எம். மலைமோகன்
(கட்டுரையாளர், பத்திரிகையாளர்)
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தாதா விகாஷ் துபே என்கவுன்டரில் கொல்லப்பட்டதையடுத்து, வழக்கமாக, பாட்டி வடை சுட்ட கதை, காக்கா வடை திருடிய கதை என அம்மாநில போலீஸார் ஆரம்பித்துவிட்டா ர்கள்.
எந்த ஒரு குற்றவாளியும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை தகர்த்தெறிந்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்து, கோழைத்தனமாக என்கவுண்டர் என்ற பெயரில் விகாஸ் துபேயை போலீஸார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என வடநாட்டு ஊடகங்கள் சில ஆதாரத்துடன் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அரசியல் மற்றும் காவல்துறை அமைப்பை சமரசம் செய்யும் வகையில் விகாஸ் துபே என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியிருப்பதாக, இந்துஸ்தான் டைம்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. கட்டுரையின் விவரம் வருமாறு:
துபே கொல்லப்பட்டதன் மூலம் இந்தியாவின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து அறிய முடிகிறது. மேலும், அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகளுக்கு இடையிலான நட்புறவு குறித்தும் இந்த என்கவுண்டர் மூலம் வெளிப்படுகிறது. இந்த இரண்டு பிரச்சினைகளில் என்கவுண்டர் கொலைகள் குறித்து ஏற்கனவே ஏராளமாக விவாதிக்கப்பட்டு விட்டது. போலீஸ்காரர்கள் செய்யும் இதுபோன்ற கொலைகளை இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்கள் ஆதரிக்கிறது என்பதை யாரும் நம்பவில்லை. ஒருவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை, அவர் தன்னை நிரபராதி என நிரூபிப்பதற்கு அரசியல் சாசனத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரச்சினை என்னவென்றால், என்கவுண்டரை ஆதரிக்காத இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பாலோர், இதுபோன்ற என்கவுண்டர்களை ஆதரிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் சிலர் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது என்கவுண்டரை பெருமளவு வலுவாக ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நமது சட்ட அமைப்பில் உள்ள குறைபாடுகளே இதுபோன்ற என்கவுண்டருக்கு காரணமென வாதாடப் படுகிறது. ரவுடிகள் மீது தொடரப்படும் வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே, ஜாமீன் பெறும் குற்றவாளிகள் மீண்டும் வெளியே வந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றதும் இந்தியாவில் இருந்து தப்பி துபாய் சென்றுவிட்ட சம்பவமே இதற்கு சாட்சி.
இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான வழக்குகள் சாட்சிகளை மையமாக வைத்தே உள்ளன. வழக்கு விசாரணைக்கு வரும்போது சாட்சிகளை வலுப்படுத்த போலீஸார் தவறிவிடுகின்றனர். மேலும் சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சிகளாக மாற்றும் வேலையிலும் ரவுடிகள் ஈடுபடுகின்றனர். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நீதித்துறை முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என பல நாடுகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதோடு கூடுதலான நீதிமன்றங்களை அமைத்து, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீதித்துறை அமைப்பை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, இந்தியாவில் உள்ள போலீஸ்காரர்கள் நீதிபதிகள் ஆகவும், மரண தண்டனை விதிப்பவர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.
1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், நக்சலைட் இயக்கங்களை ஒழிப்பதற்காக என்கவுன்டர் முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் யாரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லலாம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. நீதித்துறை அமைப்புக்கு பதிலாக அந்த இடத்தில் போலீஸாரின் துப்பாக்கி அமர்ந்திருக்கிறது.
என்கவுண்டர்கள் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலை மாறி, படிப்படியாக அதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மாற்றிவிட்டனர். பிரபலமான ஊடகங்கள் அம்பலப்படுத்திய போதும் என்கவுண்டர் செய்வதை பல நகரங்களில் போலீஸ் அதிகாரிகள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாக இதுபோன்ற என்கவுண்டர் நடத்தப்படுவதற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருவது தான் கவலை அளிப்பதாக உள்ளது. இதுமட்டுமன்றி, சமூக ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் ஓரளவு இதுபோன்ற நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளுக்கு போலீஸார் விதிக்கும் இதுபோன்ற மரண தண்டனைகளை எதிர்த்து சந்தேகம் எழுப்புவோரை, மோசமானவர்களாக சித்தரிப்பதும், போலீஸாருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் என்று குற்றஞ்சாட்டும் மன நிலையே மேலோங்கி நிற்கிறது.
யாரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல போலீஸாருக்கு சுதந்திரம் கொடுத்தால், விருப்பம்போல் சுட்டுக் கொல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில வழக்குகளில் மக்கள் கோபத்தில் கொந்தளிக்கும் போது, நிலைமையை சமாளிப்பதற்கு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், யாரையாவது ஒரு சந்தேக நபரை என்கவுண்டரில் கொலை செய்து, அவர் தப்ப முயன்ற போது சுட்டுக் கொன்றதாக தெரிவிப்பது போலீஸாருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற என்கவுண்டர் குறித்து நம்மில் பலர் கேள்வி எழுப்பும் போது, போலீஸாருக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வதும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி என்கவுண்டரை ஆதரிப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் உத்தரப்பிரதேச தாதா விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவம், சந்தேகத்தையும் போலீஸார் தண்டனை கொடுப்பவர்களாக மாறி இருப்பதையும் காட்டுகிறது. துபேவுக்கு காவல்துறையினருடன் தொடர்பு இருந்ததாகவும், போலீஸார் சிலர் அவருக்கு அரணாக இருந்ததாகவும் உத்தரபிரதேச போலீஸாரே ஊடகங்கள் முன்பு தெரிவித்துள்ளனர். போலீஸாருடனான இத்தகைய தொடர்பே விகாஸ் துபேயை பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையவும், கொலை போன்ற வழக்குகளில் தொடர்புடைய துபேயை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் காரணமாகவும் அமைந்திருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விகாஷ் துபேயை கைது செய்ய சென்ற போலீஸாரில் எட்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு வாரமாக தேடியும் விகாஸ் துபேயை கண்டுபிடிக்கமுடியவில்லை. விகாஸ் துபேயின் கும்பலைச் சேர்ந்த பலரைப் பிடித்து போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், கடந்த ஜுலை 9 ஆம் தேதி வியாழக்கிழமை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் துபேயை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்தனர். துபேயை மத்திய பிரதேச போலீஸ் பிடித்தார்களா? அல்லது என் கவுண்டரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கூடும் இடத்தில் துபே கைது ஆனாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்படும்போது, தான் விகாஸ் துபே என்று உரத்த குரலில் கத்தியிருக்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் உள்ள கேமராவில் படம் பிடித்துள்ளனர். அதனால், கைது செய்த இடத்திலேயே என்கவுண்டரில் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற போலீஸாரின் திட்டம் நிறைவேறவில்லை.
போலீசாருக்கு அட்சயப் பாத்திரமாக திகழ்ந்ததாலும், அரசியல்வாதிகளுடன் தொழில்ரீதியாக தொடர்பு வைத்திருந்ததாலும், இவர்களது ரகசியத்தை அறிந்து வைத்திருந்ததாலும் துபேயை என்கவுண்டரில் சுட்டுக் கொல்வதில் உத்தரபிரதேசப் போலீஸார் உறுதியாக இருந்தனர். எதிர்பார்த்ததைப் போல் உஜ்ஜைனியிலிருந்து கான்பூருக்கு செல்லும் வழியில், துபே தப்பிச்செல்ல முயன்றதாகக் கூறி அவரை என்கவுண்டரில் கொன்றுள்ளனர்.
போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்ற பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி கூறும்போது, துபேயை அழைத்துச் சென்ற கார் கவிழ்ந்ததாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால் வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும்போது துபேயை அழைத்துச் செல்லப்பட்ட கார் வேறு என்பது தெரியவந்தது. உத்தரப்பிரதேச போலீஸாரை பின் தொடர்ந்து நாங்கள் சென்றோம். எனினும் என்கவுண்டர் நடந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் எங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விட்டனர் என்கின்றனர்.
துபேயை சுட்டுக் கொல்வதற்கு சரியான நேரம் பார்த்து உத்தரப் பிரதேச போலீஸார் காத்திருந்ததையே இது காட்டுகிறது.
இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, போலீஸாரை பற்றி வெளியில் ஏதும் சொல்லிவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து அவசர, அவசரமாக செயல்பட்டது உறுதியாகிறது. விகாஸ் துபேயை என்கவுண்டரில் சுட்டதற்கு போலீஸார் கூறும் காரணம் பலவீனமாக உள்ளது. என்கவுண்டரால் பிரச்சினை ஏற்படுமா என்ற கவலை போலீஸாருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
இதுபோன்ற என்கவுண்டர்களை தடுக்க தேவையான சட்டம் இயற்றப்படவேண்டும். போலீஸார் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்வார்கள் என்பது மேலும் ஒரு முறை ஊர்ஜிதமாகியுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் துறையினரை பாதிக்கும் ரகசியங்களை தெரிந்திருக்கும் நபரை, இதேபோன்று கோழைத்தனமாக என்கவுண்டர் நடத்தி போலீஸார் சுட்டுக் கொல்ல வாய்ப்புள்ளது.
இவர்களுக்கெல்லாம் மன்னிப்பு கிடைக்கலாம். ஆனால் வழக்கமான கேள்வி இதுதான்.
யார் நம்பிக்கைக்குரியவர்கள்?
தாதாக்களா? அல்லது போலீஸாரா?
இதுபோன்ற அருவருக்கத்தக்க நபர்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. என்கவுண்டரில் துபே கொல்லப்பட்டது இந்தியாவில் நிகழ்ந்த என்கவுண்டர் வரலாற்றிலேயே மோசமான ஒன்றாகிவிட்டது. இது குஜராத் பானி என்கவுண்ட ராக நிகழ்ந்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
இப்போது நிலைமை கைமீறி போய்விட்டது. தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள், அதே தாதாக்களை ஒழிக்க போலீஸார் மூலம் என்கவுண்டர்களை நிகழ்த்துவது, அதுவும் இந்திய நாடே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் என்கவுண்டரை நிகழ்த்துவதன் மூலம், அப்பாவி மக்களையும் இந்த என்கவுண்டர் ருசி பார்த்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ துபே என்கவுண்டரில் பல உண்மைகள் புதைக்கப்பட்டு விட்டன.