தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய காமராஜரின் துல்லிய அறிவும், மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் அவருக்கிருந்த ஆர்வமும், துறைச் செயலாளர்களிடத்தில் அவரது மதிப்பையும் மரியாதையையும் பலமடங்கு உயர்த்தின. அலுவலர்கள் அறியாத பல விஷயங்களை, முதலமைச்சராவதற்கு முன்னரும் பின்னரும் அவர் மேற்கொண்ட பயணங்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் அவருக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு முறையும் சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதும், மக்கள் தேவைகளைக் கண்டறிந்த காமராஜ், பல புதுமைகளைப் புகுத்தி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தினார்.
எந்த ஒரு விஷயத்திலும் அதன் ஆணிவேரை அறிவதில் காமராஜ் பெருங்கவனம் செலுத்துவார். எந்த விஷயத்திலும் அதிகாரிகள் கருத்தை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், தாமே நேரில் விசாரித்து அறிந்து, ஆய்வு செய்து செயல்பட்டதுதான் அவரது நிர்வாக வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. காமராஜரைத் தந்திரமான பேச்சுக்களாலோ, முகஸ்துதியாலோ ஏமாற்ற முடியாது. எந்தத் தந்திரத் திட்டத்தையும் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாகத் தெரிவித்தாலும் புரிந்துகொள்ளுகிற ஆற்றலையும் திறனையும் சிறுவயது முதலே அவர் நிரம்பப் பெற்றிருந்தார்.
‘ஜி.ஒ.’ என்றால் என்ன ?
காமராஜர் முதலமைச்சரானபோது, அவரைப் பற்றி சில அதிகாரிகள் தப்புக் கணக்கு போட்டார்கள். ஒரு சமயம், அரசு சார்பாகப் புதிய திட்டம் ஒன்றிற்கு அவர் உத்தரவுபோடச் சொன்னார். சம்பந்தப்பட்ட அதிகாரி, அதற்கு ஜி.ஒ.’ இடம் தராது’ என்றார்.
உடனே காமராஜர், ”ஜி.ஒ.னா என்னாணேன்?” என்று அதிகாரியைப் பார்த்துக் கேட்டார். நாம் சொன்னது காமராஜருக்கு விளங்கவில்லையோ என்று எண்ணிய அதிகாரி , ‘கவர்ன்மெண்ட் ஆர்டர்’ என அதன் விரிவாக்கம் சொன்னார்.
”அது சரிணேன்….. கவர்ன்மெண்ட் ஆர்டர் என்றால் என்னாணேன்?” என மறுபடியும் கேட்டார். காமராஜர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்று அதிகாரி குழம்பிப் போனார்.
உடனே காமராஜர் சொன்னார் : ‘நீங்க எழுதி வைத்ததில் நான் கையெழுத்துப் போட்டால், அது கவர்ன்மென்ட் ஆர்டர், அப்படித் தானே? அப்படியென்றால், நான் சொன்னபடி மாத்தி எழுதுங்க, நான் கையெழுத்துப் போடுறேன்.”
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி அதிர்ந்து போனார். அவர் மட்டுமல்ல, அதிகாரத்தில் உள்ள அத்தனைபே ரும், தங்களது சாமர்த்தியம் காமராஜரிடம் பலிக்காது என்ற முடிவுக்கு வந்தனர்.
துணிச்சல்காரர்!
ஒரு சமயம், முதலமைச்சர் காமராஜர் அதிகாரிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். வழியெங்கும் சாலையோரம் , ஒருபக்கம் தரிசாகவும், மறுபக்கம் பெரிய, பெரிய ஏரிகளில் நீர்வசதி இருப்பதையும் கவனித்தார்.
உடனே காமராஜருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நீர்நிலைகள் பெரிசு பெரிசாய் இருந்தும், பரந்த நிலப்பரப்புகள் ஏன் தரிசாய் இருக்கிறது’ என்று தம்முடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டார்.
”இந்தச் சாலை மத்திய அரசின் பொதுத்துறைக்குச் சொந்தமான சாலை. இதன் வழியாக மதகுகட்டி, நீர்ப் பாய்ச்சுவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை. அதைக் கேட்டு எழுதி இரண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் அனுமதி கிடைக்கல அய்யா” என்று அவர்கள் சொன்னார்கள்.
”மதகு கட்ட உடனே ஏற்பாடு செய்யுங்கணேன். மத்திய அரசின் அனுமதி வரும்போது வரட்டும். பிரச்சினை வந்தா நா பாத்துக்கிறேன்’ என முதல்வர் காமராஜர் எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னார்.
உடனே வேலை ஆரம்பிக்கப்பட்டது. தரிசு நிலங்கள் வயல்களாயின! மத்திய அரசைத் தட்டிக் கேட்கிற துணிச்சலான முதலமைச்சராகக் காமராஜர் இருந்ததால், மாநில முன்னேற்றத்துக்குச் சட்டப் பிரச்சினைகளும், நடைமுறை விதிகளும் குறுக்கே நின்றதில்லை . விஷயம் எதுவானாலும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, நிலைமையை விளக்கி, உடனே வேலை தொடங்க காமராஜர் ஏற்பாடு செய்துவிடுவார்.
உடனடியாக அளிப்பதே நிவாரணம்!
தஞ்சை மாவட்டத்தில் கடுமையான புயல் தாக்கியிருந்த சமயம் அது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரணம் அளிப்பதற்காக முதலமைச்சர் காமராஜர் நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரும் கம்பலையுமாய்த் தங்களுடைய கஷ்டங்களை அவரிடம் முறையிட்டார்கள். குறிப்பாக, குடிசைகள், தட்டுமுட்டுச் சாமான்களையும் இழந்தவர்கள், பரிதாபமாய் இருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த முதல்வர் காமராஜர், “குடிசை போட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செலவாகும்” என்று கேட்டார்.
கூடியிருந்த ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் சொன்னார்கள். திருப்தியடையாத காமராஜர், ஒதுங்கி நின்றிருந்த ஒரு முதியவரை அழைத்து, ” பெரியவரே, நீங்கள் சொல்லுங்க” என்றார்.
பெரியவர் சொன்ன தொகை அவருக்கு நியாயமான தாகப்பட்டது. உடனே, தம்முடன் வந்திருந்த அதிகாரிகளிடம் நிவாரணத் தொகை எவ்வளவு தேவைப்படுமெனக் கணக்கிடச் சொல்லி, உடனடியாக அவர்களுக்கு வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். உடனே, ஒரு மூத்த அதிகாரி, ‘ரெவின்யூ போர்டுக்கு ப்ரபோசலை’ அனுப்பி , பரங்ஷன்’ வாங்க ஏற்பாடு செய்துடுறேன்” என்றார்.
காமராஜருக்கு உடனே கோபம் வந்தது. “என்னய்யா… சொல்றீங்க? எப்போ பாங்ஷன் வாங்கி, எப்போ கொடுப்பீங்க ? அதுவரைக்கும் இவங்க நிலைம் ? உள்ளூர் கஜானா பணத்தை எடுத்து உடனடியாகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க. கொடுத்த பின்னாடி U£ரங்ஷன் வாங்கிக்கலாம். வீடு வாசல் இழந்தவர்களுக்கு உடனடியாகக் கொடுப்பது தானே நிவாரணம்?” எனச் சொன்னதுடன், உடனடியாக அவர்களுக்கு நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அரசின் நடைமுறை சம்பிரதாயங்களை அப்படியே கடைப்பிடித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவார ண உதவி கிடைப்பதற்கு எவ்வளவு காலதாமதம் ஆகுமென்று காமராஜருக்குத் தெரியும். நெருக்கடியான சந்தர்ப்பங்களில், நடைமுறைகளை ஒதுக்கி வைப்பதற்கு அவர் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.
நேர்மை தவறாத முதல்வர்!
நிர்வாகத்தை எப்படி நடத்திச்செல்லவேண்டும் என்பதற்கு முதல்வர் காமராஜர் ஒரு முன்னுதாரணமாக விளங்கினார்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நூறு ரூபாய் கள்ள நோட்டுக்கள் தமிழகத்தில் பெருமளவு புழக்கத்தில் விடப்பட்டு, தமிழகப் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிடுமோ என்கிற நிலை தோன்றி இருந்த நேரமது.
அதை விசாரித்துக் கண்டுபிடிக்கத் தம்முடைய நேரடி மேற்பார்வையிலேயே ஒரு தலைமை போலிஸ் அதிகாரியை நியமித்திருந்தார். இதுபோன்ற கள்ளநோட்டு வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டமென்று முதல்வர் காமராஜருக்குத் தெரியும்.
எனவே அந்த அதிகாரியிடம், “இதோ பாருங்க….. விசாரணையின்போது, தயவுதாட்சண்யமே காட்டவேண்டாம்! கதர்ச்சட்டை போட்டிருந்தால், அதற்காக யோசிக்காதீங்க! சந்தேகப்பட்டால் கைது செய்து விசாரியுங்கள். எனக்குச் சொந்தக்காரனென்று சொல்வான், அதை லட்சியம் பண்ணாதீங்க! இதுபோன்ற ‘கேஸ்’களில் பெரிய புள்ளிகள் தான் சம்பந்தப்பட முடியும். அதற்காக யோசிக்காதீங்க! உங்கள் கடமையைச் செய்வதில் எந்த அரசியல் குறுக்கீடும் இருக்காது. அப்படித் தலையீடு இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையைச் செய்யுங்க. என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு” எனச் சொன்னார்.
இவ்வாறு உற்சாகப்படுத்தித்தான் அந்தப் போலிஸ் அதிகாரியிடம் முதல்வர் காமராஜர் பணியை ஒப்படைத்தார். அந்த அதிகாரியும் நேர்மையாக உழைத்து, கள்ளநோட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கோவையின் பெரிய மில் முதலாளி ஒருவரையும், அவருடைய சகாக்களையும் கண்டுபிடித்து கைது செய்தார். வழக்கு நடைபெற்றது ; அவர்களுக்குத் தண்டனையும் கிடைத்தது. கள்ளநோட்டுத் தயாரிப்பாளர்கள் தண்டனை பெற்ற அபூர்வ வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
காமராஜர் ஆட்சி, ‘பொற்கால ஆட்சி’ என்று அழைக்கப்படுவதற்கு மக்கள் நலனில் அவர் காட்டிய அக்கறையும், நிர்வாகத்தில் அவர் கடைப்பிடித்த நேர்மையுமே காரணமாகும்.
காமராஜர் முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து, தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றிச் சாதனையாளராகத் திகழ்ந்தார். அதனால்தான் தந்தை பெரியார், ”கடந்த 2000 ஆண்டுகளாக நிகழாத, சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் கூட நடைபெறாத அதிசயத்தைக் காமராஜர் முதலமைச்சராக இருந்து, தமது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்” என்று மனம் திறந்து பாராட்டிய ஆட்சி, காமராஜர் ஆட்சி!
கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியார் தம் பிரச்சாரத்தின்போது, காமராஜரை ரட்சகர்’ என்று மக்களிடம் அறிமுகப்படுத்தினார் ! ‘பச்சைத் தமிழர்’ என்று பாராட்டினார்! ‘கல்வி வள்ளல்’ என்று புகழாரம் சூட்டினார்! காமராஜர் ஆட்சிக்குப் பெரியார் கொடுத்த நற்சான்றைப் புராண பாஷையில் சொல்வதானால், ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப்போல அமைந்தது’ எனலாம்.
ஜனநாயகத்தில் மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு , எத்தகைய ஆட்சி முறையைப் பின்பற்றவேண்டும் என்பதற்குக் காமராஜரின் ஆட்சி மிகச்சிறந்த உதாரணமாகும். இன்றைய நிலையில் அத்தகைய ஆட்சிமுறையை நாம் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.