கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் அரசு என்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க மறுக்கிறது என பேராசிரியரும், கட்டுரையாளருமான மாஜ் பின் பிலால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஸ்க்ரோல் இணையத்தில் எழுதிய கட்டுரை:
பிரிவினையின்போது, பாகிஸ்தானை விட இந்தியாவையே தேர்ந்தெடுக்க முஸ்லிம்கள் விரும்பியதாக சமூக செயற்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர் கூறியிருக்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரை இது நிகழவில்லை. பிரிவினையின்போது, எங்கள் குடும்பம் லூதியானாவில் இருந்தது. அப்போது கலவரம் மூண்டபோது, முஸ்லீம் பாகிஸ்தானை விட்டுவிட்டு மதச்சார்பற்ற இந்தியாவை எங்கள் குடும்பம் தேர்வு செய்தது.
மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சியின் 3 -வது தலைவராக என் தாத்தா மவுலானா ஹபிப் உர் ரஹ்மான் இருந்துள்ளார். 1937 ஆம் ஆண்டு நடந்த மாகாண தேர்தலில் மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றது. காஷ்மீர் மக்களுக்கு எதிராக மன்னர் டோக்ரா கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக என் தாத்தா போராடினார். அவருடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசு என் தாத்தாவைக் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்தது.
மக்கள் விரோதச் சட்டங்கள் வரும்போதெல்லாம். அதனை எதிர்த்து என் தாத்தா சிறை சென்றார். 14 வருடங்களை அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். அவரது வாரிசுகளும் மக்கள் பிரச்சினைகளுக்காக சிறையில் இருந்துள்ளனர்.
என் குடும்பத்தைப் போலவே நானும் இந்தியாவிலேயே இருக்க விரும்புகின்றேன். இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியையும் செய்து வருகின்றேன். நான் இந்த நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதை நிராகரித்துவிட்டேன். பாஜகவின் பின்புலத்தில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்யும் வேலை இது. ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியும். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறு துரும்பைக் கூட அவர்கள் எடுத்துப் போட்டதில்லை. இரு நாட்டு முறையைக் கொண்டு வர அவர்கள் முயல்கிறார்கள். மற்ற இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.
என் குடும்பமும், இந்த நாட்டின் எண்ணற்ற முஸ்லீம்களும் நாட்டுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், வீர் சாவர்கர் அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். என் குடும்பத்தினர் இந்தியர்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கின்றனர்.
மதச்சார்பற்ற இந்தியாவில் பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்துப் போராடினேன். இந்த சட்டம் மியான்மர் ரோங்கியாக்களையும், இலங்கைத் தமிழர்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. (உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினரை ஐ.நா சபை அங்கீகரித்துள்ளது).
எங்கள் அடையாளத்தையும், குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தையும் கேட்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறேன். என் முன்னோர்கள் தேர்வு செய்த மதச்சார்பற்ற பூமியில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவதை ஏற்கமாட்டேன். இதுபோன்ற பாரபட்சமான சட்டங்கள் கொண்டு வருவதை விட்டுவிட்டு, போதுமான வேலை வாய்ப்பு, நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதியை செய்து கொடுங்கள்.
இவற்றை மனதில் வைத்துத்தான் நான் அமைதியாகப் போராடினேன். இந்த சட்டங்களை முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், தலித்துகள் என யாருமே விரும்பவில்லை. மனநிலை அச்சமின்றி இருக்க வேண்டும் என தாகூர் கூறுவார். இதைத்தான் நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.