கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவியபின், அதனைத் தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
சீனப் படைகள் இன்னும் இந்திய எல்லைக்குள்ளேயே இருப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை உறுதி செய்தாலும், பிரதமர் மோடி ஊடுருவல் இல்லை என முரண்பட்ட தகவலை அளித்து வருகிறார்.
இதற்கிடையே, சீன செயலிகளை மோடி அரசு தடை செய்தது. சீனப் பொருட்களையும் ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என, பா.ஜ.க. வினர் போராட்டம் நடத்தினர்.
எனினும், சீனாவுடனான வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் சீனாவையே இந்தியா சார்ந்திருப்பதால், இது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
மருந்து தயாரிப்புக்கான வேதியியல் மூலக்கூறுகளை சீனாவிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. வணிக உறவை உடனே முறித்துக் கொண்டால், இத்தகைய மூலக்கூறுகளை இந்தியாவில் உடனே உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனவும் அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.
கொரோனா பாதிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவற்றால் மருத்துவத் துறையில் ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து மத்திய அறிவியல் அமைச்சக ஆலோசனை குழுவான, ‘தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில்’ ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
சீனாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, நம்மிடம் போதிய கட்டமைப்பு இல்லாத வேதியியல் தொழில்துறையை மேம்படுத்த மத்திய அரசு சிந்தித்து வருகிறது.
குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்புடன், குறைந்த செலவில், வேதியியல் பொருட்களை தயாரிப்பதற்கான கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. சீனாவிலிருந்து கிடைக்கும் விலைக்கு அதிகமாக வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தால், அதனை உற்பத்தியாளர்களால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரைப்பான் மற்றும் வேதியியல் பொருட்களின் இந்திய தயாரிப்பு விலையை விட சீன தயாரிப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஆகிய மருந்துகளைப் பொறுத்தவரை, சீனாவையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
முக்கிய மருந்துகளை தயாரிப்பதை இந்தியா நிறுத்திவிட்டது. 2008 ஆம் ஆண்டு இந்திய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி 42 சதவீதமாக இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு 20 சதவீதமாக குறைந்தது.
அஸ்கார்பிக் ஆசிட், அஸ்பார்டேம் மற்றும் ரிபாம்பிஸின், டோக்ஸிசைக்ளின், டஜோபாக்டம் ஆசிட் போன்ற மருந்துகள் தயாரிப்பை இந்தியா நிறுத்திவிட்டது.
மருந்து தயாரிப்புக்கான 67 சதவீத வேதியியல் மூலக்கூறுகளுக்கு சீனாவையே சாரந்து இருக்க வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் இத்தாலிக்கு அடுத்ததாக, சீனாவை சார்ந்திருக்கும் நாடு இந்தியாவாகும்.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.