பிரதமர் பி.வி .நரசிம்ம ராவ் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி 1991இல் அமைந்த உடன் வர்த்தக அமைச்சராக திரு.ப. சிதம்பரம் பொறுப்பேற்ற பிறகு சேலத்தில் நடைபெற்ற சிறு தொழில் முனைவோர் மாநாட்டில் புதிய பொருளாதார கொள்கை குறித்து அனைவரும் எளிதாக புரிந்து கொள்கிற வகையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:
நடந்து வந்த பாதை
நாற்பதாண்டு காலமாகத் தொடர்ந்து நாம் ஒரு பாதையிலே நடந்து வந்தோம். இந்திய நாடு தொழிற்துறையில் முன்னேற வேண்டுமானால் முதன்மைப் பொறுப்பை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது.
நாம் சுதந்திரம் பெற்றவுடன் நமது தலைவர்கள் பொதுத்துறையில் அதிக கவனம் செலுத்தியது சரியான முடிவுதான். அன்று இந்திய நாட்டிலே முதலீடு செய்வதற்குத் தொழில் முனைவோர் கிடையாது. அன்று தொழிலை நிர்வகிக்கச் சரியான நிர்வாகிகள் கிடையாது. குறிப்பிட்ட துறைகளில் தேர்ச்சிப் பெற்ற தொழிலாளர் வர்க்கமும் கிடையாது. உலகத்தின் தலைசிறந்த தொழில் நுட்ப அறிவு நமக்குக் கிடைத்திராத நேரம். உலகச் சந்தைக்குள்ளே புகுந்து அதை நம் வசப்படுத்தக் கூடிய சக்தி நமக்குக் கிடையாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தொழில் துறையில் முன்னேற வேண்டுமெனும் நேரடிப் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும் என்ற கொள்கையை நமது தலைவர்கள் வகுத்தார்கள். எனவே, நமது தலைவர்கள் தேர்ந்தெடுத்த பாதையும் நடந்து வந்த பாதையும் சரியானதுதான் என்றே சொல்ல வேண்டும். அதிலே எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
நாற்பதாண்டு காலமாக ஒரு பாதையிலே நடந்து வந்தபோது, அந்தப் பாதைக்கேற்ற சில அரண்கள், சில பாதுகாப்புகளை நம் தலைவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.
குறிப்பாக 1990-91 இல் அதிகபட்ச சுங்க வரி 300 சதவிகிதமாக இருந்தது. 100 டாலருக்கு ஒரு பொருளை அந்நிய நாட்டிலே வாங்கினால், அதனை இந்தியாவுக்குக் கொண்டு வரும்போது அதிகபட்ச சுங்க வரி 300 டாலர் செலுத்த வேண்டியிருந்தது. அதனால் அந்தப் பொருளின் விலை இந்தியாவிலே 400 டாலர் ஆகியது.
சோவியத் நாட்டின் வீழ்ச்சி
இச்சூழ்நிலையில் இந்தியாவின் உற்ற நண்பனாக விளங்கிய சோவியத் நாடு 11 சுதந்திர நாடுகளாகச் சிதறியது. இது இந்தியாவையும் தமது பொருளாதாரத்தையும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கியது.
1990-1991 இல் சோவியத் நாட்டுடன் நமது ஏற்றுமதி ரூ.5,266 கோடியாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சோவியத் நாட்டின் வீழ்ச்சி நமது சிந்தனையிலும், செயலிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டியது.
புதிய பொருளாதாரக் கொள்கை
புதிய பொருளாதாரக் கொள்கை ஏழை எளிய மக்களைப் புறக்கணிப்பது என்று அர்த்தம் அல்ல. புதிய பொருளாதாரக் கொள்கை என்பது பொருளாதாரத்தைப் பலமடையச் செய்வதுதான். இக்கொள்கை சுயசார்பை அதிகரிக்குமே ஒழிய குறைக்காது. மனித வாழ்க்கையை மேம்படுத்துமே ஒழிய மனித வளத்தைக் குறைக்காது. போட்டியின் மூலமாகத் திறமையை அதிகரிக்குமேயொழிய, திறமையைக் குறைத்து விடாது. புதிய பொருளாதாரக் கொள்கை மனிதர்களுக்குச் சுதந்திரம் அளிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. தொழில் செய்வதற்கு, வர்த்தகம் செய்வதற்கு, ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு, வாங்குவதற்கு, விற்பதற்கு, உற்பத்தி செய்வதற்கு, விலை நிர்ணயம் செய்வதற்கு, மனிதர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தச் சுதந்திரத்தைப் பறித்து டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்திடம் கொடுத்திருந்தோம். தொழில் நுட்ப அறிவோ, வியாபார உத்திகளோ தெரியாத அதிகார வர்க்கத்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தோம்.
எதையும் அரசுதான் முடிவு செய்யும், எல்லாவற்றையும் அரசுதான் தீர்மானிக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது நமது பொருளாதாரத்தையும் வளர்ச்சியும் வெகுவாகப் பாதித்துவிட்டது. அரசு வழிநடத்துகிற பொருளாதாரம் State Controlled Economy என்பது உலகத்தின் பல நாடுகளில் தோல்வியடைந்து விட்டது. தற்போது உலகத்தில் இரண்டு நாடுகளில்தான் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஒன்று, வடகொரியா மற்றொன்று, கியூபா. இந்த இரண்டு நாடுகளும் பஞ்சத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக் கின்றன. இந்த நாடுகளின் ஆதர்ச சக்திகளாக விளங்கிக் கொண்டிருந்த ரஷ்யா இவற்றை முற்றிலும் கைவிட்டு விட்டது. கிழக்கு ஐரோப்பாவிலும் விட்டுவிட்டார்கள். ஏன்? சீனாவில்கூட புதிய பொருளாதாரக் கொள்கையை, தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
ஏற்றுமதி – இறக்குமதி
புதிய பொருளாதாரக் கொள்கையில் ஏற்றுமதி – இறக்குமதி தாராளமாக இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏற்றுமதி நல்லது. ஆனால் இறக்குமதி தவறு என்பது ஒரு தவறான அணுகுமுறையாகும். நம்முடைய ஏற்றுமதி, வெளிநாடுகளுக்கு இறக்குமதியாகிறது. நமக்கு ஏற்றுமதி நல்லது. நமக்கு இறக்குமதி வேண்டாம் என்பதுபோல், வெளிநாடுகளும் இதைச் சொன்னால் என்னாவது? உலகத்தில் உள்ள 140 நாடுகளும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவறு என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? எனவே, ஏற்றுமதியும், இறக்குமதியும் கைகோத்துப் போக வேண்டியவையாகும். ஏற்றுமதி செய்ய விரும்பும் நாடு, இறக்குமதியை அனுமதிக்க வேண்டும். அவர்கள் பொருளை நாம் வாங்கினால்தான் நம்முடைய பொருளை அவர்கள் வாங்குவார்கள்.
அமெரிக்காவில், ஐரோப்பாவில், ஜப்பானில் உற்பத்தியாகிற பொருள்களை இந்தியா வாங்காது என்றால், நம்முடைய பொருள்களை மற்றவர்கள் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் என்ன ஏமாளிகளா?
இன்றைக்கு ஏற்றுமதி – இறக்குமதிகளைத் தாராள மயமாக்கிய பிறகு உலகத்தில் ஏராளமான நாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அதற்குச் சிறந்த உதாரணங்கள் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைக் கண்கூடாகப் பார்க்கலாம். ஏற்றுமதி – இறக்குமதியைத் திறந்துவிட்டதின் காரணமாக அந்த நாடுகள் எல்லாம் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு கூடாது, இறக்குமதிக்குக் கட்டுப்பாடு கூடாது என்பதே நமது இறுதி லட்சியம் ஆகும். அதிலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக கோதுமையை, அரிசியை, பருத்தியைத் தாராளமாக ஏற்றுமதி செய்ய முடியாது. ஏனெனில் நம் நாட்டு மக்களுக்கு அவை முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
ஆகவே, எல்லாவற்றையும் தாராளமாக ஒரே நாளில் ஏற்றுமதி செய்து விடவும் கூடாது. ஆனால் இறுதி லட்சியம், எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டுமென்பதுதான். இப்போது இறக்குமதியைத் தளர்த்தியிருக்கிறோம். வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் இப்போதெல்லாம் எதுவும் கொண்டு வருவதில்லை. முன்பு பர்மா பஜாரில் கிடைத்தது. இப்போது எல்லா இடத்திலேயும் கிடைக்கிறது. குறைந்த விலையில் பல பொருள்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. எல்லாமே இங்குக் கிடைப்பதால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எதையும் இப்போது கொண்டு வருவதில்லை. இது திறந்த பொருளாதாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
உலகம் சுருங்கி விட்டது
புதிய பொருளாதாரக் கொள்கையினால் உலகம் இன்னும் சுருங்கிவிட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது. சுருங்கி வரும் உலகத்தில் எல்லைகளுக்கு இடமிருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் தடையாகிவிடமுடியாது. என்னுடைய நாட்டுக்குள்ளே அன்னிய நாட்டின் முதலீடு வரக்கூடாது, தொழில் நுட்பம் வரக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கொள்கை அல்ல. முதலீடுகள், தொழில் நுட்பங்களுக்கு எல்லைகள் கிடையாது.
டயோட்டாவும் அம்பாசிடரும்
50 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் இருந்த தலைசிறந்த மோட்டார் கம்பெனி ஒரே ஆண்டில் இரு நாடுகளுக்குத் தன்னுடைய தொழில் நுட்பத்தை அளித்தது. ஒன்று ஜப்பான் நாடு. அதைப் பெற்றுக் கொண்டவர் பெயர் டயோட்டா. மற்றொன்று இந்தியா. பெற்று கொண்டவர் பெயர் பிர்லா. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே தொழில் நுட்பத்தைப் பெற்றுக் கொண்டு ஜப்பான் நாட்டிலே உற்பத்தியாகிற டயோட்டா கார்தான் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தொழில் நுட்பம் வரக்கூடாது என்ற அரணை எழுப்பிக் கொண்ட இந்தியா உற்பத்திச் செய்து கொண்டிருக்கும் கார் தான் இந்திய மக்கள் அதிகமாக விரும்பிப் பயன்படுத்துகிற ‘அம்பாசிடர்’ கார்.
ஒரே தொழில்நுட்பம் 50 ஆண்டுகளில் இன்னொரு நாட்டை எவவளவு வளமாக்கியிருக்கிறது. இன்னொரு நாட்டிலே அதே தொழில் நுட்பம் வளராமல் சிதைந்து போய்விட்டது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உலக முதலீடு இந்தியாவுக்கு வேண்டும். உலக தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வேண்டும்.
Very clear exposition of the new economic policies by Shri P Chidambaram Sir.
Thank you!
இவர் அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்ட மேதாவி…