கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அன்று இந்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உண்மையான காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஜுன் இடையில் 23.9 சதவீதமாக குறைந்துவிட்டது.
1996 ஆம் ஆண்டில் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு பொருளாதார பேரழிவு என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இந்த பொருளாதார வீழ்ச்சி, உலகில் உள்ள பெரிய அளவிலான பொருளாதாரத்தைக் கொண்ட 13 நாடுகளைவிட பெரிய அளவில் உள்ளது தெரியவந்துள்ளது.
அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சீனா மட்டுமே 3.2 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. எனினும், பொளாதார வீழ்ச்சி புள்ளிவிவரத் தகவல்களை தவிர்ப்பதற்காகவும், நயவஞ்சக நோக்கத்துடனும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.
அமைப்புசாரா துறை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகிறது. சில மதிப்பீடுகளின்படி, இது உற்பத்தியில் 45 சதவீதம் மற்றும் உழைக்கும் மக்களின் 93 சதவீத வேலை வாய்ப்பைக் கொண்டுள்ளது. தரவு சேகரிப்பு முறைகள் காலப்போக்குக்கு தக்கவாறு சந்தேகத்துக்கு இடமின்றி மேம்பட்டுள்ளன என்றாலும், அமைப்புசாரா துறையை பொறுத்தவரை, அரசின் மதிப்பீட்டில் நம்பகத்தன்மை இல்லை என்றே தெரிகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து மீள்வதற்குள், அமைப்புசாரா துறையை பொது முடக்கம் பெரிதும் பாதித்துள்ளது. கடைசி காலாண்டில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக நமக்கு சொல்லப்படுகிறது. ஆனால், இது சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மதிப்பீடு. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இவர்கள் தொழிலுக்கு மீண்டும் திரும்பினாலும், மக்களிடம் வாங்கும் திறன் இல்லாததால் குறைந்த அளவிலான வருவாயை மட்டுமே இவர்கள் ஈட்டுகிறார்கள்.
நல்ல மழைக்காலம் என்பதால், விவசாயத்துறை மட்டுமே பாதிப்படையவில்லை. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜுன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் விவசாயத்துறையின் வளர்ச்சி 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், இந்த காலக்கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயத்துறையின் வளர்ச்சி உதவாது.
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி கொரோனா பரவலுக்குப் பிறகு ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மாறிவரும் நிலையில், 2017 காலாண்டிலிருந்தே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான காலாண்டு விகிதம் குறைந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் 7.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் 3.3 சதவீதமாக குறைந்துவிட்டது.
மோசமான நடவடிக்கைகளால் மத்திய அரசே பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கை முதல் அதிர்ச்சியைக் கொடுத்தது. இரண்டாவதாக, 2017 ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தியது இரண்டாவது அதிர்ச்சி. முதல் அதிர்ச்சியில் இருந்து பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. இப்படியே தொடர்ந்து கொண்டு போன பொருளாதார நிலை, கொரோனா பரவலுக்கு பிந்தைய பொது முடக்கத்தால் கோமா நிலையை அடைந்துவிட்டது.
எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியுமா? எதார்த்தத்தில் முடியும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை. காரணம் என்னவென்றால், ஏழைகளின் பொருளாதார பாதிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. ஆனால், ஆட்சியாளர்களின் நெருக்கமான தொழிலதிபர்கள் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி உலகிலேயே 4 ஆவது பணக்காரராக உயர்ந்திருக்கிறார். அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே உயர்ந்து கொண்டே போகிறார்கள்.
பொது முடக்கத்துக்குப் பின் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது விபத்திலும் இயற்கையாகவும் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் இல்லாததால், இழப்பீடு வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
ஏழைகள் என்ன செய்வது? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், ”எல்லாம் கடவுள் செயல்” என்று கூறிவிட்டு அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.