அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காணொலி காட்சி வாயிலாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கிறது. பொருளாதார சீரழிவு நிலையை நோக்கி இந்தியாவை பிரதமர் மோடி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, பொதுமுடக்கம் ஆகியவை பெரிய அடி மட்டுமல்ல, பேரழிவு தாக்குதலும் கூட.
பொருளாதார இருள் நம்மை சூழ்ந்துள்ளது. வாழ்க்கை நிலை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. வியாபாரம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாழாகிவிட்டன. பொருளாதாரத்தை ஜி.டி.பி அழித்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக ஏமாற்று வேலைகளை செய்துவிட்டு நிதி அவசர நெருக்கடி நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு, தற்போது கடவுளின் செயல் என்கிறார்கள். கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தாங்கள் செய்த மோசடிகளை மறைக்க கடவுள் மீது பழியைப் போடுகிறார்கள்.
ஜி.டி.பி.யால் ஏற்பட்ட பாதிப்பு:
2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறையக்கூடும் என்பதால் ( சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக) ஒவ்வொரு இந்தியரின் சராசரி வருமானத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 50 ஆக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது காலாண்டும் மிக மோசமாக இருக்கும். 2020-21 ஆம் ஆண்டு முழுவதும் ஜி.டி.பி. 11 சதவிகிதமாக குறைந்தால், ஒவ்வொரு இந்தியரின் வருமானத்தில் ரூ. 14 ஆயிரத்து 900 வரை இழப்பை ஏற்படுத்தும். ஒரு பக்கம் பணவீக்கம் சாதாரண மனிதனை பெரும் பாதிப்படையச் செய்துள்ளது. மற்றொரு பக்கம் வரிகளும் பொருளாதார வீழ்ச்சியும் சுமையை தாங்க முடியாமல் மக்களின் முதுகெலும்பை ஒடிக்கின்றன.
நம்பிக்கையான பற்றாக்குறை அல்லது அரசு மீதான நம்பிக்கை இழப்பு:
மோடி அரசின் நம்பிக்கை பற்றாக்குறையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கேட்டுப் பாருங்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைப் போல், வங்கிக் கடனோ அல்லது மற்ற நிதியுதவியோ கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். வங்கிகளுக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை. அரசுக்கோ ரிசர்வ் வங்கி மீது நம்பிக்கை இல்லை. மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசின் ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பு நிதியுதவித் திட்டம் பொய் என உறுதியாகியுள்ளது. இது நம்பிக்கையின் பற்றாக்குறை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நம்பிக்கை தகர்ந்துபோனதையும் காட்டுகிறது.
பொருளாதார அழிவின் சுனாமி:
உண்மையை எதிர்கொள்ள மறுத்து, பொய்யை விளம்பரப்படுத்திக் கொள்வதை அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார சீரழிவால் 40 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளார்கள். பொருளாதாரம் தேய்ந்து போனதால், வருங்கால வைப்பு நிதியிலிருந்து 80 லட்சம் மக்கள் தங்கள் பணமான ரூ. 30 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை மாதச் சம்பளம் பெறும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். பொதுமுடக்கம் காரணமாக, அமைப்புச்சாரா துறையில் 10 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே, 50 சதவிகிதம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. கட்டுமானத் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. மைனஸ் 50.3 சதவிகிதமும், வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. உற்பத்தித் துறையில் ஜி.டி.பி. மைனஸ் 39.3 சதவிகிதமும், சேவைத்துறைகளில் மைனஸ் 26 சதவிகிதமும் குறைந்துள்ளது. பல கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்பதே இதற்கு அர்த்தம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2020 செப்டம்பரில் ஜி.டி.பி மைனஸ் 10.9 சதவிகிதமாக குறையும் என தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை:
மாநில அரசுகளுக்கான ஜி.எஸ்.டியை குறைத்தது கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். மாநில அரசுகளுக்கு தர வேண்டி ஜி.எஸ்.டி பங்கை, தரும் நிலையில் மத்திய அரசு இல்லை என, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு மத்திய நிதித்துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி வரை ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. தங்கள் செலவினங்களை மாநில அரசுகள் எப்படி சந்திக்கும்? இது பொருளாதார அராஜகம் அல்லவா?
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் மீது தாக்குதல்:
மாதச் சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வங்கித் தவணைகளை கட்டுவதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என, உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்யவும் மோடி அரசு மறுத்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கையை இழந்துவிட்டனர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதாரச் சூழலால் தற்கொலை செய்து கொள்வதின் பின்னணியில் மத்திய அரசு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், 42 ஆயிரத்து 480 விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, தினமும் 116 விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இழப்பும் தற்கொலைக்கு தூண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் வேலை இழப்பால் 14 ஆயிரத்து 19 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 38 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற அதிகார போதை தலைக்கேறி ஆணவத்துடன் செயல்படும் ஓர் அரசு, விவசாயிகளின் உழைப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பை கவனிக்கத் தவறிவிட்டது.
மயில்களுக்கு உணவு அளிப்பது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, உடைகளை அணிவது, தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொள்வது மட்டுமே பிரதமரின் பணியாக இருக்கிறது.
அழிவுப்பாதையில் நாட்டை அழைத்துச் செல்லும் மோடி அரசிடம் இருந்தும் நாட்டை மீட்டு, இந்தியாவின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்பை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது.