும் தூக்கி எறிந்தவர். தலித் உரிமைகளுக்காகப் போராடும் செயற்பாட்டாளராகவும், நாட்டில் உள்ள சமுதாய இயக்கங்களின் வழிகாட்டியாகவும் இருக்கிறார்.)