வேலைவாய்ப்பு இழப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல விசயங்களில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, சமூக ஊடகம் மூலம் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் ”காணாமல் போன வளர்ச்சி” என்ற பிரச்சாரத்தில் இணைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பதிவில் மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் கிராமப்புறங்களில் வேலை இழப்பு அதிகரித்துள்ளதை ட்விட்டர் பதிவில் சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, ”12 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் காணாமல் போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பும் எதிர்காலமும் காணாமல் போய்விட்டன. நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு பதிலும் காணாமல் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், வேலைவாய்ப்பு வழங்குமாறும், நாட்டில் உள்ள இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும், மோடி அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா தமது ட்விட்டர் பதிவில், ”வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பட்டப்படிப்பு படித்தவர்களுக்காக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்வு நடத்தவில்லை. 2020 ஆம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. காலிப் பணியிடங்கள் இருந்தால், தேர்வு கிடையாது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியிடுவதில்லை. முடிவுகள் வெளியிடப்பட்டால், தேர்வு கிடையாது” என்று பிரியங்கா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது, ”தனியார் துறையில் வேலை இழப்பு, அரசுப் பணிக்கான தேர்வு நிறுத்தம் ஆகியவற்றால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், உண்மை நிலையை மறைத்துவிட்டு, விளம்பரங்கள் மூலம் மோடி அரசு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது” என்று சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”ரயில்வே மற்றும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் 2 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு விண்ணப்பத்துக்கு தேர்வு கட்டணமாக 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ.1,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, மோடி அரசை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். ”இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 40 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.