ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் ஆசிரியர் வேதநாயகம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிகளுக்கு 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மகனாக பிறந்தார் இமானுவேல் சேகரன்.அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தில் பிறந்ததால், சிறு வயதில் இருந்தே இன விடுதலையை கையில் எடுத்து போர்க் குணத்தோடு வளர்ந்ததோடு, இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயேர்கள் மீதும் ஆவேசப்பட்டார்.
தந்தை வேதநாயகத்தோடு சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். வெள்ளையனே வெளியேறு போராட்டம் தான் இமானுவேல் சேகரனை எதிர்காலத்தில் தேசமே திரும்பிப் பார்க்கும் களமாக அமைந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்தார். அப்போதும், தன் சமூகத்தின் மீதான அடக்குமுறை சங்கிலியை தகர்த்தெறிய வேண்டும் என்ற வெறி, அவருள் வளர்ந்து கொண்டிருந்தது.
தமது 19 ஆவது வயதில், அருப்புக்கோட்டையில் தலித்துகளுக்காக உருவாக் கப்பட்ட இரட்டைக் குவளை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த முறையை அகற்ற மாநாடு நடத்தி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனையடுத்து, தமது சமுதாய மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக வலம் வரத் தொடங்கினார்.
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தியாகி இமானுவேல் சேகரன், கல்லூரி வாழ்க்கையிலிருந்தே தம்மை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர். 1943 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கான தன் சேவையையும் வழங்கியிருக்கிறார். ராணுவத்தில் அவில்தாராக பொறுப்பேற்ற அவர், இதன்மூலம் ஆங்கிலம், இந்தி, உருது உள்ளிட்ட 7 மொழிகளைக் கற்றறிந்தார். 1950 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விடுப்பில் வந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இதனையடுத்து, ஒடுக் கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன்பின்னர், காமராசரின் அழைப்பை ஏற்று காங்கிரஸில் இணைந்து இமானுவேல் சேகரன் பணியாற்றினார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி முதுகுளத்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்குப் பின், அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சாதிய மோதலில் கொலை செய்யப்பட்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தமது 33 ஆவது வயதில் இந்த உலகை விட்டு இமானுவேல் சேகரன் மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். ஒப்பற்ற தலைவனின் சேவையை நினைவுகூறும் வகையில், அவரது நினைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்திய அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது.