1996 இல் மக்கள் விரோத ஆட்சி நடத்திய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்றைய பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான பி.வி. நரசிம்மராவ் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இதை தொடங்குவதில் முன்னணிப் பங்காற்றியவர் ப. சிதம்பரம். 24 மணி நேரத்தில் சைக்கிள் சின்னம் கிடைத்ததிற்கு அவரது முயற்சி தான் காரணம். தேர்தலில் 20 மக்களவை உறுப்பினர்களையும், 39 சட்டமன்ற உறுப்பினர்களையும் த.மா.கா. பெற்றது. இதன்மூலம் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அன்றைய தமிழ் மாநில காங்கிரசில் நவசக்தி வார இதழை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களோடு இணைந்து நடத்துகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய அமைச்சரவையிலும் த.மா.கா. பங்கு வகித்தது.

பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ். அழகிரி என்ற இரட்டையர்கள் தமிழக அரசியல் களத்தில் உயர்நிலைக்கு வருவதற்கு மூப்பனார் காரணமாக இருந்தார். ஊராட்சித் தலைவராக, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக கே.எஸ். அழகிரி பொறுப்பு வகிப்பதற்கு காரணமாக இருந்தவர் மக்கள் தலைவர் மூப்பனார். அவர் அமைத்த அடித்தளத்தின் காரணமாக அவரின் மறைவிற்குப் பிறகு மக்களவை உறுப்பினராகவும், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இன்று தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பு வகிப்பதை பார்ப்பதற்கு மக்கள் தலைவர் மூப்பனார் இல்லையே என்கிற ஏக்கம் தான் ஏற்படுகிறது. அந்த காலக்கட்டங்களில் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ். அழகிரி, பி.வி. ராஜேந்திரன், கே.ஆர். ராமசாமி என மனம் ஒத்த நண்பர்களோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது.

மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் புகழை பறைசாற்றுகிற வகையில் அழியாத கருவூலத்தை நூல் வடிவில் வெளியிட வேண்டுமென்று விரும்பினேன். அந்த நூலில் இடம் பெறுவதற்கு அன்னை சோனியா காந்தி, பிரனாப் முகர்ஜி, தி.மு. கழகத் தலைவர் கலைஞர், அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் என பன்முகத்தன்மை கொண்ட பலரிடம் 128 கட்டுரைகளைப் பெற்று “மக்கள் தலைவர் மூப்பனார்” என்ற நூலை வெளியிட்டேன்.
இந்நூலை வெளியிடுவதற்காகவே மகாராஷ்டிரா முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வருகை புரிந்தார். இவ்விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் நிரம்பி வழிகிற அளவில் பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது. அந்த நூல் குறித்தும், அவ்விழா குறித்தும் அளவற்ற மகிழ்ச்சியும், நன்மதிப்பையும் மூப்பனார் அவர்கள் என்மீது பெற்றிருந்தார் என்பதை கண்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் மூப்பனாரோடு பணியாற்றிய 17 ஆண்டுகாலத்தில் 1989 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், அதற்குப் பிறகு தேர்தல் அரசியலை விட்டு நான் ஒதுங்கி விட்டேன். அவரைப் பொறுத்தவரை அவரோடு இருந்த காலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு இல்லையே தவிர, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு மிகத் தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்துளேன். சென்னையில் அவர் இருந்த நாட்களில் அவரை பார்க்காமல் இருந்ததில்லை. மக்கள் தலைவர் மூப்பனார் என்னை நேசித்தார். என் தந்தை உள்ளிட்ட எனது குடும்பத்தை நேசித்தார். அவரைப் போன்ற மனிதநேயமிக்க தலைவரை இனி எந்த காலத்தில் காணப் போகிறோம் என்கிற ஏக்கம் தான் அவரது பிறந்தநாளில் எனக்கு ஏற்படுகிறது.