‘இந்திய எல்லைக்குள் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இருக்கும் விசயம் பிரதமர் மோடிக்கு தெரியுமா?” என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது.
புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கென் கூறியதாவது:
சீனப் படைகள் இன்னும் இந்திய எல்லையில் ஊடுருவியிருப்பதை சில ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது போன்ற முக்கிய செய்திகளை அரசு தவிர்ப்பதை விட, சில ஊடகங்கள்தான் அதிகம் தவிர்த்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு முன்பு கேள்விகளை வைக்க விரும்புகின்றேன். அதற்கு மோடி அரசு பதில் தரவேண்டும்.
* ரோந்து முனை 10 மற்றும் ரோந்து முனை 13 ஆகியவற்றுக்கு இடையில், சீனப் படைகளால் இந்திய ராணுவத்தினர் பிடிக்கப்பட்டனர். இதில் நம் எல்லை எது?
* நம் எல்லையில் உள்ள தேஸ்பங்க் பிளைன்ஸ் மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதியில் வலுக்கட்டாயமாக சீனப் படைகள் ஊடுருவிய பின், அங்கு கட்டுமானப் பணிகளை தொடங்கியிருக்கிறார்களா?
* நம் எல்லைப் பகுதியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் சீனப் படைகள் ஊடுருவிய பின், இந்தியப் படைகளை மோடி அரசு பின்வாங்க சொன்னதா?
* நம் எல்லையை ஒட்டி சீனா விமான தளம் அமைப்பது நமக்கு அச்சுறுத்தல் இல்லையா?
* ஒப்பந்தத்தின்படி, நம் எல்லையை விட்டு சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பின்வாங்கவில்லை என்பது அரசுக்கு தெரியுமா? இது குறித்து மோடி அரசு அமைதி காப்பது ஏன்? நடவடிக்கை எடுக்க ஏதும் திட்டம் உள்ளதா? இதைப் பற்றி உங்களிடத்தில் தெரிந்து கொள்ள நாடு காத்திருக்கிறது.
* பல நாளேடுகளும், சாட்டிலைட் படங்களும், ராணுவ ஜெனரல்களும், பாதுகாப்பு அமைச்சரும் கூட, ஊடுருவல் நடந்திருப்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். இவர்களது கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவல் இல்லை என்று பிரதமர் மோடி கூறியது பொய் என்று ஆகிறது. அதாவது, ஜுன் மாதம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்களை தவறாக திசை திருப்பியிருக்கிறார் பிரதமர்.
* சீனாவுடன் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுவதன் அர்த்தம் என்ன?
* சீனாவின் கட்டுமானங்களை தடுக்க மோடி அரசு எத்தகைய கொள்கையை, வியூகத்தை வகுத்துள்ளது?
இப்போதெல்லாம் நீங்கள் நீதிமன்றம் செல்லும்போது, சாதகமான முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. எங்களுக்கு சாதகமாக முடிவு வராது என்று முன்னரே நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.
நாங்கள் நீதிமன்றத்துக்கு போகும்போதும், எங்களுக்கு சாதகமாக முடிவு வராது என தயார்படுத்திக் கொள்வோம். இது சட்ட ரீதியான போராட்டம் மட்டுமல்ல, இது அரசியல் போராட்டமும் கூட. சட்டப் போராட்டம் என்பது முழுமையான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி. எங்களுக்கு நன்றாகவே தெரியும். எங்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்காது. எனவே எங்களது அரசியல் திட்டங்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது தான் இப்போது முக்கியம். அந்த நம்பர் எங்களிடம் இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் அஜய் மக்கென் கூறினார்.