தேசிய முரசு மாதம் இரு முறை இதழில் 2013, மார்ச்சில் வெளிவந்த கட்டுரையை திரு ப.சிதம்பரம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் வெளியிடுகிறோம் .
– ஆ. கோபண்ணா
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள், அல்லது அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, அவர் செயல்பாடு சார்ந்த மனிதர்; புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்; கூர்மையான சிந்தனை கொண்ட சிந்தனையாளர். இந்தியாவின் நிதி அமைச்சர் என்ற வகையில் இந்தியாவுக்காக அவர் தாக்கல் செய்த பட்ஜெட்களைப் படித்தவர்கள், அதில் இடம்பெற்றுள்ள அவரது கருத்து செழுமையை உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டாவது முறையாக அவர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிலையில் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் இதற்கு முன்பு அவர் தாக்கல் செய்த 5 நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த கருத்து செழுமைகளை தேசிய முரசு வாசகர்களுக்காக முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனை
நிதிநிலை அறிக்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறையைத் தகர்த்தது, 1991ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைதான். ஆனால், அதன்பின் நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த ப.சிதம்பரம் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை யிலும் தமது தனி முத்திரையைப் பதித்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது மிகவும் துணிச்சலான நிதிநிலை அறிக்கை, பத்து மாதங்களே நீடித்த தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
‘கனவு பட்ஜெட்’ என்று போற்றப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையில், தனி நபர்கள் மற்றும் கம்பெனிகளுக்கான அதிகபட்ச வருமான வரி விகிதத்தை 40 விழுக்காட்டிலிருந்து முறையே தனிநபர்களுக்கு 30 விழுக்காடாகவும், கம்பெனிகளுக்கு 35 விழுக்காடாகவும் குறைத்தார். இதன்மூலம் இந்தியாவின் அதிகபட்ச வருமான வரி உலகின் பல வளரும் நாடுகளின் வரி அளவை விடவும், வரி சீர்திருத்தக் குழு பரிந்துரைத்த 40 விழுக்காடு என்ற அளவை விடவும் மிகவும் குறைந்த அளவுக்கு வந்தது.
“இத்தகைய முடிவை எடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குத் துணிச்சல் தேவை. .அந்தத் துணிச்சலை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திரட்டிக் கொண்டுதான் இத்தகைய முடிவை எடுத்தார்” என்று பல்வேறு மத்திய அரசு குழுக்களில் பணியாற்றிய நிதி வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். அவர் தற்போது அரசு பொறுப்பில் இருப்பதாலும், இதுபோன்ற விஷயங்களில் கருத்துக் கூற அவருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும் தமது பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.
“வரியின் அளவு குறைவாகவும், மக்களின் பொறுப்புடைமை அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில் பொறுப்புடன் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது சிதம்பரத்தின் எண்ணமாகும். அது சரியானது என்பதை சிதம்பரம் நிரூபித்தார்” என்றும் அந்த வல்லுநர் தெரிவித்தார். ப.சிதம்பரத்தால் உச்ச அளவு வரி குறைப்பு செய்யப்பட்டதற்கு, முந்தைய ஆண்டான 1995 -96இல் நிகர வரி வருமானத்தில் தனிநபர் வருமான வரியின் அளவு வெறும் 14 விழுகாடாக இருந்ததுதான். ஆனால், 2011-12ஆம் ஆண்டில் இது 18.5 விழுக்காடாக அதிகரித்தது. அதேபோல் வேளாண் கடன் அளவை அடுத்த மூன்றாண்டுகளில் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கடந்த 2004ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். ஆனால், அந்த இலக்கு அடுத்த இரண்டே ஆண்டுகளில் சாதிக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பதவியிலிருந்து உள்துறை அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் மாற்றப்பட்டபோது , இந்தியாவில் சுமார் பாதிபேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடனின் அளவு, 2004ஆம் ஆண்டின் அளவான ரூ.பாய் 60 ஆயிரம் கோடி என்ற அளவிலிருந்து மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து ரூபாய் 2 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருந்தது.
2009ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், `இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அமைப்பு சார்ந்த கடன் பெரிய அளவில் கிடைப்பதில்லை என்ற போதிலும், வேளாண் கடன் அளவு அதிகரிக்கப்பட்டதன் பயனாக வேளாண் உற்பத்தியில் சாதகமான தாக்கம் ஏற்படிருக்கிறது. அவர் தமது பணியை உண்மையாக எடுத்துக்கொண்டு நிறைவேற்றியிருக்கிறார்’ என்று தில்லியைச் சேர்ந்த பொருளாதார ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பான Oxus Investments என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சுர்ஜித் பல்லா தெரிவித்தார்.
“தாம் செய்யவேண்டிய பணிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அதை எட்டுவதற்காகத் திட்டமிட்டு பணியாற்றுவதுதான் சிதம்பரத்தின் வழக்கம். இப்போதைய நிலையில் நிதிநிலையை ஒழுங்குபடுத்துவதுதான் முதன்மைப் பணியாகும். அதைத் தான் நிதிநிலை அறிக்கையில் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்” என்று சுர்ஜித் பல்லா கூறினார்.

எப்போதும் சீர்திருத்தவாதி!
தேவைப்படும்போது ஜனரஞ்சகவாதி!
நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறந்த சீர்திருத்தவாதி, சந்தைகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும், தேவைப்படும்போது மக்களைக் கவரும் ஜனரஞ்சக அறிவிப்பை வெளியிடத் தயங்காதவர். அதற்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதற்காகப் பின்வாங்காதவர.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2008ஆம் ஆண்டில் வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை சிதம்பரம் அறிவித்தார். இதனால் 3.68 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். அதேநேரத்தில் அரசுக்கு ரூ.பாய் 65 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டது. அதே ஆண்டில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2006ஆம் ஆண்டிலிருந்து அளிக்கவேண்டிய ஊதிய நிலுவை ரூபாய் 27 ஆயிரம் கோடி உட்பட மொத்தம் ரூ.பாய் 47 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்பட்டது.
அதேபோல் 2005 முதல் 2009 வரையிலான காலத்தில், கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 150 மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். இத்திட்டத்தின்படி மிகக்குறைந்த பணமே பயனாளிகளைச் சென்றடைகிறது; பெயரளவுக்கே சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகளில் தெரிய வந்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இத்திட்டத்தை சிதம்பரம் விரிவுபடுத்தினார்.
இது பற்றிக் கருத்து தெரிவித்த மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர், “சிதம்பரம் நடைமுறைக்கும் காலச் சூழலுக்கும் ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளக் கூடிய யதார்த்தவாதி. ஒரு கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் அல்ல. ஒரு விஷயம் தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கவையாக இருக்கும் பட்சத்தில் அவற்றை ஏற்று, தமது முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர்” என்று கூறினார். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருக்குக்கீழ் பணியாற்றிய இவரும் தமது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
தில்லியைச் சேர்ந்த பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பொறுப்புடைமைக்கான மையத்தின் செயல் இயக்குநரான சுப்ரத் தாஸ், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் சிதம்பரம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவிய ஒருங்கிணைப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தன” என்று மனம் திறந்து பாராட்டினார்.
2004 முதல் 2009 வரையிலான காலத்தில் அரசின் வருவாய் 1.76 மடங்கு மட்டுமே அதிகரித்து, ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக அதிகரித்திருந்த நிலையில், சமூக சேவை திடங்களுக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 2.75 மடங்கு அதிகரித்து, ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய இந்த இரு சலுகைத் திட்டங்கள் குறித்து விளக்கிய , அந்த ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கருத்து தெரிவிக்கும்போது, “இந்த நடவடிகைகளால் ஏற்படும் நிதி தாக்கம் குறித்து ஆராய்ந்துதான் சிதம்பரம் இந்த முடிவை எடுத்தார்” என்று கூறினார். “அந்த நேரத்தில் இந்தச் செலவைப் பொருளாதார நிபுணர் தாக்குபிடிக்கும் நிலையில் மத்திய அரசு இருந்தது. அந்த நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தது. வருவாயும் வளமாக இருந்தது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.
அப்போது இருந்தது வேறு உலகம் என்று கூறியதன் மூலம் அந்தக் கருத்தை சுர்ஜித் பல்லாவும் வழி மொழிந்தார். “அந்த நேரத்தில் உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால், விரிவாக்க நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்தும்படி உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தற்போதைய சூழலில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், கடன் தரக் குறியீடு குறைக்கப்படுவதைத் தடுத்தல் ஆகிய இரு முக்கிய பணிகள் தம்முன் இருப்பதை சிதம்பரம் உணர்ந்திருக்கிறார்” என்று பல்லா கூறினார்.
சிதம்பரத்துடன் இணைந்து பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த அதிகாரி, 2008ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட சலுகைத் திட்டங்கள் குறித்து மேலும் விளக்கியபோது, “2008ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஜனரஞ்சகத் திட்டங்களால் நினைத்துப் பார்க்காத சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இந்தியப் பொருளாதாரமும் முடங்கவிருந்த நிலையில், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஊதிய நிலுவைத் தொகையை கார் வாங்கவும், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கவும் செலவிட்டதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. வேளாண் கடன் தள்ளுபடியும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருவகையில் உதவியது. கடன் தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு பனம் வழங்கியது. வராத கடன்களுக்குப் பதிலாக மத்திய அரசு பணம் வழங்கியதால், அதைக் கொண்டு வங்கிகளால் கூடுதலாகக் கடன் வழங்க முடிந்தது” என்று கூறினார். அந்த வகையில் ஜனரஞ்சகத்தைக் கூட சீர்திருத்தமாக மாற்றுவதில் வல்லவர் ப.சிதம்பரம் தான்!
வலிக்காமல் வரி விதிப்பு!
மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் வரி வளையத்திற்குள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலானவர்களை அழைத்துக்கொண்டு வருகிறார். இதை வரி செலுத்துவோருக்குத் தெரியாமலும், வலிக்காமலும் செய்து வருகிறார் என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தின் இந்த முயற்சி கடந்த 1997ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் தான் ஆறில் இரண்டு திட்டத்தை அவர் அறிமுகம் செய்தார். அதன்படி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு பொருள்களில் ஏதேனும் இரண்டு பொருள்களை எவரேனும் வைத்திருந்தால், அவர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார். அதுமட்டுமன்றி மேலும் பல வழிகளில் வரி வருவாயை அதிகரிக்கவேண்டும் என்று சிதம்பரம் கருதினார். இதற்காக 2004ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்கும்போது 58 பொருள்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு வந்த சேவை வரியை 2009ஆம் ஆண்டு அந்த பதவியிலிருந்து விலகும்போது 110ஆக அதிகரித்திருந்தார்.
புதிய வரியாளரைச் சேர்க்க முடியாவிட்டாலும் , ஏற்கெனவே இருப்பவர் மீது கூடுதல் வரி விதிப்பதும் அவரது வழக்கம் ஆகும். அந்த வகையில் தான் 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தையின் அனைத்து பரிமாற்றங்களுக்கும் 0.15 சதவிகித பங்கு பரிமாற்ற வரியை சிதம்பரம் விதித்தார். இந்த வரி அறிமுகம் செய்யப்பட்டபோது , ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டது. இது சிறப்பான முறையில் வரி வசூலிப்பதற்கான தத்துவம் என்று அப்போதே பலரும் பாராட்டினார்கள். `இது வருவாய் ஆதாரத்திலேயே வரி விதிக்கும் திட்டம்’ என்று பலரும் கூறினார்கள்.
இது பற்றி விளக்கிய மூத்த வரித் துறை அதிகாரி, “பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரில் பலர் வரி செலுத்த மாட்டார்கள். ஆனால், பங்கு பரிமாற்ற வரியை மிகவும் எளிதாக வசூலித்துவிட முடியும். இந்த வகையான வரியைப் பிற சந்தைகளுக்கும் விதிக்கலாம்” என்று கூறினார். அதேபோல் வரி தகவல் வலையமைப்பு, வரி ஏய்போரைக் கண்டுபிடிப்பதற்காக முந்தைய வாஜ்பாய் அரசால் கொண்டுவரப்பட்டது என்ற போதிலும், அதை சிதம்பரம் தான் வலுப்படுத்தினார். “வரி தகவல் வலையமைப்பை வலுப்படுத்த முடிவு செய்த சிதம்பரம், ஒவ்வொரு நகரமாக அதைக் கட்டி எழுப்பினார்.அதன்மூலம் ஏராளமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. பொருள்கள்மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரும்போது, இந்த வலையமைப்பு முழுமையானதாகிவிடும் அதன் பின்னர், கூடுதலாக வருமானம் ஈட்டும் எவரும் தங்களின் வருவாயைக் குறைத்துக்காட்ட முடியாது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மகிழ்ச்சியான முதலீட்டாளர்கள்
பங்குச் சந்தைதாரர்கள்!
ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிரணாப் முகர்ஜி தமது நிதிநிலை அறிக்கையை எவ்வாறு மதிப்பிடுவார் என்றால் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிரந்தர தொல்லையாகத் திகழ்ந்த மம்தா பாணர்ஜி, நிதிநிலை அறிக்கை குறித்து என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொண்டு, அவர் மகிழ்ச்சியடைந்து விட்டால், நல்ல பட்ஜெட் என்று நினைத்துக் கொள்வார். சிதம்பரத்தைப் பொருத்தவரை தொலைக்காட்சித் திரைகளின் அடிப்பகுதியில் ஓடும் பங்கு ச் சந்தை நிலவரம் குறித்த பச்சை , சிவப்பு குறியீடுகள் தான் பட்ஜெட் பற்றிய மதிப்பீடு ஆகும். தமது பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்தால் தமது பட்ஜெட், சிறந்த பட்ஜெட் என்பது சிதம்பரத்தின் மதிப்பீடு ஆகும். “இந்தியப் பொருளாதாரம் வலிமையாகத் திகழ ஆரோக்கியமான நிதித்துறை அவசியம் என்பதை சிதம்பரம் நன்றாக உணர்ந்தவர். அவர் தாக்கல் செய்த பெரும்பாலான நிதி நிலை அறிக்கைகளில் பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கென ஏதாவது ஒரு அறிவிப்பு இருக்கும்” என்று மூத்த பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்தார். உதாரணமாக கடந்த 2004ஆம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளைக் கவர்ச்சிகரமானதாக மாற்றும் நோக்குடன் முதலீட்டாளர்களின் லாபம் மீதான வரிகளைக் குறைத்தார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நீண்டகால முதலீட்டு லாப வரி ரத்து செய்யப்பட்டதுடன், குறுகியகால முதலீட்டு லாப வரி 20 சதவிகிதத்திலிருந்து பாதியாக, அதாவது 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.
வணிகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், உள்ளூர் சந்தைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மிகவும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். தாம் தாக்கல் செய்த பல்வேறு பட்ஜெட்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் செயல்பாடுகளை மிகவும் எளிதாக்கினார். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பதிவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கியதுடன், அவர்கள் பங்குகளை னநசiஎயவநளஇல் வணிகம் செய்யவும், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவும் வசதியாக சில வரையறை மாற்றங்களைச் செய்தார்.
சிதம்பரம் இயல்பாகவே தமக்கென நல்ல அணியை ஏற்படுத்திக் கொள்பவர் அல்ல என்ற போதிலும், தமது அமைச்சகத்தில் வலிமையான மூலதனச் சந்தை அணியை ஏற்படுத்தினார். சிதம்பரம் எப்போதுமே நல்ல அதிகாரிகளைத்தான் தேடுவாரே தவிர, திறமையான அதிகாரியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகப் போராட மாட்டார். 2008ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடன் இருந்தவர்களுள் இருவர் மட்டுமே தற்போது சிதம்பரத்துடன் இருக்கிறார்கள் என்ற போதிலும், மிகச்சிறப்பான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
வரியும், கூடுதல் கட்டணமும்
மத்திய நிதி அமைச்சர் என்ற வகையில் வருமான வரி விகிதத்தை சிதம்பரம் குறைத்தபோதிலும், அதை நம்பி தொடங்கப்பட்ட திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வரிகள் மீது வரி விதிக்கும் நடைமுறையை சிதம்பரம் கடைப்பிடித்து வந்தார். 2004ஆம் ஆண்டில் அனைத்து வரிகள் மீதும் 2 சதவிகித வரி விதித்த சிதம்பரம், அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கினார். வரி, கூடுதல் கட்டணம் ஆகியவை நுகர்வு சம்பந்தப்பட்டவைஆகும். இதனால் சிறிய அளவில் வரி செலுத்துபவர்களுக்குப் பெரிய அளவில் சுமை ஏற்படாது. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் மிகப்பெரியதாகும்.2011-12ஆம் ஆண்டில் கல்விக்காக வரிகள் மீது விதிக்கப்படும் வரி மூலமாக ரூபாய் 23 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. அதேபோல் பெரு நிறுவன வரி மீதான கூடுதல் கட்டணம் மூலம் ரூபாய் 13 ஆயிரத்து 658 கோடி வருமானம் கிடைத்தது. பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தபோதிலும் , அத்தகைய வரி எதையும் அவர் விதிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்கிய பொருளாதார வல்லுநர் சுர்ஜித் பல்லா, “இதுபோன்ற தவறுகளை சிதம்பரம் ஒருபோதும் செய்ய மாட்டார். ஏனெனில் அவர் ஒரு துடிப்பான வழக்கறிஞர்” என்றார்.
( நன்றி: எகனாமிக்ஸ் டைம்ஸ், 17 ஜனவரி 2013)