1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூன் 23 இல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில், மெளலானா அபுல்கலாம் ஆஸாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார், கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தனிக் குழு ஒன்றைச் சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைத்தது. அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 இல் இந்தியாவிற்கான புதிய மூவண்ணக்கொடியாகக் கொடியின் வெள்ளைப்பகுதியின் மத்தியில் ராட்டை சின்னத்திற்குப் பதிலாக, தர்மசக்கரத்துடன் கூடிய (அசோகப் பேரரசின் சட்டம், நீதிக்கான சக்கரச் சின்னம்) கொடியை ஏற்றுக்கொண்டது. ஜவஹர்லால் நேரு புதிய கொடியை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் கொண்டுவந்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி, என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் உரை ஒன்றை வழங்கினார்.
நேரு ஆற்றிய உரை:
“இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருமாறு என்னை பணித்திருப்பது பெருமிதம் தரும் தனிச் சிறப்பு என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இப்போது இந்தக் கொடியைப் பற்றி நான் சில வார்த்தைகள் கூறலாமா?
“கடந்த காலங்களில் நம்மில் பலரும் பயன்படுத்தி வந்த கொடியிலிருந்து இந்தக் கொடி சிறிது மாறுபாட்டு இருப்பது நமக்குத் தெரிகிறது. இதில் உள்ள வண்ணங்களில் மாற்றமில்லை − அடர்குங்குமப்பூ நிறம், வெள்ளை, கரும்பச்சை. முன்பு கொடியின் வெள்ளை நிறப்பகுதியில் இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும் அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தி வழங்கிய போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் இருந்தது. தற்போது, இந்த ராட்டைச் சின்னம நீக்கப்படாமல், இந்தக் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த மாற்றம்? சாதாரணமாகப் பார்க்கும்போது, கொடியின் ஒருபக்கம் இருக்கும் சின்னம் மறுபக்கத்திலும் அதேவிதமாகத் தெரியவேண்டும். அப்படி இல்லாவிடில் அது நடைமுறை விதிகளுக்குப் புறம்பானதாகப் போய்விடும்.
“முன்பு, இந்தக் கொடியின் ஒரு முனையில் ராட்டையின் சக்கரமும், மறுமுனையில் நூல் நூற்கும் பகுதியும் இருக்கும். இதைப் பார்க்கும்போது கொடியில் ஒருபக்கத்தில் இருப்பதைப்போன்றே மறுபக்கத்திலும் தெரிவதில்லை. இதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. ஆகவே, தீவிரமான சிந்தனைக்குப் பிறகு, மக்களுக்கு உற்சாகம் அளித்து வந்த ராட்டைச்சின்னம் தொடர்ந்து சற்று மாறுபட்ட வடிவத்தில் இடம்பெற்றாக வேண்டும். ராட்டையின் நூல் நூற்கும் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு முக்கியமான சக்கரத்தை மட்டும் இடம்பெறச் செய்வதற்கு ஒப்புக்கொண்டோம். இவ்வகையில், ராட்டை, சக்கரம் ஆகியவற்றோடான நமது பழமையான பாரம்பரியம் தொடரும்.
“ஆனால், எந்த விதமான சக்கரம் நமக்கு இருக்கவேண்டும்? எங்களது சிந்தனை பலவிதமான சக்கரங்களை நாடியது. ஆனால், குறிப்பாகப் பல பகுதிகளிலும் காணப்படும், நாம் அனைவருமே பார்த்திருக்கும், அசோக ஸ்தூபியில் உள்ள புகழ்வாய்ந்த சக்கரத்தின்மீது எங்கள் அனைவரின் சிந்தனையும் மையம் கொண்டது. இந்தச் சக்கரம் இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் சின்னம்; இந்தியா காலம்காலமாக எவற்றுக்காகவெல்லாம் பாடுபட்டதோ அவற்றையெல்லாம் சித்தரிக்கும் சின்னம். ஆகவே, இந்த அசோகச் சக்கரம், கொடியில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அவ்வாறே சக்கரம் இடம் பெற்றிருக்கிறது.
“என்னைப் பொருத்தவரை நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நம்முடைய கொடியின் உருவாக்கத்தில் இந்தச் சின்னத்தை நாம் இணைத்துள்ளோம். இந்தச் சின்னத்தை மட்டுமல்லாமல், இந்திய வரலாற்றின் மிக அற்புதமான பெயர்களுள் ஒன்றாகிய அசோகரின் பெயரையும் ஒரு விதத்தில் மறைமுகமாக இணைத்திருக்கிறோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையில் 1947 ஆகஸ்ட் 16 அன்று தேசியக்கொடியை முதல்முறையாக ஏற்றி பட்டொளி வீசிப் பறக்க வைத்தார். அன்று தொடங்கி, தேசியக்கொடியை நேரு செங்கோட்டையில் 17 முறை ஏற்றினார். இதுவரை இந்தியாவின் எந்தப் பிரதமரும் ஏற்றி இராத அதிகபட்சமான எண்ணிக்கையாகும் இது.