மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில், கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த கூடுதல் மதிப்பீட்டின் அடிப்படையில், பொருளாதாரம் 22.8 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையையே வெளிப்படுத்துகிறது.
தரவுகளின் உண்மை நிலவரம் இறுதியாக வெளியாகும்போது, நிலைமை இன்னும் மோசமாகும் என்று தெரிகிறது. இந்திய வரலாற்றில் பொருளாதார சூழல் இதுபோல் மோசமான நிலையில் இருந்ததில்லை.
இதுபோன்று பொருளாதாரம் சுருங்கியதை கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளை வெளியிட்டு வரும் நிலையில், மோசமான வீழ்ச்சி ஏற்படுவது இதுதான் முதல்முறை.
ஆனால், இது ஒன்றரை நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் அசாதாரணமான சூழல் என்று அரசு கூறுகிறது. ஆனால், அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரோ, கொரோனா மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கமே இதற்கு காரணம் என்கிறார்.
முன்னதாக, இந்தியாவில் இதுவரை இல்லாத பொருளாதார வீழ்ச்சியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘கடவுளின் செயல்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். வைரஸ் அனைத்து நாடுகளிலும் குறைந்துவிட்டது என்பதும், இந்தியாவின் பொருளாதார மந்தநிலையால் ஆபத்து இல்லை என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளது.
ஆனால், சமூக ஊடகங்களில் இயங்கும் பா.ஜ.க.வினரோ, ஒரு படி மேலே போய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைவிட, இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறைவாக இருப்பதாகவும், இது குறித்து போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் பதிவிடுகின்றனர். உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்துவிட்டது உண்மைதான். ஆனால், சுருங்கிப் போன பொருளாதாரத்தை ஒப்பிடும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது.
இது குறித்து பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான கட்டுரையாளர் விவேக் கவுல் கூறும்போது, ”பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இன்றி, கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்படும் பொது முடக்கம் உலகிலேயே மிகக் கடுமையானது. இது பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிவிட்டது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பிரதமர் நரேந்திர மோடி பொது முடக்கத்தை அறிவித்துவிட்டார்” என்றார்.
”பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா பரவல் முக்கிய காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்பே, பொருளாதார சரிவு இருந்தது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன. இதன் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பரவியது” என்று பொருளாதார நிபுணர்கள் குமார் தாஸ் மற்றும் ஜாய்தீப் பருவா ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜாய்தீப் பருவா கூறும்போது, ”கொரோனா தாக்குதலுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் மந்தநிலையில் இருந்தது. பொருளாதாரம் ஏற்கனவே தோல்வியுற்ற நிலையில், கொரோனாவினால் ஏற்பட்ட கூடுதல் தாக்குதலை தாங்க முடியவில்லை” என்றார்.