சோழ மண்டலத்தில் முடிசூடா மன்னராக விளங்கிய பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் வயது முதுமை அடைந்த நிலையில் தமக்கு பின்னால் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த கபிஸ்தலம் ஜி.கே. மூப்பனார் அவர்களை நியமிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜரிடம் பரிந்துரை செய்தார். காமராஜர் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 1955 இல் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டார். அக்காலங்களில் அவர் ஜி. கருப்பையா மூப்பனார் என்றே அழைக்கப்பட்;டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை விட தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையுடன் விளங்குகிற வகையில் தமது செல்வாக்கை பயன்படுத்தி கடுமையாக உழைத்தவர் ஜி. கருப்பையா மூப்பனார்.
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தாலும், மாநில அளவில் மதிக்கப்படுகிற அளவிற்கு காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருந்தார். அதன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு பிறகு இரு காங்கிரஸ் இணைப்பு மாநாடு சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட விழாவில் அன்னை இந்திரா காந்தி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு பெருமை பெற்றார். அதுமுதல் தமிழக காங்கிரசில் மூப்பனார் சகாப்தம் தொடங்கியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக அன்னை இந்திரா காந்தி அவர்களால் நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். இப்பொறுப்பில் அவர் தொடர்ந்து 25 ஆண்டுகாலம் இருந்தார்.
தலைநகர் தில்லியில் தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வழங்கி விட்டு, வெஸ்டர்ன் கோர்ட் அறையில் தங்கி கட்சிப் பணிகளை செய்து வந்தார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிற சோதனைகளை அன்னை இந்திரா காந்தி காலத்திலும், அவரது மறைவிற்குப் பிறகு தலைவர் ராஜீவ்காந்தி காலத்திலும் சிறப்பாக செயல்பட்டதால் Crisis Manager என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எந்த மாநிலத்தில் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு காங்கிரஸ் தலைமை இவரைத் தான் அனுப்பி வைத்தது. அந்த வகையில் நம்பிக்கைக்குரிய தலைவராக ஜி.கே. மூப்பனார் செயல்பட்டு வந்தார்.
அந்த காலகட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான எம். பழநியாண்டி, ஏ.ஆர். மாரிமுத்து, உ. சுப்பிரமணியம், என். ராமசாமி உடையார், சோ. பாலகிருஷ்ணன், க. பாரமலை, எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, டாக்டர் அ. பிச்சை போன்றவர்களோடு அரசியல் பணி செய்கிற அரிய வாய்ப்பை நான் பெற்றேன்.
1988 இல் தமிழகத்தில் அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் 13 முறை சுற்றுப்பயணம் செய்து மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்புரை மேற்கொண்டார். இத்தகைய பரப்புரையின் மூலம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தார். இந்நிலையில் அந்த லட்சியத்தை அடைவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டார். 1989 பொதுத் தேர்தலுக்கு முன்பாக சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை திரு. ஜி.கே. மூப்பனார் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அதை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் ராஜீவ்காந்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் மிகுந்த கரவொலிக்கிடையே அறிவித்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.
1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. ஜா-ஜெ என இரு அணிகளாகவும் பிரிந்து போட்டியிட்டன.
ஆனால், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்று 48 லட்சத்து 67 ஆயிரத்து 125 வாக்குகளைப் பெற்றன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 20.19 சதவிகிதமாகும். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 51 லட்சம் வாக்குகளைப் பெற்று 26 இடங்களில் தான் வெற்றி பெற்றன. காங்கிரசும், அ.தி.மு.க.வும் வெற்றி வாய்ப்பில் சம நிலையில் தான் இருந்தன. அ.தி.மு.க. ஜானகி அணி 1 இடத்தில் வெற்றி பெற்றது.
எதிர்கட்சித் தலைவர் யார் என்கிற கேள்விக்கு விடை காணும் போது, வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை சமநிலையில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை விட அ.தி.மு.க. அதிக வாக்குகளை பெற்றிருந்ததால் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று எண்ணிக்கை 29 ஆக கூடியது. அன்று தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர்த்து காங்கிரஸ் பெற்ற வாக்குகளை போல இதுவரை எந்த அரசியல் கட்சியும் பெறவில்லை. ஆனாலும், காமராஜர் ஆட்சி என்கிற நமது லட்சிய கனவு 48 லட்சம் வாக்குகள் வாங்கியும் நிறைவேறவில்லை. அமரர் ராஜீவ்காந்தியின் 13 மாத கடுமையான உழைப்பிற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
1989 தேர்தல் முடிவிற்குப் பிறகு 1991 மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை தலைவர் ராஜீவ்காந்திக்கு ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிக இடங்களை பெற்றால் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் முதன்மை நோக்கம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது தான். அந்த வகையில் தமிழகத்தில் அதிக மக்களவை உறுப்பினர்களை பெறுகிற நோக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் ராஜீவ்காந்தி கூட்டணியை ஏற்படுத்தினார். அந்த கூட்டணி ஏற்படுத்துவதற்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கே. மூப்பனாருக்கு பதிலாக திரு. வாழப்பாடி கூ. ராமமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அ.தி.மு.க.வோடு இணக்கமாக செயல்படுகிற சூழலை ராஜீவ்காந்தி உருவாக்கினார்.
1991 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள 39 இடங்களில் 27 இடங்களும், சட்டமன்றத்தில் 66 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அடுத்து நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், தமிழக தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் எதிர்கால பிரதமர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டி படுகொலை செய்தனர். தேர்தல் முடிந்து பிரதமராக ராஜீவ்காந்தி வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த படுகொலை நடத்தப்பட்டது. இதன்மூலம் இந்திய மக்களின் விருப்பத்தை விடுதலைப் புலிகள் சீர்குலைத்தனர். இதன்மூலம் இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்குகிற நிலை ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை 1996 இல் தொடங்கினார். 20 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றார். தேர்தல் முடிந்ததும் 20 மக்களவை உறுப்பினர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அன்னை சோனியா காந்தியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, நேருக்கு நேராக அணிவகுக்கச் செய்து அவரது வாழ்த்துக்களை பெறச் செய்தவர் ஜி.கே. மூப்பனார். அதேபோல, 1999 ஆம் ஆண்டில் அன்றைய வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென்று அன்னை சோனியா காந்தி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து மூன்று மக்களவை உறுப்பினர்களையும் வாக்களிக்க வைத்து வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்தவர் ஜி.கே. மூப்பனார்.
காங்கிரசில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினாலும் அன்னை சோனியா காந்திக்கோ, காங்கிரசிற்கோ எதிராக ஜி.கே. மூப்பனார் செயல்பட்டதில்லை. தமது இறுதி காலத்தில் கூட தமிழ் மாநில காங்கிரசை காங்கிரஸ் கட்சியோடு இணைக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த விருப்பத்தை அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் திரு. ஜி.கே. வாசன் நிறைவேற்றினார். இந்த வகையில் மறைந்த ஜி.கே. மூப்பனார் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரு காங்கிரஸ்காரராகவே வாழ்ந்து மறைந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள். அவரது நினைவை போற்றுகிற வகையில் அவரது தலைமையின் கீழ் 17 ஆண்டுகாலம் மகிழ்ச்சியுடன் பணியாற்றியவன் என்ற முறையில் இந்த கட்டுரையின் மூலமாக அவரைப் பற்றிய எனது கருத்துக்களை உரிமையோடு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.