மகாத்மாவின் ஆசி
ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஓர் இளைஞரை ராஜாஜி அவர்கள் சென்னை இந்தி பிரசார சபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன் பின் சின்ன அண்ணாமலையைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவரென்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானை சிறையை உடைத்து மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன். அந்தப் போராட்டத்தில் பலபேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன்.
ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஸ்ரீ சின்ன அண்ணாமலையை சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்ப பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்த ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எம். கே. காந்தி
ஹரிஜன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை
ராஜாஜியின் ஆசி
எனக்கு மிகவும் பிடித்தமானவர்களின் சின்ன அண்ணாமலை முக்கியமானவர். தெய்வபக்தியும், தேசபக்தியும், தமிழ் பக்தியும் நிறைந்தவர். இவருடைய வாழ்க்கை வீரம் நிறைந்தது. காந்தீய வழியில் தொண்டு செய்யும் உள்ளம் கொண்டவர்.
பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச் சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார். அதனால் இவரை நான் ‘உற்சாக எரிமலை’ என்று பாராட்டிப் பேசியிருக்கிறேன். இவருடைய குணம் விசேஷமானது. இவர் மற்றவர்களுக்காகவே உழைப்பவர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளமாட்டார். இதுவரையில் என்னிடம் இவர் தனக்கென்று எதையும் கேட்டது கிடையாது. தமிழுக்கு நிறையத் தொண்டு செய்திருக்கிறார்.
‘தமிழ்ப் பண்ணை’ என்ற புத்தகப் பிரசுரம் மூலம் பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் லாபம் கருதாமல் வெளியிட்டிருக்கிறார். என்னுடைய நூல்களை வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி.
சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி
‘கண்டிறியாதன கண்டேன்’ நூல் வெளியீட்டு விழாவில்
காமராசரின் ஆசி
நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.
இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்தியம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று வந்தேமாதரம் என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.
ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தது. 24 மணிநேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்துவிட்டார்கள்.
இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.
இவர் நான்கு முறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்யாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி அவர்களால் சத்யாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப்பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.
தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி தமிழ்நாட்டோடு சேர தலைநகராகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆந்திராவுக்குப் பங்கு பிரித்துக் கொடுக்கக் கூடாதென்றும் நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கேற்று, அதற்காகவும் சிறை சென்றார். இப்படி வாழ்க்கையில் பெரும்பகுதி போராட்டம், சிறை என்றே கழித்துவிட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத இவருடைய மனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
திரு. சின்ன அண்ணாமலை எழுதிய ‘தியாகச் சுடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி.
பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்த்து
நண்பர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை பெரும்பாக்யசாலி. ராஜாஜி அவர்களின் திருவாக்கினால் சின்ன அண்ணாமலை என்ற சிறப்புப் பெயரை அடைந்தவர். அவரை என் சிறந்த நண்பராகக் கருதி வருகிறேன். பல இடங்களுக்கு அவருடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அவரது தேச சேவை மகத்தானது. அதை எழுதினால் ஒரு வீரசரித்திரமாக இருக்கும்.
ஸ்ரீ சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர். பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய சபையில் மணிக்கணக்கில் பிரசங்க மாரி பொழியக் கூடியவர். ஆவேசமாகப் பேசுவார்; அழவைக்கும்படி பேசுவார்; சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார். இவருடைய பேச்சாற்றலைப் பார்க்கும் போது இவரைப் போன்றவர்கள் நமது சட்டசபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்று நான் எண்ணுவது உண்டு.
பேசும் ஆற்றலைப்போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஸ்ரீ சின்ன அண்ணாமலை. அழகிய சிறு கதைகள் எழுதியிருக்கிறார். சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். ரஸமான பிரயாணக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவருடைய செயல்திறன் வியக்கத்தக்கது. எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் செயல் வீரர் இவர். ராஜாஜி அவர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ராஜாஜியின் நெருங்கிய நண்பர்கள் இவரை ‘சின்ன திருவடி’ என்று செல்லமாக அழைப்பார்கள். ராஜாஜியின் நூல்களை இவர் ‘தமிழ்ப் பண்ணை’யின் மூலம் பிரசுரித்த விதமே ஒரு பக்தியானது.
ரஸிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் சொன்னது போல, சின்ன ‘அண்ணாமலையைப் போல ஒரு நண்பர் கிடைப்பதற்கு எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்.’
அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.
சின்ன அண்ணாமலை எழுதிய ‘காணக் கண்கோடி வேண்டும்’ என்ற நூலின் முன்னுரையில் கல்கி – ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதியது.
என்னுரை
இந்நூலை நான் எழுதுவதற்குத் துண்டுகோலாக இருந்தது ‘குமுதம்’ பத்திரிகையே.
‘குமுதம்’ பத்திரிகை ‘போனஸ்’ வெளியீடாகச் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டபோது, என் வாழ்க்கையில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களைத் தொகுத்து எழுதும்படி பணித்தார்கள். அதற்காகச் சில சம்பவங்களை எழுதிக்கொடுத்தேன். ‘குமுதம்’ போனஸ் வெளியீடாக வந்தபோது பலரும் படித்துப் பாராட்டினார்கள்.
அதைப்போல இன்னும் பல சம்பவங்கள் என்வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அவைகள் பலவற்றையும் தொகுத்து எழுதியபோது அது ஒரு பெரிய நூலாக வடிவெடுத்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது.
ஓர் எளிய தொண்டனின் வாழ்க்கையில் நடைபெற்ற சில விசித்திரச் சம்பவங்களின் தொகுப்புதான் இந்நூல். படிக்க சுவாரஸ்யமாக இருந்தால் அது போதும். அச்சாகும்போதே படித்துப் பார்த்த சில மேதைகள், மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
அது முகஸ்துதி அல்ல, உண்மை என்றே நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
அன்பன்
சின்ன அண்ணாமலை
பிப்ரவரி, 1978