சுதந்திர இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவை புதிய பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அன்றைக்கு பிரதமர்களாக இருந்த அன்னை இந்திரா காந்திக்கும், அமரர் ராஜிவ் காந்திக்கும் ஏற்பட்டது. அந்த சிந்தனைகளின் விளைவாக, அதனை செயல்படுத்த வேண்டும் என முனைப்பு காட்டப்பட்டது. 1991 தேர்தல் முடிந்து ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றிருந்தால், இந்த புதிய பொருளாதாரக் கொள்கையை அவரே அறிமுகப்படுத்தி செயல்படுத்தியிருப்பார். ஆனால், அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்ட காரணத்தினாலே அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
1991 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடாமல் ஓய்வு பெறுகிற மனநிலையில் விலகியிருந்தவர் பி.வி. நரசிம்மராவ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று அமைச்சராகவும், பிறகு முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். அதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோரது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசில் வெளியுறவுத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை என பல்வேறு பொறுப்புகளை வகித்து தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர். இவரை காங்கிரஸ் கட்சியில் அனைவரும் ‘அரசியல் சாணக்கியர்’ என்று அழைப்பார்கள்.
1991 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில் இந்தியாவின் இணையற்ற தலைவர் ராஜிவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். தேர்தல் முடிந்து இந்தியாவின் பிரதமராக வர வேண்டிய தலைவர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக காங்கிரஸ் தலைவர்களால் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் தான் பி.வி. நரசிம்மராவ். அவர் பிரதமராக வர வேண்டும் என்று அன்னை சோனியா காந்தியும் விரும்பினார்.
இந்நிலையில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராகப் பதவியேற்றபோது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் அரசியலிலும் சமூகப் பொருளாதார நிலைகளிலும் நெருக்கடி நிலவியது. 1989இல் அமைந்த வி.பி. சிங் ஆட்சி வைத்து விட்டு போன அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்த பிறகு அமைந்த சந்திரசேகர் ஆட்சியில் அந்நிய செலாவணிக்காக ரிசர்வ் வங்கி 60 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியில் அடகு வைக்க விமானத்தில் ஏற்றி அனுப்பி அந்நிய செலாவணி பெற்ற அவலநிலை இருந்தது. வளைகுடா போர் காரணமாக எண்ணெய் கிடைப்பதில் நெருக்கடி போன்ற பல சிக்கல்களில் இந்தியா சிக்கித் தவித்தது.
தனி நபர் ஒருவர் தங்கத்தைக் கடனுக்காக அடகு வைப்பதுபோல மத்திய அரசே கடனுக்காக அன்னிய நாட்டு வங்கியில் தங்கத்தை அடகு வைக்கிற நிலை பிரதமர் சந்திரசேகர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது. 1991 இல் பண வீக்கம் 16.7 சதவீதத்தை எட்டியது. வரவு செலவு திட்டத்தில் ரூ. 11,347 கோடி பற்றாக்குறை ஏற்பட்டு நாடே பொருளாதாரச் சீரழிவில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மத்தியில் நிலையற்ற ஆட்சி, நாட்டில் சரிந்து வந்த உற்பத்தி எனப் பணவீக்கம் பெருகி, ஏழ்மை என்ற படுகுழியில் விழுந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் அன்றைக்கு மத்தியில் அமைந்த காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டது.
புதிதாகக் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 30 நாட்களில் புதிய வர்த்தகக் கொள்கை, புதிய தொழிற் கொள்கை, புதிய நிதிக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. நமது பொருளாதாரத்தைத் தாராள மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. 1991 இல் பி.வி. நரசிம்மராவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக டாக்டர் மன்மோகன்சிங் பொறுப்பேற்றார். வர்த்தகத்துறை அமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
புதிய பாதை
1979ஆம் ஆண்டு Tokyo Round of GATT பேச்சுவார்த்தை டோக்கியோவில் தொடங்கி முடிவடைந்தபோது, அந்த நாடுகள் எல்லாம் நடந்து வந்த பாதையிலிருந்து விலகி, புதிய பாதையில் நடைபோடத் தொடங்கின. இதை அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி உணர்ந்தார். ராஜிவ்காந்தியும் உணர்ந்தார். 1991 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்விற்கு பிறகு இந்திய பிரதமராக நரசிம்ம ராவ் பொறுப்பேற்க காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைந்தது.
உலக வர்த்தக நிறுவனம் – WTO
GATT – ‘காட்’ அமைப்பில் இந்தியா சேரக் கூடாது என்று எதிர்கட்சிகள் எல்லாம் குரல் கொடுத்தன. ‘டங்கல் திட்டத்தை’ எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டன. 1948 இல் ‘காட்’ அமைப்பை நிறுவிய 23 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த ‘காட்’ அமைப்பில் 124 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. ‘காட்’ என்ற அமைப்பு இன்று உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation – WTO) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது.
உலக நாடுகள் எல்லாம், குறிப்பாகக் கம்யூனிச நாடுகள் உட்பட அந்த அமைப்பில் இணைந்து செயல்படும்போது இந்தியா மட்டும் அந்த அமைப்பில் சேராமல் இருப்பது இந்திய நாட்டுக்கு நற்பயனைத் தராது என்பதால் இந்தியாவை அதில் உறுப்பினராக இணைக்கும் முடிவை நரசிம்மராவ் ஆட்சி எடுத்தது. இதன் மூலம் உலக நாடுகளுடன், உலக வர்த்தக நிறுவனத்தின் பாதுகாப்பு மூலமாக வர்த்தகம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
உலக வர்த்தகத்தில் நமது பங்கு 1960 இல் 1.1 சதவிகிதமாகத் தான் இருந்தது. 1990-91 இல் அது 0.15 சதவிகிதத்துக்கு இறங்கி விட்டது. நமது நாட்டின் பரப்பளவில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பது ஹாங்காங். நமது மக்கள் தொகையில் 0.7 சதவிகிதம் மட்டும் உள்ள நாடு அது. ஆனால் அதனுடைய சர்வதேச வர்த்தக அளவோ நம்மைவிட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் புதிய பொருளாதாரக் கொள்கை பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1991 – 2004
1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 1996 வரை சிறப்பாகச் செயல்பட்டது. பொருளாதாரத் துறையில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியது.
1996 இல் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியும் அதே கொள்கையைத்தான் பின்பற்றியது. 1998 இல் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாக கொண்டிருந்த பாரதிய ஜனதா ஆட்சி செய்த ஆறு ஆண்டு காலமும் காங்கிரஸ் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை பாதையில்தான் அணுகூட பிசகாமல் பயணம் செய்தது.
இந்தியாவில் யார் ஆட்சி செய்தாலும் பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை தாராள மயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் யதார்த்தமான உண்மையாகும். அதுவே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடியதாகும்.
உலகம் ஒரு திசையிலே பயணம் செய்யும்போது நாம் வேறு திசையில் பயணம் செய்ய முடியாது. உலகத்தோடு இசைந்து வாழ உருவானதே புதிய பொருளாதாரக் கொள்கை.
சீனாவைப்போல நிலையான அரசியல், பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு இருந்தால் இந்தியாவில் முதலீடு செய்ய அன்னிய நாடுகள் தயாராக இருக்கின்றன. நமது நாட்டில் லாபத்தோடு இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாமல் அன்னிய முதலீடு வரவேற்கப்பட வேண்டும். நமது நாட்டில் முதலீடு செய்ய வாய்ப்பு குறைவாக இருக்கும்போது அன்னிய முதலீடுதான் ஒரே தீர்வாகும். அன்னிய முதலீட்டில் நமது அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. அதற்குக் கட்டுப்பட்டுதான் அன்னிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை பார்க்கிற போது 1947 இல் இருந்து 1991 வரை பின்பற்றப்பட்ட கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கொள்கையை பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் உலக நாடுகள் எல்லாம் ஒரு திசையில் பயணம் செய்யும் போது, இந்தியா வேறு திசையில் செல்ல முடியாது. உலகத்தோடு இசைந்த பொருளாதாரத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. அந்த கொள்கையின் அடிப்படையில் தான் 1991 இல் இருந்து 1996 வரை புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி பி.வி. நரசிம்மராவ் தலைமையில் வளர்ச்சிக்கான பாதை அமைத்து, இந்தியா பீடுநடை போட ஆரம்பித்தது.
1996 இல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியும், அதே பாதையில் தான் பயணத்தை மேற்கொண்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் புதிய பொருளாதாரக் கொள்கையை மேலும் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். ஆனால், 1998 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி பதவி இழந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சி 1998 முதல் 2004 வரை பதவியில் இருந்தது. வாஜ்பாய் ஆட்சியும் 1991 இல் பி.வி. நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையை தான் பின்பற்றி ஆட்சி செய்தது.
இந்நிலையில் 2004 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டு, அன்னை சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்தது. அன்று நிதியமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். அவரும் இந்த கொள்கைகளை பின்பற்றி சுதந்திர இந்தியா காணாத வளர்ச்சி ஏற்படுகிற வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பல சாதனைகளை புரிந்து சரித்திரம் படைத்தது. டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவிகிதத்தை தொடர்ந்து மூன்றாண்டுகளில் நடைமுறைப்படுத்தி சாதனை படைக்கப்பட்டது.
சீர்திருத்த செம்மல்கள்
1991 புதிய பொருளாதாரக் கொள்கையை அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அறிமுகப்படுத்தும் போது, அதை செயல்படுத்துகிற பொறுப்பை அன்றைய நிதி அமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஒப்படைத்தார். அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டு, 1991 முதல் 1996 வரை, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். அதற்குப்பிறகு, 1998 இல் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியிலும் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்று, ஏற்கனவே தொடங்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையை நிறைவேற்றுகிற பணியை மேலும் செம்மையாக செய்து முடித்தார். அதைத் தொடர்ந்து, 2004 இல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்து 10 ஆண்டு காலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டது.
இன்றைக்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருப்பவர்களில் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ், நிதி அமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக பொறுப்பேற்ற டாக்டர் மன்மோகன் சிங், தொடக்கத்தில் வர்த்தக அமைச்சராக இருந்து பின்னர் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் ஆகியோரின் பங்கு மகத்தானது. இம்முவரை இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த செம்மல்கள் என்று வரலாறு அழைத்து போற்றும். இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற வளர்ச்சியில் இவர்களது பங்கை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பொருளாதார சீர்திருத்தத்தால் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சிக்கு இந்த மூவருமே காரணம் என்பதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.