கொரோனாவை எதிர்த்துப் போராடவும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் நிதி ( பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதி) உருவாக்கப்பட்டது.
பெரிய கார்பரேட் நிறுவனங்களும், அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் பல கோடி ரூபாயை பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளன. மக்களும் தங்கள் சிறிய சேமிப்பிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு நிதியளித்தனர். இந்த நிதிக்கு பிரதமர் தலைவராக இருப்பதால், நம்பிக்கை வைத்து நிதி அளித்தனர்.
நல்ல நோக்கத்துக்காக நாம் அனுப்பிய பணம் பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாம் அளித்த பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? என்று தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம்.
ஆனால், பிஎம் கேர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், பின்வரும் 3 நடவடிக்கைகளுக்காக ரூபாய் 3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு 50 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் வாங்க ரூபாய் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு.
- தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
இதில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1,000 எவ்வாறு செலவு செய்யப்பட்டது?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு, வெளிப்படைத்தன்மை குறித்த ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.
- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து நிதி பயன்படுத்தப்பட்டதற்கான வழிகாட்டு முறைகளை தயவுசெய்து தாருங்கள்.
- ஒவ்வொரு மாநிலத்துக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரத்தை தாருங்கள்.
- இது தொடர்பாக அமைச்சகத்தின் தொடர்புகள் மற்றும் இது தொடர்பான குறிப்புகள் அடங்கிய நகல்களை தாருங்கள்.
இவ்வாறு எழுப்பப்பட்ட 3 கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி அனுப்பப்பட்ட மனுவை, பிஎம் கேர்ஸ் நிதியின் தலைமை அலுவலகமான பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அனுப்பியது.
இதற்கு பதில் அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதி என்பது அரசு அமைப்பு தொடர்புடையதல்ல. மத்திய, மாநில அரசுகள் முதலீடு செய்து நடத்தும் நிறுவனமும் அல்ல. இதன் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்று தெரிவித்தது.
இதே போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக செயற்பாட்டாளர் நீரஜ் ஷர்மா அனுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
எனினும், கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா கூறும்போது, ”அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எந்த நடவடிக் கையையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை உண்டு” என்று தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதுபோல், பிரதமர் அலுவலகம், தேசிய தகவல் மையம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவை அரசு அமைப்புதான். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர். ஆனால், இன்று வரை பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பதில் தர மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி அரசு அமைப்பின் வருகிறதா? அல்லது இல்லையா? என்று, சமூக செயற்பாட்டாளர் லோகேஸ் பத்ரா, நேரிடையாக கேள்வி எழுப்பினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு 30 நாட்களுக்குப் பிறகும் பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் வரவில்லை.
இதில் கேள்வி என்னவென்றால், பிஎம் கேர்ஸ் நிதி ஆரம்பித்தது முதல், அதன் தலைமையிடமாக பிரதமர் அலுவலகம் தான் இருந்து வருகிறது. பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலக ஊழியர்களோ அல்லது பிஎம் கேர்ஸ் நிதிக்கு நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களோ தான் பராமரித்து வந்திருக்க வேண்டும்.
ஒருவேளை பிஎம் கேர்ஸ் நிதியை பிரதமர் அலுவலகம் பராமரிக்காமல் இருந்திருந்தால், அது குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டும்.
ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதிலை பெற முடியவில்லை.
“கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்பட்ட பணம், எவ்வாறு செலவழிக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்ளும் உரிமை, நிதியை கொடுத்த இந்திய குடிமக்களுக்கு இல்லையா? “
இந்திய மக்கள் எழுப்பும் கேள்விக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அல்ல, மனசாட்சியின் படி பதில் அளிக்குமா பிரதமர் அலுவலகம்?