இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரை 10 லட்சத்து 202 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25 ஆயிரத்து 553 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா தொற்றுக்கு நேற்று வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தான், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை 28 லட்சமாகவும் உயரும் என்ற அதிர்ச்சி தகவல், பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய அறிவியல் நிறுவனம் கடந்த 1909 ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்டது. கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் நிறுவனம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அடிப்படை ஆய்வு நடத்தி அதற்கான தீர்வை அளிப்பதை ஆரம்பம் முதலே முக்கிய பணியாக கொண்டுள்ளது.
சமீபகாலமாக, பல தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து உடல் நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. பருவநிலை மாற்றம், நீர் மேலாண்மை நிர்வாகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஆய்விலும் இந்திய அறிவியல் நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்திய அறிவியல் நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வு முடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வு குறித்து, ஐஐஎஸ்சி பேராசிரியர் ஜி. தீபக் மற்றும் அவரது குழுவினர் கூறும்போது, ” செப்டம்பர் 1 ஆம் தேதியில், இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 35 லட்சமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 88 ஆயிரமாகவும் உயரக்கூடும்.
அதேசமயம், தொற்றின் வேகம் அதிகமாகும் பட்சத்தில், செப்டம்பர் 1 ஆம் தேதியில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக உயரும்.
இதில், மகாராஷ்ட்ராவில் 25 ஆயிரமாகவும், டெல்லியில் 9 ஆயிரத்து 700 ஆகவும், கர்நாடகாவில் 8 ஆயிரத்து 500 ஆகவும், தமிழகத்தில் 6 ஆயிரத்து 300 ஆகவும், குஜராத்தில் 7 ஆயிரத்து 300 ஆகவும் உயிரிழப்போர் எண்ணிக்கை உயரக்கூடும்.
கொரோனா தொற்று மோசமான நிலையை எட்டினால், நவம்பர் 1 ஆம் தேதியில் இந்தியா முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை 5 லட்சமாகவும் உயரும்.
2021 ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 34.7 லட்சமாகவும், உயிரிழப்பு 1 லட்சத்து 90 ஆயிரமாகவும் உயரக்கூடும். அதேசமயம், கொரோனா தொற்று மிக மோசமான நிலையை அடையும்பட்சத்தில், 2021 மார்ச் இறுதிக்குள் பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சமாக உயரலாம். உயிரிழப்பு எண்ணிக்கை 28 லட்சமாக அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைவாகவே இருக்கும். அதேசமயம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகும்” என்றனர்.
இந்திய அறிவியல் நிறுவன ஆய்வு முடிவுகள் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்?
கொரோனா தொற்று பரவியதில் இருந்தே, விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளோடு, தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் ஒத்துப் போய்க் கொண்டிருப்பதால், இப்போதைய தேவை போர்க்கால நடவடிக்கையே என்பதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் வாட்ஸ்அப் பகிர்வுக்கான Link ஐயும் சேர்க்கவும்