பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒன்பதரையாண்டு ஆட்சிக் காலத்தில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின்துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்து ராஜ் போன்ற சாதனைப் பட்டியலை அவரால் படைக்க முடிந்தது. அதனால்தான், அவரது ஆட்சிக்காலத்தை “தமிழகத்தின் பொற்காலம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்து பாராட்டுகிறார்கள். இத்தகைய சாதனைகளை எத்தகைய நிதி ஆதாரத்தைக் கொண்டு காமராஜரால் சாதிக்க முடிந்தது என்பதை அறிந்தால், அவரது சாதனை எத்தகையது என்பதைப் புரிந்து எவரும் வியப்படையவே செய்வர்.
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1954 – 1955இல் மொத்த பட்ஜெட் தொகை ரூ.47.18 கோடி! அவர் பதவி விலகியபோது 1962 – 1963இல் மொத்த பட்ஜெட் தொகை ரூ.121.81 கோடி மட்டுமே! ஆனால், தமிழக அரசின் 2014 – 2015ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 39 கோடி! இந்தப் பின்னணியில்தான் காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாதனைகளைக் கணிக்கவேண்டும்.
முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த பின்தங்கிய சமுதாயத்தினற்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ’ செல்லாது என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்குவந்த சில மாதங்களிலேயே 1951இல் அதில் திருத்தம் கொண்டுவர காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுதந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி பெருமிதம் கொண்டது.
சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954 இல் பொறுப்பேற்ற காமராஜர் அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரையாண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மையான சாதனைகளை படைக்கும் ஆட்சியை நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும் போது, அரிஜனத் தலைவரான பி.பரமேசுவரனுக்கு இந்து அறநிலையத்துறையை அளித்து தீண்டாமை ஒழிப்புக்கு வழிகோலினார். அதேபோல, உழைப்பாளர் கட்சி தலைவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியை காங்கிரஸில் இணைத்து அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார். 60 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதியை நோக்கமாகக் கொண்டு எந்த ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுத்தவர் காமராஜர். இதைவிட ஒரு புரட்சிகரமான நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும்?
கல்வி புரட்சி
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலகல்விமுறை ஒழிப்பு தான். இது குறித்து காமராஜர் கருத்துக் கூறும் போது, “சிலர், பரம்பரை தொழிலையே செய்து வரவேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்கவேண்டுமாம். நம்மை படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஒட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்படவேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார் போல் கூறினார். காமராஜரின் இந்த சிந்தனைதான் அவரது ஆட்சிக்கு சூத்திரமாக இருந்தது.
எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழக்கையில் முன்னேற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியும், மதிய உணவு திட்டமும் கொண்டு வந்தார் காமராஜர். இதனால் 1957 இல் 15,800 ஆக இருந்த தொடக்க பள்ளிகள், 1962 இல் 29,000 ஆக இரண்டு மடங்கு உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக விரிவடைந்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1995 ஆக 3 மடங்கு பெருகின. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வியை முதல்முறையாக இலவசமாக வழங்கி கல்வியில் புரட்சி செய்த காமராஜரை ‘கல்வி வள்ளல்’ என்று தமிழகமே வாழ்த்தியது. தான் படிக்கவில்லையே தவிர தேசத்தையே படிக்க வைத்தவர் காமராஜர்.
தொழில் வளர்ச்சி
‘நவபாரத சிற்பி’ பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழு பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்களைப் பார்த்தாலே தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.
1. சென்னை – பெரம்பூரில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ரூபாய் 7.35கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டது. இதனைப் பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். இதில் 7,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆண்டொன்றுக்கு 620 ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
2. சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
3. ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
4. திருச்சி, திருவரம்ரில் உயர்அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (பெல்) அமைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் காமராஜர் ஆட்சியில் வழங்கப்பட்டது. இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத்துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தை தருகின்ற ‘மகா நவரத்தினா’ என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம்.
5. பாதுகாப்பு அமைச்சகத்துக்குட்பட்ட ஆவடி டாங்க்பேக்டரி ரூ.15கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. அதில் சில:
1. மதராஸ் இன்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேசன்.
2. மதராஸ் சிமெண்ட் லிமிடெட், ராஜபாளையம்.
3. ஸ்ரீசேஷசாயி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பள்ளிபாளையம்.
4. மதராஸ் அலுமினியம் லிமிடெட்.
5. சதர்ன் ஸ்டக்ஸரல்ஸ் லிமிடெட், சென்னை.
6. தரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ் லிமிடெட், தரங்கதாரா.
7. ரேடியோ எலெக்ட்ரிகல் லிமிடெட், சென்னை.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சில முக்கியமான தொழிற்சாலைகள்:
1. சென்னை, வண்டலூர் ஸ்டேன்டர்ட் மோட்டார்ஸ் தொழிற்சாலை,
2. அசோக் லேலண்ட் தொழிற்சாலை,
3. அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் தொழிற்சாலை,
4. சிம்சன், இந்தியா பிஸ்டென்ஸ், டி.வி.எஸ் லுகாஸ் மற்றும் யூனியன் கார்பைடு கம்பெனி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை.
1951ஆம் ஆண்டில் மாநிலத்தில் 71 நெசவாலைகள் இருந்தன. 1962ஆம் ஆண்டு முடிவில் 134 நெசவாலைகளாகப் பெருகின. 1962 ஜனவரியில் ‘சௌத் இந்தியா விஸ்கோஸ் லிமிடெட்” என்ற ஆலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகையில் தொடங்கப்பட்டது. அதேபோன்று கூட்டுறவுத்துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 1962இல் எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின்போது, கூடுதலாக பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவை:
1. கோத்தாரி சர்க்கரை லிமிடெட்.
2. அருணா சுகர்ஸ், பெண்ணாடம்.
3. சேலம் சுகர்ஸ் மில் லிமிடெட்.
4. சண்பகா சுகர்ஸ் பவுண்டேஷன் லிமிடெட்.
5. நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை., கவுந்தபாடி
6. சக்தி சுகர் பேக்டரி.
7. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை.
8. சவுத் இந்தியா ஸ்டீல்ஸ் சுகர்ஸ் லிமிடெட்.
1963இல் 20 லட்சம் கேலன் சக்திகொண்ட எரிசாராய ஆலை, திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் சைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில், கோவை மாவட்டத்தில் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என 4 சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலையை ராஜபாளையத்தில் தொடங்கியது. 1962 ஆம் ஆண்டில் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இதனுடைய பயன்கள் அதிகரித்த காரணத்தால் இத்தகைய தொழிற்பேட்டைகள் கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜபாளையம், நாகர்கோவில், சென்னை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் உருவாக்குதவற்காக 4.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
பாசன திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக உருவான திட்டங்கள்தான் இவை:
1. கீழ்பவானி திட்டம்: கோயம்புத்தூரில் பவானி நதியின் குறுக்கே நீர்த்தேக்கத்தை ரூபாய் 10 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது. இதனால் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெற்றது.
2. மணிமுத்தாறு திட்டம்: தாமிரபரணி ஆற்றில் இணையும் கிளைநதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே 5.50 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தினால் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1.03 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்றது.
3. மேட்டுர் கால்வாய் திட்டம்: மேட்டுர் நீர்த் தேக்கத்திலிருந்து ரூபாய் 2.67 கோடி செலவில் ஒரு வாய்க்கால் தோண்டி கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் 5.45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நீர்ப்பாசன வசதிபெற்றது.
4. ஆரணியாறு திட்டம்: செங்கற்பட்டு மாவட்டம், திருவள்ளுர் தாலுகா ஆரணியாறு நதியின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கத்தை ரூ.1.04கோடி செலவில் கட்டப்பட்டது.
5. அமராவதி திட்டம்: கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி நதியின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கத்தை ரூ.2.97 கோடி செலவில் கட்டப்பட்டது.
6. வைகை திட்டம்: பெரியார் நீர்த்தேக்கத்திலிருந்து வந்த கூடுதல் நீரைப் பாதுகாத்து, இணைத்து வைகை நதியின் குறுக்கே .3.30 கோடி செலவில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
7. சாத்தனூர் திட்டம்: வடஆற்காடு மாவட்டம் சாத்தனூர் அருகில் ஓடும் பெண்ணையாறு நதியின் குறுக்கே ரூ.2.89 கோடி செலவில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. இதன்மூலம் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதிபெற்றது.
8. கிருஷ்ணகிரி திட்டம்: கிருஷ்ணகிரி தாலுகாவில் தென்பெண்ணையாறு நதியின் குறுக்கே ரூ.2.02 கோடி செலவில் இத்திட்டம் கட்டப்பட்டது. ஏறக்குறைய 9 ஆயிரம் ஏக்கர் இத்திட்டத்தால் பாசன வசதிபெற்றது.
30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம். காமராஜர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. பல வடிகால்கள் மூலமாகக் காவிரி கழிமுகத்தில் பல நீர்க்கால்வாய்கள் இணைத்து செயல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இவை தவிர, கூடுதலாக ஏழு புதிய திட்டங்களும், இரண்டாவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது அவை:
1. புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம்: திருச்சி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடியில் 1.57 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு 15 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்பாசன வசதிபெற்ற காவிரியில் இருந்து வெளியேறும் நீரைப் பயன்படுத்துவதற்கான திட்டமாகும்.
2. புதிய கட்டளைத்திட்டம்: திருச்சி மாவட்டத்தில் 1.72 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசனம் செய்யும் திட்டம்.
3. வீடூர் நீர்த்தேக்கத் திட்டம்: 3200 ஏக்கர் நீர்ப்பாசனம் பெற ரூபாய் 67.49 லட்சம் செலவில் தென் ஆற்காடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம்.
4. கொடையாறு வாய்க்கால் திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் 2.9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதிபெற பெரிய ஏரிகளைப் புதுப்பிக்கவும், கால்வாய்களை மறுசீரமைக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
5. நெய்யாறு திட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 9200 ஏக்கர் நீர்ப்பாசன பெற ரூபாய் 41 லட்சம் செலவில் தொடங்கப்பட்டதே இத்திட்டம்.
6. பரம்பிக்குளம்; – ஆழியாறு திட்டம்: இரண்டாவது ஐந்தாண்டுதிட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியத் திட்டம். இது கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பலநோக்கு திட்டமாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்பிற்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தமுடியும் என்பதற்கு இத்திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மின் உற்பத்தி
காமராஜர் ஆட்சிகாலத்தில் மின் உற்பத்தியில் வியக்கத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின் உற்பத்தியிலும், அதனைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின் உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் 86 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று 1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ஓங்கி வளர்ந்துள்ளது. அத்தகைய நெய்வேலி நிலக்கரித் திட்டத்திற்கு அன்று வித்திட்டவர் காமராஜர் என்பதைத் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.
சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அணுமின் நிலையத்தை கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டவர் காமராஜர். இதற்காக இந்திய அரசின் அணுமின் உற்பத்தித்துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டவர் காமராஜர். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்து வருகின்றன.
நிலச்சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைத்தாரர்களின் பாதுகாப்பிற்காக, “குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் – 1955” காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச்சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்திற்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்பு சட்டம் 1962இல் கொண்டு வரப்பட்டது.
பஞ்சாய்த்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை பிரதமர் நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1958இல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாய்த்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் மிக வேகமாக துவங்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. ‘கடையனுக்கும் கதி மோட்சம்” கிடைக்கச் செய்வதே காந்தியடிகளின் லட்சியம். அதை தேசிய அளவில் பிரதமர் நேருவும், தமிழக அளவில் முதலமைச்சர் காமராஜரும் நிறைவேற்றி சாதனை படைத்தார்கள். கிராம வளர்ச்சியை லட்சியமாகக்கொண்ட காமராஜர் ஆட்சி நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை இன்றும் நினைத்து பார்த்தால் எவரும் மெய்சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இத்திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றியமைத்தது.
தமிழ் வளர்ச்சி
1953இல் மொழிவாரி மாநிலத்தைக் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், சுதந்திரம் பெறும்முன்பே, மொழி அடிப்படையில் 1922லேயே மாகாணக் காங்கிரஸ் அமைப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் கட்சிதான். அன்று சென்னை ராஜதானி என்று ஒரே அரசாக இருந்தபோதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி எனப் பிரித்து, மொழி உணர்வுக்கு முதலிடம் கொடுத்து, மாகாண அமைப்புகளை உருவாக்கிய பெருமை மகோன்னதமான காங்கிரஸ் மகாசபைக்கு மட்டுமே உண்டு. சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58இல் தமிழில் சமர்ப்பித்து, புதிய சாதனையை படைத்ததும் காமராஜர் ஆட்சியே. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று முழங்கவேண்டும் என்பதற்காக, தமிழ் அன்னையை அரியாசனத்தில் அமர்த்த 1956இல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே.
1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் கல்வி அமைச்சர் தலைவராக நியமிக்கப்பட்டார். கல்லூரி பாடங்களை கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர்கல்விக்கான பாடநூல்களை தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்நூல் வெளியீட்டு கழகம்” தோற்றுவிக்கப்பட்டது. தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து தரமாக வெளியிடப்பட்டன.
காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960இல் வெளியிடப்பட்டன. 1956இல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட”; என்பதை ‘தமிழ்நாடு” என்று மாற்றி அமைக்கவேண்டும் என்ற கோலீரிக்கை எழுந்தது. இது குறித்து சட்டமன்றத்தில் 24.2.1961இல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், ‘மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடுகிற இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதில் ச்தமிழ்நாடுஞ் என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இதை அறிவித்தபோது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஆகவே, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று அழைப்பதில் காங்கிரஸ் கட்சி மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை எவரும் மறுக்கமுடியாது.
அன்றாடம் ஆலயங்கள் செல்வோர்,
அனுதினம் ஐவேளை தொழுவோர்,
தேவாலயங்களில் ஜபிப்போர்,
நாத்திகவாதம் நாளும் புரிவோர்
தமிழகத்தில் தலைவர் காமராஜரை
எண்ணிப்போற்றத்தக்க
உண்மையின் படபிடிப்பு.
பெருமையில் விம்புகிறது நெஞ்சம்.