மருத்துவரும் பகுத்தறிவாளருமான மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர் தீவிர இந்து அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டு 7 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 5 புலனாய்வு அமைப்புகள் விசாரணை, பல்வேறு கைது நடவடிக்கை என ஆரம்பத்தில் குதிரை வேகமெடுத்த விசாரணை, இப்போது ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் திரிந்த கும்பலுக்கு எதிராக பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கர், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.
இந்த படுகொலையை செய்தது, தீவிர இந்துமத அமைப்புகள் என குற்றம் சாட்டப்பட்டது. சில கைது நடவடிக்கைக்குப் பின்னர், இந்த வழக்கில் சிறு முன்னேற்றம் கூட இல்லை. தபோல்கரின் குடும்பத்தாரும் அவர்களது நண்பர்களும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
தபோல்கரின் மகன் ஹாமித் கூறும்போது, “சிபிஐ போன்ற பெரும் புலனாய்வு அமைப்புகூட, என் தந்தை கொலை வழக்கை முடிக்க முடியாதது வலியை ஏற்படுத்துகிறது” என்றார். தபோல்கரின் மகள் முக்தா கூறும்போது, “என் தந்தை படுகொலைக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே மற்றும் கன்னட அறிஞர் கல்புர்கி படுகொலை மற்றும் 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் போன்றோர் படுகொலைகள் எதற்காக நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்கும் போதுதான் நாங்கள் மகிழ்ச்சியும் அமைதியும் அடைவோம். ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து அமைப்பு தான் என் தந்தையின் படுகொலைக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறி, அந்த அமைப்பைச் சேர்ந்த சிலரை கைது செய்தனர். ஆனால், அதற்குப் பிறகு வழக்கு விசாரணை என்ன ஆனது என்றே தெரியவில்லை” என்றார்.
தபோல்கர் கொலை வழக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு சிபிஐ-க்கு மாற்றி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிபிஐ-யும் மகாராஷ்ட்ரா அரசும் இணைந்து தபோல்கர் கொலையில் துப்புக் கொடுத்தால் ரூபாய் 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்றும் அறிவித்தன. மகாராஷ்ட்ரா சிஐடி, ஏடிஎஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, சிபிஐ உள்ளிட்ட 5 அமைப்புகள் விசாரித்துவிட்டன.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும்,’சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய புள்ளியான மருத்துவர் வீரேந்திரசின் தாவ்டே உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். தபோல்கர் படுகொலையை நிகழ்த்த தாவ்டே மூளையாக செயல்பட்டதாக அப்போது சி.பி.ஐ கூறியது. அதேசமயம், கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டேவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்து ராஜ்யம் என்ற கோஷத்துடன் தொடங்கப்பட்ட ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற அமைப்பின் மீது, 2008 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் தானே, பன்வேல் குண்டுவெடிப்புகள், 2009 ஆண்டு கோவாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோர் படுகொலையில் ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனினும், தபோல்கர் படுகொலை வழக்கு விசாரணையில் ,எந்த முன்னேற்றமும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறும்போது, ”இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கையும் சி.பி,ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுவும் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கைப் போல் தான் தீர்வு காணப்படாமல் முடியும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், தபோல்கர் கொலை வழக்கில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தது மத்திய உள்துறை அமைச்சகம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்வது அவசியம்.