1998 ஆம் ஆண்டு விஞ்ஞானியும் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் நிர்வாகியுமான அப்துல் கலாம், இரண்டாவது பொக்ரான் குண்டுவெடிப்பு சோதனையிலும் முக்கிய பங்காற்றியவர்.
இந்தியா 2020 என்ற தலைப்பிட்டு எழுதிய புத்தகத்தில் 2020-க்குள் இந்தியா வல்லரசு நாடாகும் என்று தமது நம்பிக்கையை குறிப்பிட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டே இது அதிகபட்ச கனவாக இருந்தது. இந்தியா ஓர் ஏழை நாடு. உலக அளவில் மனிதர்களின் வளர்ச்சியில் சராசரியைக் கூட எட்ட முடியாத நாடு. அது எப்படி உடனே வல்லரசாக மாறும்? அவரது கனவை சந்தேகத்துடன் பார்ப்பதற்குப் பதிலாக, பெரும்பாலோரால் பாராட்டப்பட்டது.
1998 ஆம் ஆண்டு பொக்ரான் குண்டு வெடிப்பு மூலம் பிரபலமடைந்த அப்துல் கலாமை, இந்த புத்தகம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன்பின்னர் குடியரசுத் தலைவரும் ஆனார்.
பிரச்சினை என்னவென்றால், 2020 ஆம் ஆண்டில் கலாம் சொன்ன எதுவுமே நடக்கவில்லை. இந்தியா வல்லரசும் ஆகவில்லை. தன் குடிமக்களுக்கு இந்தியா தரமான வாழ்க்கையையும் தரவில்லை. இந்தியாவின் அடித்தளம் இன்னும் சோர்வுற்றே இருக்கிறது.
கலாமின் இந்த கணிப்பு எவ்வளவு தவறானது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதைப் போல், 2020 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஒரு பேரழிவாக அமைந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் 4.7 சதவிகிதமானது. மோசமான கொள்கைகளான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை அமல்படுத்தியதால், பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டது.
சமூக அரசியல் ரீதியாக நிலைமை மிகவும் மோசமானது. இதனைத் தொடர்ந்து இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த மாபெரும் போராட்டத்தை இந்தியா சந்தித்தது.
கொரோனாவால் ஏற்பட்ட பேரழிவு இந்த ஆண்டுதான். ஆனால், பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தபோது டெல்லியில் மோசமான வகுப்புக் கலவரம் நடந்தது. ட்ரம்ப் தங்கியிருந்த பெத்லாமிலிருந்து சில கி.மீ தொலைவில் தான் இந்த கலவரம் மூண்டது. நாட்டில் தலைநகரில் நடந்த இந்த கலவரத்தில், 53 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்தியாவின் சமூகக் கட்டமைப்பும், சட்டம் ஒழுங்கும் எந்த அளவுக்குத் தகர்ந்து போனது என்பதை இந்த கலவரம் நினைவூட்டுகிறது.
பொருளாதார நெருக்கடி:
ஒரு நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தில், வெகுஜன வன்முறை என்பது வல்லரசு ஆவதற்குச் சாத்தியமற்றது. உலக அளவில் கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவித்த பிறகு, மார்ச் மாதத்தில் தான் இந்தியா விழித்துக் கொண்டது.
தொற்றுநோயைத் தடுப்பதற்கான நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாடும் ஈடுபட்டது. ஆனால், இந்தியா அடைந்த குழப்பத்தைப் போல் வேறு எந்த நாடும் சந்திக்கவில்லை என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.
அனைத்துப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.
இது ஒரு தொடக்கமாகத்தான் இருந்தது. ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்ற நாடுகளை விட வெகுவாகக் குறைந்தது. ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு 23.9 சதவிகிதமாக ஜிடிபி விகிதம் குறைந்தது. கடந்த அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில், 2020 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சுருங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவுக்கு முன்பே இந்தியப் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. அதனைச் சரி செய்வதற்குப் பல ஆண்டுகளாகும் என்ற நிலையே இருந்தது.
இந்தியா வல்லரசாகிவிடும் என்று இந்தியர்கள் யாராவது நினைத்திருந்தால் 2020 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியர்களின் சராசரி வருமானம் வங்காள தேசத்தைவிடக் குறைவாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
கொரோனாவுக்கு முன்பும் இந்தியர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். நடுத்தர வருவாயுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளை விடத் தரவரிசையில் இந்தியா பின்தங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு வல்லரசு நாடாவோம் என்ற எந்த அறிவிப்பையும் வெளியிடாத இலங்கை, கடந்த 2019 ஆம் ஆண்டு நடுத்தர வருவாய் பிரிவினரை உயர் வருவாய் பிரிவினராக உயர்த்தியுள்ளது.
பேய் பசி:
மனித வளர்ச்சியில் உலகிலேயே இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக, வளர்ந்த நாடுகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வரும் ஆய்வறிக்கைகளும் இதைத் தான் சொல்கின்றன.
கடந்த அக்டோபர் மாதம் உலக அளவில் பசியால் வாடும் மக்களைக் கொண்ட 107 நாடுகள் பட்டியலில் இந்தியா 94 ஆவது இடத்தில் உள்ளது. நேபாளம், வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானை விட, பட்டினியும், ஊட்டச் சத்துக்குறைபாடும் இந்தியாவில் அதிகளவில் உள்ளன. கடந்த 2017-19 ஆம் ஆண்டில் சிசு மரணமும் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 5 ஆவது தேசிய குடும்ப நல சர்வேயின்படி, 2019 ஆம் ஆண்டு 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்தே வந்துள்ளது. ஐ.நா சபையின் மனித மேம்பாட்டு உள்ளடக்கத்தின்படி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டில், 189 நாடுகளில் இந்தியா 131 ஆவது இடத்தில் உள்ளது.
பின்னோக்கி சென்ற இந்தியா:
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா ஏழை நாடாக இருந்தபோதிலும், மற்ற வளரும் நாடுகளுக்கு நமது ஜனநாயகம் முன்மாதிரியாக இருந்தது. ஆனால், இந்து தேசிய விஷத்தை விதைத்து, இந்தியாவை இரு மடங்கு பின்னோக்கித் தள்ளியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
2019 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டமும், 2020 ஆம் ஆண்டு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கடுமையான மதமாற்றத் தடைச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.
ஒரு கட்சி ஆட்சி முறைக்கு நரேந்திர மோடி நாட்டை கொண்டு செல்ல முயல்கிறார். கடந்த வாரம் ப்ரெஞ்ச் நாளேடான லீ மோண்டே வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்து தீவிரவாதத்தின் ஆய்வகம் உத்தரப்பிரதேசம்’ என்று தலைப்பிட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தை ‘பயங்கரவாத சாமியார்’ என்று விமர்சித்துள்ளது.
5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்:
பிரச்சினைகளின் ஆழத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளாதது துரதிருஷ்டமானதாகும். 2024 ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே லட்சியம் என்று தமது அரசின் குறிக்கோள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதாவது, அடுத்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இரு மடங்கு அதிகரிக்கும் என்று இதற்கு அர்த்தம். இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 இந்தியாவுக்கு மோசமான ஆண்டு. வல்லரசு ஆவதை தவிர்த்து, பக்கத்தில் உள்ள சிறு நாடுகளை விட இந்தியா பின்னோக்கி சென்றுவிடுமோ என்ற அச்சம் தற்போது தலைதூக்கியுள்ளது. இதனை உணர்ந்து பிரச்சினையைச் சரி செய்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் முதலில் பிரதமர் மோடி இறங்க வேண்டும்.