சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டின் நாடாளுமன்றம் சீனாவுடன் ஒரு நீண்ட கால ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அங்கீகரித்தது. இதன் மூலம் 400 பில்லியன் டாலர் வரை ஈரானுக்கு சீனா உதவி செய்யும். ( ஒரு பில்லியன் = 100 கோடி; ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 75.)
இந்திய ரூபாயில் 4000 x 75= 30,0000 கோடிகளாகும். அதாவது, முப்பது லட்சம் கோடிக்கு சமம்.
இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக நீண்ட நெடுநாட்களாக இருந்த ஈரான் இப்போது சீனாவுடன் கரம் கோர்த்ததற்கு காரணம் என்ன ? இதில் ஈரானின் தவறேதுமில்லை. பெரியண்ணன் அமெரிக்காவுக்கு அஞ்சி ஈரானுடன் உறவு கொள்ளவோ, – உதவி செய்யவோ இந்தியா பயந்து ஒதுங்கிக் கொண்டதால் வேறுவழியின்றி அந்த நாடு உதவிக் கரம் நீட்டிய சீனாவிடம் புகலிடம் அடைந்து விட்டது. இது இந்தியாவுக்கு பல வகைகளில் பேரிழப்பாகும்.
2003 ல் பா.ஜ.க.வின் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈரான் நாட்டுடன் ஒரு உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி இந்தியா 400 மில்லியன் டாலர் மதிப்பில் ஈரானின் ‘சபாஹர்’ துறைமுகத்தை நவீனப்படுத்தி, பின்னர் அங்கிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையில் உள்ள ஈரானிய நகரான ‘ஜஹேடான்’ வரை 628 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே லைன் மற்றும் ரோடு நிர்மாணிப்பது என முடிவானது. இதனால் இரு நாட்டுக்கும் நன்மையே. மூன்றாவதாக ஆப்கானிஸ்தான் நாடும் இதனால் பயன் பெற்றிருக்கும்.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் நமக்கு நல்லுறவு இல்லாத நிலையில் நமது பொருட்களை ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாகிஸ்தான் வழியாக தரைவழியாக அனுப்ப அந்த நாடு அனுமதி மறுக்கும் சூழலில் இந்த உடன்பாடு இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதகம். ஆனால் பெரியண்ணன் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாதே என்ற அச்சத்தால் இந்த உடன்பாட்டை அமல்படுத்துவதில் வேண்டும் என்றே காலதாமதம் செய்து இந்தியா இழுத்தடித்தது.
பொறுமை இழந்த ஈரான் சீனாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டது. இதனால் சீனாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்தியாவின் மிக விசுவாசமான நீண்ட கால நட்பு நாடான ஈரானை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் இழுத்துக் கொண்டது. அதுமட்டுமின்றி அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஈரான் நாட்டின் பெட்ரோல் சீனாவுக்கு மலிவான விலையில் கிடைக்க வழி ஏற்பட்டது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் அழுத்தம் காரணமாக நொடிந்து போயிருந்த ஈரானுக்கு சீனா அளித்த பொருளாதார உதவி அந்த நாட்டை பெரும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி உள்ளது. தவிர, நீண்ட காலமாக தாமதமான சபாஹர் துறைமுக நவீனமயமும் விரிவாக்கும் இனி சீனாவின் ஒத்துழைப்போடு நிறைவேறும்.
இதனிடையே, கடந்த 2018 மே மாதத்தில் ஈரான் நாட்டுடன் அமெரிக்கா கையெழுத்திட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக ரத்து செய்து விட்டார். கூடவே ஈரான் நாட்டின் முதுகெலும்பை முறிக்கும் அளவுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதுமட்டுமின்றி, பிற நாடுகளும் அமெரிக்காவின் தடையை அமலாக்க வேண்டும். மீறினால் அந்த நாட்டின் மீதும் அமெரிக்கா தடை விதிக்கும் என பேட்டை ரெளடி போல் மிரட்டினார். இந்த மிரட்டலுக்குப் பயந்த பல நாட்டு தலைவர்களில் நமது 56 அங்குலம் விரிந்த மார்பு கொண்ட பிரதமரும் அடங்குவார்.
ஈரானில் அபரிமிதமாக கிடைப்பது எண்ணெய் வளம் தான். இந்த எண்ணெய் விற்பனை மூலமாகவே அந்நாட்டின் பொருளாதாரம் நிற்கிறது. எனவே அமெரிக்க மிரட்டலுக்கு பயந்து பல நாடுகள் ஈரானிலிருந்து பெட்ரோல், கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதால் அதன் பொருளாதாரம் சிதைந்தது. உற்ற நண்பனாக விளங்கிய இந்தியாவும் கைவிட்டது. உதாரணத்திற்கு, இந்தியா 2019-20 ல் ஈரானிலிருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் வெறும் 1.7 மில்லியன் டன். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் இறக்குமதி செய்ததோ 23.9 மில்லியன் டன் .
அமெரிக்க மிரட்டலுக்குப் பயந்து தனது நீண்டகால நண்பனை இந்தியா கைகழுவியது. இதனால் இந்திய நலன்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. ஆனால், நெருக்கடியில் சிக்கித் தவித்த ஈரானுக்கு கை கொடுத்து சீனா தனது நண்பனாக்கிக் கொண்டது. இந்த உடன்பாட்டின் மூலம் சீன நாட்டின் நலன்களையும் அது மேம்படுத்திக் கொண்டது. இந்தியாவை வல்லரசாக்குவோம் என வெற்றுக் கூச்சல் போட்டால் போதாது. அமெரிக்காவின் அடாவடியை ,- மிரட்டலை எதிர்த்து நிற்கும் துணிச்சல் வேண்டும்.
மோடி அரசின் இந்த தவறை, – தேவையின்றி நமது நட்பு நாடான ஈரானை நமது எதிரி நாடான சீனாவின் மடியில் தள்ளிவிட்டதைப் பற்றி நம் நாட்டின் அறிவார்ந்த ஊடகங்கள் விவாதம் செய்ய மாட்டார்கள்; விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஏற்கனவே சீனா நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றுடன் நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் ஈரான் நாடும் சேர்ந்திருக்கிறது. மொத்தத்தில் நம் நாடு தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது. சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது.
(பொதுச் செயலாளர்,தொழிலாளர் கல்வி மையம், தமிழ்நாடு )