சுதந்திரத்துக்குப் பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பெருமளவு குறையும் என, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அச்சம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த டிஜிட்டல் புரட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, ”உலக அளவிலான ஜிடிபி விகிதம் குறைந்துள்ளது. உலகளாவிய வர்த்தகமும் சுருங்கிவிட்டது. உலகளாவிய போக்குவரத்து ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. இதனால், உலகளாவிய ஜிடிபி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறையலாம். இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக சுருங்கலாம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக மார்ச் 24 நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்த நாளில் இருந்தே, கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக் கொண்டார்கள் என்பது 3 விசயங்களில் இருந்து எனக்கு தெரிகிறது. கொரோனாவுக்கு மருந்து இல்லை, கொரோனா வைரஸை குணப்படுத்த முடியாது, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடியாது என்ற 3 விசயங்களை தெரிந்து கொண்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து முதலாவதாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற நாடுகளில் புதிய மருந்து கண்டுபிடித்து, அதனை பயன்படுத்த 9 மாதங்கள் ஆகலாம். தினமும் 1 கோடி பேருக்கு நாம் மருந்து கொடுக்க முடியும். அதன்படி நாட்டில் உள்ள அனைவருக்கும் மருந்து கொடுக்க 140 நாட்கள் ஆகும். அதாவது, கொரோனாவை தடுக்க நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை பொருளாதார நடவடிக்கைகளை நாம் நிறுத்தி வைக்க முடியாது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 1 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
எனவே, இயல்பான நிலையை வரையறுப்பதில் புத்திசாலித்தனம் அவசியம். இந்த இயல்பு நிலை, இந்த பூமியில் சுழன்று கொண்டு இருக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துக் கொண்டே நம் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய அனுமதிக்கும். தற்போதைய நிலையை சமாளிக்க புதிய முறையை மேம்படுத்த வேண்டும். சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி அனைவருக்கும் மருந்து கிடைக்கச் செய்ய வேண்டும். அதோடு, புதிய வைரஸ் உருவானால், அதனை குணப்படுத்த மருந்து தயாரிப்பதற்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும்” என்றார்.