கடந்த கால வர்த்தக ஒப்பந்தங்கள் சில துறைகளில் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
15 நாடுகள் பங்கேற்ற பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுக் கூட்டம் (ஆர்சிஇபி) கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், மறுநாள் டெல்லியில் நடந்த உலகமயமாக்கலின் விளைவு என்ற தலைப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”திறந்த மனதுடன் இருப்பதாகக் கூறி, நியாயமற்ற வர்த்தகம் மற்றும் உற்பத்திப் பலன்களை மற்ற நாடுகள் பெற இந்தியா அனுமதித்துவிட்டது. உலகின் மிகப் பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஆர்சிஇபி கூட்டத்தைப் புறக்கணிக்கக் கடந்த ஆண்டு இந்தியா முடிவு செய்தது. இந்தியாவின் சுயச்சார்பு கொள்கையின்படி, வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து ஒதுங்கி இருக்க இந்தியா முடிவு செய்தது.
கடந்த கால வர்த்தக ஒப்பந்தங்கள் சில துறைகளுக்கு இழப்பை ஏற்படுத்தின. உலகளாவிய கடமைக்குள் நம்மைச் சிக்கவைத்து எதிர்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், பல வர்த்தக ஒப்பந்தங்கள் நமக்குப் பலன் அளிப்பவையாக இல்லை. திறந்த மனது மற்றும் திறன் குறித்து வாதாடியவர்களால் முழு வடிவத்தைத் தர முடியவில்லை. உலகத்தின் பின்னே செல்லாமல், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது.
முந்தைய சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களால் வர்த்தகப் பற்றாக்குறை, உற்பத்திக் குறைவு, வேலை இழப்பு மற்றும் இறக்குமதியை முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது” என்றார்.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, ”ஆர்சிஇபி-யிலிருந்து தனித்து இருப்பதால், ஆரம்பத்திலேயே முக்கிய சட்டங்களை உருவாக்கும் வாய்ப்பை இந்தியா இழந்துவிடும் என்றே அர்த்தம் கொள்ள முடியும். இந்தியா தொடர்ந்து ஆசியா எனப்படும் பேருந்தைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த பேருந்தில் ஏற வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்” என்கிறார்கள்.
”8 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளிட்ட 15 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, நாடுகளுக்கிடையேயான 92 சதவீத வர்த்தகக் கட்டணத்தை ரத்து செய்வதற்கு அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
ஆர்சிஇபி பேச்சுவார்த்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கியபோது, அதில் மன்மோகன் சிங் அரசு பங்கேற்றது. பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
அதன்பிறகு அமைந்த மோடி அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்சிஇபி – யை புறக்கணித்தது. இதன்மூலம், இந்திய விவசாயம் மற்றும் பால் பண்ணைத் துறைகள் குறித்த இந்தியாவின் நிலையை எடுத்துரைக்கும் வாய்ப்பை இழந்துள்ளோம் என்கின்றனர்” பொருளாதார வல்லுநர்கள்.