ஒன்றின் முடிவு, இன்னொன்றின் தொடக்கம்; புதிய வெற்றிகளைக் கொண்டாடும் நிகழ்வுகள்; இதைத் தெளிவாகப் புலப்படுத்தும் நோக்கு, சரித்திரத்தை உருவாக்கும், மற்றும் அழிக்கும் மக்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கவல்ல பேரார்வம், உறுதிப்பாடு ஆகியவை வரலாற்றின் உன்னதமான தருணங்கள் ஆகும்.
மிகவும் நினைவில் கொள்ளத்தக்க, பரவலாக போற்றப்படுகிற ஜவஹர்லால் நேருவின் உரை, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற கணத்தை உலகுக்கு அறிவிப்பதற்காக அரசியல் நிர்ணய சபை அந்த நள்ளிரவு நேரத்தில் டில்லியில் கூடியது.

‘நள்ளிரவு நேரத்தில், உலகம் உறங்கிகொண்டிருந்த வேளையில் தனது வாழ்வையும், சுதந்திரத்தையும் அமைத்துக்கொள்வதற்காக இந்தியா விழித்தெழுந்தது’. உயரமான கவிகை மாடத்தைக் கொண்டிருந்த சட்டமியற்றும் மத்தியப் பேரவை மண்டபத்தில் இரவு 11 மணிக்குத் தொடங்கிய விழாவில் உணர்ச்சி பொதிந்த தமது உரையில் நேரு இப்படிப் பொருத்தமாக அறிவித்தார்.
பேசக்கூடிய வாய்ப்பு வந்தபோது, நேருவின் சொற்கள் ஒரு கவிதையைப்போன்று உணர்ச்சி மிக்கதாகப் பிரவாகமெடுத்தன. அந்த காலகட்டத்தின் மிக உயரிய தேசியத் தலைவராக இருந்த அவருக்கு, கொந்தளிப்பான காலத்தில் விதியின் குழந்தையாக இருந்த அவருக்கு, செயல்படும் வாய்ப்பு சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அந்த இரவில் தரப்பட்டது. பண்டைய நாகரிகத்தின் உந்துதல்கள், பிரிட்டிசாரிடம் இருந்து விடுதலை பெற்று புதிய அமைப்பில் இந்தியா மலர முனைவது ஆகியவை பற்றி தங்குதடையின்றி ஒரே வீச்சில் அவர் மடை திறந்தாற்போல பேசினார்.
ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் வருகைக்காக வைஸ்ராய் மாளிகையில் மெளண்ட்பேட்டன் காத்திருந்தார். நள்ளிரவைத் தொட்டதும் வைஸ்ராய் மாளிகை கவர்னர் ஜெனரல் மாளிகையாக மாற்றம் கண்டது. ராஜேந்திர பிரசாத்தும், ஜவஹர்லால் நேருவும் அந்த அரங்கத்தில் இருந்து வெளியே கிளம்பியபோது தங்களின் வாகனங்களை சென்றடைவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அரசியல் நிர்ணய சபை வாயிலில் மக்கள் திரள் அப்படி அலைமோதிக்கொண்டிருந்தது.அந்தக் கூட்டம் மகிழ்சியாகவும் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் இருந்தது.
கிழக்கிந்திய கம்பெனி காலம் முதற்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலம் வரை ஏறக்குறைய 200 ஆண்டுகளில் தேசம் முழுவதும் நடந்த போராட்டங்களில் ஏராளமான பொதுமக்களும், விடுதலைப் போராட்ட வீரர்களும் துன்பங்களைத் தாங்கிகொண்டு தியாகங்களைச் செய்திருந்தனர். 1857இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து, சுதந்திரத்தை விரும்பிய அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்த ஒரு அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. இந்தச் சிப்பாய்க் கலகத்தின் துன்பங்களையடுத்து, ராணி விக்டோரியா ஆட்சியின்கீழ் இந்தியா வந்துவிட்டதாக செய்யப்பட்ட பிரகடனம் தேசத்தை முழுமையாக ஆட்டுவித்தது.
1947 ஆகஸ்ட் 15 அன்று காலையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு மெளண்ட்பேட்டனால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட இருந்தநிலையில், அரசியல் நிர்ணய சபையில் ‘விதியினை எதிர்கொள்வோம்’ என்று உரையாற்றினார். தேசத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி ஒரு வரலாற்று மாணவனாலும், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரியார் ஆகியோருடன் தோளொடு தோள் நின்று விடுதலைக்குப் போராடிய ஒருவராலும் மட்டுமே இத்தகைய அரிய சொல்வன்மையோடு கூடிய உரையை நிகழ்த்த முடியும்.
வகுப்புவாத கலவரத்தை அடக்குவதற்காக காந்தியடிகள் கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். இந்த மிக முக்கியமான அந்தத் தருணத்தில் காந்தியடிகள் டில்லியில் இல்லை. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆகியிருந்த பெளண்ட்பேட்டன், ஆகஸ்ட் 15 தமது வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத் தகுந்த, உற்சாகம் மிகுந்த நாளாக மாறியிருப்பதாகக் கூறினார்.
அரசியல் நிர்ணய சபைக்கு வெளியிலும், நாடு முழுவதிலுமாக மக்களின் கொண்டாட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்றன. செங்கோட்டையில் நேரு தேசியக்கொடியை ஏற்றிய உடனேயே கொண்டாட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன.
வீதிகள் தோறும் மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, சுதந்திரம், சகோதரத்துவத்தின் பிணைப்பை வெளிப்படுத்தினர். ‘சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ (ஆசாத் ஹை) என்று பொது இடங்களில் உற்சாக முழக்கமிட்டனர்.
இந்த நாள், சின்னஞ்சிறு குதூகல கொண்டாட்டங்களுடன் வரலாற்றில் போதுமான அளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குக்கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலைநகரங்களிலிருந்து டெல்லி வரை இதற்குமுன் இல்லாத அளவுக்குக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதற்கு இது சான்று கூறுகிறது.
இந்தியாவும், நேருவும் இந்த இலக்கை அடைவதற்கான கடினமான பணியை மேற்கொண்டனர். சுதந்திரம் கிடைத்தபோது நேருவுக்கு வயது 58. அந்த 58 ஆண்டுகால வாழ்க்கையில் 27 ஆண்டுகள் அரசியலில் கடும் உழைப்பிலும், போராட்டங்களிலும் செலவாயின. பத்து ஆண்டுகளுக்குமேல் சிறைவாசத்தில் கழிந்தன.
உலகம் உறங்கிக்கொண்டிருந்தபோது…

டில்லி அரசமைப்புச் சட்ட அரங்கில் (Constitution Hall) அரசியல் நிர்ணய சபை 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் கூடியது.
தலைவர்: நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடல். (திருமதி கிருபளானி பாடினார்)
தலைவர்: இந்தியாவிலும், பிற பகுதிகளிலும் சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாம் அனைவரும் அமைதியாக எழுந்து நிற்கவேண்டும்.
தலைவர்: இப்போது, பண்டித ஜவஹர்லால் நேரு, உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டுவருவார்.
நேரு பேசியபோது அவருடைய முகம் மாற்றம் அடைந்தது. சோர்வான வார்த்தைகள் அகன்றிருந்தன. ஆரம்பத்தில் கீழ் ஸ்தாயியிலும், கரகரப்புடனும் இருந்த அவரது குரல், உரத்து ஒலிக்க ஆரம்பித்தது. திடீரென துடிப்புடன் மிதக்கும் நிலைக்குச் சென்றது. நேருவின் மந்திரம் போன்ற மொழி வியக்கத்தக்க வகையில் எழுச்சியூட்டுவதாக இருந்தது. அதை அவருடைய வார்த்தைகளிலேயே சுவைத்து அனுபவிப்பதே சிறந்தது:
“நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு நாம் விதியுடன் சந்தித்துக் கொண்டோம், நம்முடைய வாக்குறுதியை முழுமையாகவோ, முழுவீச்சிலோ அல்லாமல் மிகவும் கணிசமான அளவில் மீட்டெடுத்தாகவேண்டிய தருணம் வந்திருக்கிறது. நள்ளிரவு 12 மணி அளவில், உலகம் உறங்கிகொண்டிருக்கிற வேளையில் இந்தியா விழித்தெழுந்து உயிர்ப்பையும் விடுதலையையும் பெறுகிறது. ஒரு காலகட்டம் நிறைவடைந்து பழையதிலிருந்து புதுமைக்கு மாறும் நிலையில், நீண்ட நெடிய காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா பேசத் தொடங்கும் போதுதான் வரலாற்றில் அரிதான ஒரு தருணம் வருகிறது. இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் இன்னும் விரிவான நிலையில் மனிதகுலம் அனைத்திற்குமான சேவைபுரிவதற்கு இத்தகைய புனிதமான ஒரு தருணத்தில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்ளும் உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது ஆகும்.
“வரலாற்றின் விடியலில், இந்தியா தனது முடிவற்ற தேடலைத் தொடங்கியுள்ளது. திக்கு தெரியாத பல நூற்றாண்டுகள், இந்தியாவின் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் சார்ந்த அதன் தீவிர முயற்சிகளினாலும், தோற்றப் பொலிவினாலும் நிரம்பியுள்ளன. நல்லது, கெட்டது எது நடந்திருந்தபோதிலும் இந்தியா தனது தேடலின் பார்வையை ஒருபோதும் இழந்ததில்லை. அதற்கு வலுட்டியிருக்கும் லட்சியங்களையும் மறந்துவிடவில்லை. துரதிருஷ்டமான ஒரு காலகட்டத்தை நாம் இன்றுமுடித்து வைத்திருக்கிறோம். இந்தியா தன்னைத் தானே மீண்டும் கண்டறிந்துகொள்ளும். நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் சாதனை ஒரு தொடக்கம்தான். நமக்காகக் காத்திருக்கும் மகத்தான வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பம் ஒன்றின் தொடக்கம் தான். இந்த சந்தர்ப்பத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்வதற்கும்,வரும் காலத்தின் சவால்களை ஏற்றுக் கொள்வதற்குமான துணிவும், விவேகமும் உள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?
“சுதந்திரமும், அதிகாரமும் பொறுப்புணர்வைக் கொண்டுவருகிறது. இந்தப் பொறுப்புணர்வு இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், இறையாண்மைகொண்ட அமைப்பான இந்த சபையிடமே இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்புவரை உழைப்பின் அத்தனை வலிகளையும் நாம் தாங்கிக்கொண்டோம். இந்தத் துயரத்தின் நினைவுகளில் நமது இதயங்கள் கனத்துக் கிடக்கின்றன. இவற்றில் சில வலிகள் இன்னமும் கூட தொடர்கின்றன. இருந்தபோதிலும், கடந்தகாலம் முடிந்துவிட்டது, எதிர்காலம்தான் இப்போது நமக்கு கண்முன் தெரிகிறது.
“எதிர்காலம் என்பது தொல்லையில்லாததோ, ஓய்வாக இருக்கவேண்டியதோ அல்ல. இடைவிடாத முயற்சியுடன் இருக்கவேண்டியது. அப்போதுதான் நாம் அடிக்கடி மேற்கொண்டிருக்கும் உறுதிமொழிகளையும், நாம் இன்று மேற்கொள்ளவிருக்கும் உறுதிமொழியையும் நிறைவேற்றமுடியும். இந்தியாவிற்கான சேவை என்பது கோடிக்கணக்கான துன்புறும் மக்களுக்கான சேவை. வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்பையே இது குறிக்கிறது.
“நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிக உயரிய மனிதரின் லட்சியம், ஒவ்வொருவரின் கண்களிலிருந்தும் வழிந்தோடும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதே ஆகும். இது நமக்கு எட்டாததாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்ணீரும், வேதனைகளும் இருக்கும் வரையிலும் நம்முடைய வேலை முடியப்போவதில்லை.
“ஆகவே நாம் உழைத்தாக வேண்டும். வேலை செய்தாக வேண்டும். நம்முடைய கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் கடினமாக உழைக்கவேண்டும். இந்தக் கனவுகள் இந்தியாவிற்கானவை. ஆயினும், நாம் தனித்து வாழ்ந்துவிட முடியுமென்று ஒருவரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா தேசங்களும், மக்களும் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து இருப்பதால், இந்தக் கனவுகள் உலகம் முழுவதிற்கும் ஆனவையும் கூட. அமைதி என்பது பிரிக்க முடியாதது. சுதந்திரமும் அப்படியே. வளமும், பேரழிவும் கூட இந்த உலகிற்குத் தொடர்பில்லாத தனித்தனித் துண்டுகளாகப் பிளவுபடுத்த முடியாதவை.
“இந்திய மக்களை அவர்களின் பிரதிநிதிகளாகிய நாம், இந்த மாபெரும் வீரச் செயல்களுக்குத் திடமான நம்பிக்கையுடன் எங்களுடன் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அழிவுக்கு இட்டுச்செல்லும் அற்பமான விமர்சனங்களுக்கு இது உகந்த நேரமல்ல. பகைமை பாராட்டுவதற்கோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதற்கோ இது சமயமல்ல. இந்தியாவின் குழந்தைகள் அனைவரும் வாசம் செய்யக்கூடிய சுதந்திர இந்தியா என்ற உன்னதமான மாளிகையை நாம் கட்டி எழுப்பவேண்டும். ( 1947ஆகஸ்ட் 14 அன்று, அரசியல் நிர்ணய சபையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை – தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள், தொகுதி−1, பக்கம் 25 )
இவ்வுரை அந்த நேரத்திற்குரிய பொருத்தமான பேச்சாக இருந்தது. ஜவஹர்லால் நேரு இதுவரை ஆற்றியிருக்கும் உரைகளிலேயே மிகவும் சிறப்பானது. இது விடுதலைச் சாசனம் என்பதைவிடவும், நம்பிக்கை ஒப்பந்தமாக இருந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்ச்சிமிகுந்த உரையை நிகழ்த்தியபிறகு, நேரு கொண்டுவந்த தீர்மானம்:
ஐயா, இந்தத் தீர்மானத்தை நான் பணிந்து முன்வைக்கிறேன். இப்படி தீர்மாணிக்கப்படுகிறது :
நள்ளிரவு முடிவுறும்போது அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி பின்வரும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம்.
‘புனிதமான இந்தத் தருணத்தில், இந்திய மக்கள் தங்கள் தியாகத்தினாலும், துன்பங்களின் மூலமும் சுதந்திரத்தை அடைந்திருக்கும் வேளையில், நான்…,இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகிய நான், பழமையான இந்த தேசம் உலகில் தனக்கு உரிமையுள்ள இடத்தை அடையும் வரையிலும், உலக அமைதியையும், மனிதகுல நன்மையையும் மேம்படுத்துவதில் தனது முழுமையான, மனமுவந்த பங்களிப்பை நல்கும் வகையிலும் இந்திய தேசத்திற்கும் அதன் மக்களுக்குமான சேவையில் என்னை நானே அர்ப்பணித்துக்கொள்கிறேன்.’
தங்களின் பதிவுகள் காங்கிரஸ் காரனுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கிறது
நன்றி!