ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, கொரோனாவில் இந்தியா சிக்கித் தவிக்கும்போது மயில்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட பொது முடக்க அறிவிப்பின் போது, மகாபாரத போர் 18 நாட்கள் நடந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என குறிப்பிட்டார். 166 நாட்களுக்குப் பிறகு, ஒட்டுமொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக மகாபாரத போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் நிலையில், மயில்களுக்கு உணவு கொடுப்பது போல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
கொரோனாவுடன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடவடிக்கைதான் காணாமல் போய்விட்டது. கொரோனாவை தோற்கடிக்கும் போராட்டத்தில், செயலிழந்து விட்டதையும், முற்றிலும் திறமையற்ற அரசு என்பதையும் மோடி அரசு நிரூபித்துள்ளது. மிக மோசமான தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மக்களைக் காக்கவும், அவர்களை தற்காத்துக் கொள்ள அனுமதிக்கவும் பாஜக அரசு தவறிவிட்டது.
உலக அளவில் கொரோனாவின் தலைநகரமாக இந்தியா தற்போது மாறியுள்ளது. உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் பிரேசிலில் இதில் பாதி எண்ணிக்கையில் கூட யாரும் பாதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதற்கான 6 உண்மைகளை ஆராய்வோம்:
1. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் – உலகிலேயே இந்தியா முதலிடம்(90,802)
2. தினசரி கொரோனா உயிரிழப்புகள் – உலகிலேயே இந்தியா முதலிடம் (தினமும் 1,016 பேர் உயிரிழப்பு)
3. கொரோனா பாதிப்பு இரட்டிப்பு-உலகிலேயே இந்தியா முதலிடம் (29 நாட்கள்)
4. மொத்த கொரோனா பாதிப்புகள்-உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் (42 லட்சத்து 4 ஆயிரத்து 614 பேர் பாதிப்பு)
5. மொத்தமாக கொரோனாவால் தீவிர பாதிப்பு – உலகிலேயே இந்தியா இரண்டாவது இடம் – (8 லட்சத்து 82 ஆயிரத்து 542)
6. மொத்த கொரோனா உயிரிழப்பு – உலகிலேயே இந்தியா 3 ஆவது இடம் (71 ஆயிரத்து 642 பேர்)
கொரோனா பாதிப்பில் அப்பட்டமான உண்மை:
- 0 முதல் 1 லட்சம் கொரோனா பாதிப்பு = 110 நாட்களில்.
- 1 முதல் 10 லட்சம் கொரோனா பாதிப்பு = 59 நாட்களில்.
- 10 முதல் 20 லட்சம் கொரோனா பாதிப்பு = 21 நாட்களில்.
- 20 முதல் 30 லட்சம் கொரோனா பாதிப்புகள் = 16 நாட்களில்.
- 30 முதல் 40 லட்சம் கொரோனா பாதிப்பு = 13 நாட்களில்
29 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது – 20 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்வு.
கொரோனா பரவல் குறித்து நிபுணர்களின் அபாய எச்சரிக்கை:
- கொரோனா பரவல் தொடர்ந்து அதே வேகத்தில் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- நவம்பர் 30 ஆம் தேதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும்.
- டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 40 லட்சத்தை எட்டும்.
உயிரிழப்புகள் 1 லட்சத்து 75 ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.
கொரோனா தடுப்புகளில் மொத்த இயலாமை மற்றும் மோசமான தோல்வி:
கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதியிலிருந்தே, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி அவர்களும் கொரோனா பாதிப்பு குறித்து அரசை எச்சரித்து வந்துள்ளனர். ஆனால், மோடி அரசு இதனை கேலி செய்ததோடு, கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டது.
கொரோனா கால வரிசையில் 8 அம்சங்களை ஆராய்வோம்:
- 2020 பிப்ரவரி 12 = கவலைப்படும் அளவுக்கு நம் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மோடி அரசு கூறியது. ராகுல் காந்தியின் எச்சரிக்கையை அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.
- 2020 பிப்ரவரி 24 = 1 லட்சம் பேரை திரட்டி அகமதாபாத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- 2020 பிப்ரவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை = ராகுல் காந்தி தொடர்ந்து எச்சரித்ததை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நிராகரித்தார். கொரோனா குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
- 2020 மார்ச் 24 = தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- 2020 ஏப்ரல் 25 = நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் அரசின் கொரோனா நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் வி.கே. பவுல் அளித்த அறிக்கையில், 2020 மே 15 ஆம் தேதியில் புதிதாக கொரோனா பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
- 2020 மே 4 = கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இனி அதிகரிக்காது என்றும் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளரும் இணைச் செயலாளருமான லாவ் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 2020 ஜுன் 27 = நாட்டு மக்கள் மத்திய உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கையில் உண்மை இல்லை என்றும், மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
- 2020 செப்டம்பர் 6 = கொரோனா பாதிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது இந்தியா. தினமும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதிலும், கொரோனா உயிரிழப்பிலும் உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
பொது முடக்கம் அறிவித்து தோல்வி கண்ட மோடி தலைமையும் துக்ளக் ராஜ்யமும்:
திட்டமிடாமலும், ஆலோசிக்காமலும் 3 மணி நேரத்துக்கு முன்பு பிரதமர் அறிவித்த பொது முடக்கத்தால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது. அதோடு, நாட்டின் பொருளாதாரமும் அழிந்துபோனது. மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுபோன்று துக்ளக் ஆட்சி நடத்தியது யாருமில்லை என்ற அளவுக்கு, மோடி தலைமை தோல்வியடைந்துள்ளது.
பொதுமுடக்கத்தாலும், துக்ளக் ராஜ்யத்தாலும் ஏற்பட்ட ஒரு டஜன் பாதிப்புகள்
- திடீர் பொது முடக்கத்தால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியோடும், குடிக்க தண்ணீர் இன்றி தாகத்தோடும் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நடந்து சென்றவர்களில் 150 க்கும் மேற்பட்டவர்கள், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
- எந்த மாநிலத்திடமும், முதலமைச்சரிடமும் ஆலோசிக்காமல் பொது முடக்கத்தை அமல்படுத்தியதன் மூலம், கூட்டாட்சிக்கு கொள்ளி வைத்துள்ளார் மோடி.
- நிபுணர்களும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எச்சரித்தும், கொரோனா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டிய நேரத்தில், அது குறித்து கண்டுகொள்ளாமல் கிரிமினல் தனத்தோடு செயல்பட்டனர். பொது முடக்கம் இருந்தும், கொரோனா தொடர்புகளை தேடவும் தவறிவிட்டனர்.
- வெற்றிகரமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதும், உலகிலேயே இந்தியா மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய நாடாக உள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு, நோய் தொற்றும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.
- தொலைக்காட்சி விவாதங்கள், கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றில் தான் மோடி அரசு கவனம் செலுத்தியது. ஆனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், பொருளாதாரத்தை காப்பதிலும் மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கை வெறும் பூஜ்யம்தான்.
- கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்காத நிலையிலும், கொரோனா தடுப்புக்கு உதவாத நிலையிலும், மாநில அரசுகள் தனியாக நின்று போராடுகின்றன.
- முதல்முறை பொது முடக்கம் அறிவித்த போதும், அதன்பின் 3 முறை பொது முடக்கத்தை நீட்டித்தபோதும், மாநில அரசுகளுடன் மோடி அரசு கலந்தாலோசிக்கவில்லை. அதன்பிறகு 4 முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், தொற்றைக் கட்டுப்படுத்தவோ, உயிரிழப்புகளைத் தடுக்கவோ, வேலை இழப்பு அல்லது மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை காப்பாற்றவோ, அரசிடம் எந்த கொள்கையும் இல்லை.
- பொருளாதாரத்தை இழந்தும், வியாபாரத்தை இழந்தும், தவணைகளை கட்ட முடியாமலும், வேலை இழந்தும், வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கும் மக்களை கேலி செய்யும் வகையில், இது ‘கடவுளின் செயல்’ என்று மோடி அரசு சொல்கிறது.
- மோடி அரசின் அலட்சியப் போக்கால் சிறு நகரங்கள், கிராமங்கள் வரை கொரோனா தொற்று பரவிவிட்டது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆனால், மொத்தமாக 35 சதவிகித படுக்கைகளும் 20 சதவிகித மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். இந்த நேரத்தில் தொற்று பரவல் அதிகமானால் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
- இந்தியாவில் இரண்டாவது கொரோனா தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர். சமூகப் பரவல் தொடங்கிவிட்டதாக சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலோ அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமலோ மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டுக்கு பிரதமர் மோடி அவசியம் பதில் அளிக்க வேண்டும்:
தமது தலைமை தோல்வியடைந்துவிட்டதற்கு மோடி பதில் அளிப்பாரா? கொரோனா தொற்றை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? வேகமாக பரவுவதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? கோடிக்கணக்கான மக்களுக்கு பரவுவதை அரசு எவ்வாறு தடுக்கப் போகிறது? கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்? மூழ்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை எப்படி கரை சேர்க்கப் போகிறீர்கள்?
இவற்றுக்கெல்லாம் மோடி அரசிடம் தீர்வு உள்ளதா? அல்லது கடவுள் மீது குற்றம் சாட்டப் போகிறீர்களா?