சீன எல்லையில் அமைந்துள்ள லடாக் கல்வான் பகுதியில் சீன ஊடுருவலையும், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக வரவேற்றன. மத்திய அரசின் அலட்சிப் போக்கை அவர்கள் சுட்டிக்காட்டாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மட்டுமே கல்வான் தாக்குதலின் பின்னணி குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, ” எந்த தேதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின ?. இந்த மீறல்கள் மத்திய அரசுக்கு எப்போது தெரியவந்தது?. அமெரிக்கா நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள சாட்டிலைட் படத்தில் நம் ராணுவ வாகனங்கள் எண்ணிக்கையையும், சீன ராணுவ வாகன எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் கவனத்துக்கு வந்ததா?. இந்த அசாதாரண சூழல் குறித்து உளவுத்துறை அறிக்கை தரவில்லையா? கல்வான் பகுதியில் தற்போதைய நிலை என்ன?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதே கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ” நம் எல்லைக்குள் இதற்கு முன்பும் யாரும் ஊடுருவவில்லை, தற்போதும் யாரும் ஊடுருவவில்லை. இந்திய நிலப்பகுதி எதுவும் யார் வசமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
ஊடுருவல் ஏதும் இல்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சை தமது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், நமது வீரர்களை சீனா கொன்றது. நமது நிலப் பரப்பை சீனா எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் ஊடுருவல் இல்லை என்று கூறிய பிரதமர் மோடியை சீனா பாராட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
லடாக் விவகாரத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து வைத்துள்ள கேள்விகள்:
இந்திய நிலப்பரப்பை சீனா எடுத்துக் கொண்டது. அதனை மீட்க பேச்சுவார்த்தை நடக்கும்போது, ஊடுருவல் இல்லை என்று பிரதமர் மோடி கூறுவது சரியா?
* நமது நிலத்தை சீனா எடுத்துக் கொண்ட சரியான விவரத்தை மோடி அரசு வெளியிட வேண்டும்.
* எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ஊடுருவல் தொடர்பாக தவறான தகவலை ஊடகங்களுக்கு மத்திய அரசு அளிப்பதாக பாதுகாப்புத்துறை நிபுணர் அஜய் சுக்லாவின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன ?
* கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது பரப்பளவை விரிவாக்கம் செய்து கொண்டிருப்பது இந்தியாவுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். மோடி தலைமையிலான ஆட்சியில் என்னதான் நடக்கிறது? பாரத மாதாவின் புனித மண்ணை சீனா கபளீகரம் செய்வதை அனுமதிக்கலாமா?
*சீன ஊடுருவல் குறித்து சீன ஊடகங்களே அமைதியாக இருக்கும் போது, லடாக் எல்லையில் எந்தவித ஊடுருவலும் இல்லை என பிரதமர் மோடி கூறுவது, சீனாவிடம் சரண்டர் மோடியாக மாறிவிட்டார் என்பதையே காட்டுகிறது .
* லடாக் வன்முறை மற்றும் தேச நலனின் மோடி அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததும், இந்திய-சீன நாடுகளுக்கிடையே சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைப் பொறுத்தவரை, பழைய நிலையே தொடரும் என இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை?
* ஆயுதம் ஏதும் இன்றி நம் எல்லைக்குள் இருந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா நியாயம் கற்பிப்பதற்கு இந்தியா அனுமதித்தது ஏன்?
* இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையின் போது கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மை குறித்து குறிப்பிடாதது ஏன்?
* தேச நலன் முக்கியமானது. அதனை பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. அதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
* சீனாவின் ஊடுருவலுக்கு எதிராக ஓரணியில் திரளுவோம். அதேசமயம் நமது மண்ணில் சீனா எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை மோடி அரசு வெளியிடுமா?
* ஜுன் 6 ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்படி சீனா நிற்கவில்லை. நம்முடைய எல்லைக்குள் வந்த அவர்கள் சில கட்டுமானங்களை நிறுவுகின்றனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சீன ஊடுருவல் இல்லை என்று கூறப்பட்டது. இதில் எது உண்மை?
* இந்தியப் பகுதிக்குள் யாரும் வரவில்லை என்றால் நம்முடைய வீரர்கள் எங்கே இறந்தார்கள்? நமது எல்லையில் வந்து இந்திய வீரர்களை பிடித்துச்சென்றார்களா? அல்லது நம் வீரர்கள் சீனா எல்லைக்குச் சென்றார்கள் என சீனா சொல்வது உண்மையா? ஆரம்பத்திலிருந்தே இது குறித்த உண்மை தகவல்ளை பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ நாட்டு மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்?
இப்படி…ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள் மோடி அரசை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பை கருதி அவர் எழுப்பும் கேள்விக்கு இதுவரை நேரடி பதில்கள் இல்லை. ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தால், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் அது அரணாக இருக்கும் என்பதை மோடி அரசு உணர வேண்டும்.
இந்திய – சீன எல்லையில் மே 22 மற்றும் ஜுன் 23 ஆகிய தேதிகளில் கல்வான் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் உள்ள வித்தியாசங்கள்