மகாத்மா காந்தி தமது ‘ஹரிஜன்’ ஏட்டில், “இந்தியாவைவிட்டு வெளியேறு – QUIT INDIA’ என்ற தலைப்பில் முக்கியமான கட்டுரைகள் எழுதி, வெகுஜன அபிப்பிராயத்தைத் திரட்டினார்.
1942 ஜூலை 14இல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, மகாத்மாவின் கட்டுரைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
1942 ஆகஸ்டு 8இல், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவை விட்டு வெளியேறு – QUIT INDIA’ தீர்மானத்தை நிறை வேற்றியது.
பிரிட்டிஷ் அரசாங்கம், ஆகஸ்டு 9ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கு, மகாத்மா காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியது. உடனிருந்த அவருடைய செயலாளர் மகாதேவ தேசாயும் கைது செய்யப்பட்டார்.
பம்பாய் நகரில் தடைச் சட்டத்தை மீறியதற்காகத் திருமதி. கஸ்தூரிபாவும் கைது செய்யப் பட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர்கள் எல்லாரையும் மகாத்மா காந்தி யுடன் ‘தற்காலிகச் சிறை முகாம்’ என்றழைக்கப் பட்ட பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகை யிலேயே சிறை வைத்தனர்.
காங்கிரஸ் கட்சி, சட்ட விரோதமான ஸ்தாபனம் என்றும் அரசு அறிவித்தது. எங்கும் அவசர கால சட்டங்கள் புகுத்தப்பட்டன. நாட்டிலுள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் புகுந்து, சோதனைகள் நடத்தி, தஸ்தாவேஜிகளைப் பறிமுதல் செய்தனர். காங்கிரஸ் ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மிருகத்தனமான அடக்குமுறைகளைப் போலிசார் ஏவி விட்டனர். இதனால் நாடெங்கும் ஆர்பாட்டங்களும் கலகங்களும் ஏற்பட்டன.
போராட்டத் திட்டம் வகுத்து, வழிகாட்டுவதற்குத் தலைவர்கள் இல்லாத நிலையில், மக்கள் தாங்கள் நினைத்தபடி போலிசையும் ராணுவத்தினரையும் எதிர்த்து வன்முறைகளில் துணிந்து இறங்கினார்கள்.
1942 ஆகஸ்டு புரட்சி!
பம்பாயில் ஆகஸ்டு தீர்மானம் நிறைவேறியவுடன், காங்கிரஸில் உள்ள அனைவரும் அஹிம்சை வழியில் போராடினார்கள் என்று சொல்லமுடியாது! தீர்மானம் நிறைவேறிய மறுநாள் அதிகாலை காந்திஜி உள்பட எல்லாத் தலைவர்களும் கைதானார்கள். இப்படி நடக்கு மென்று ஏற்கெனவே கணித்திருந்த அச்சுத்பட்டவர்த்தனும் லோகியாவும் அருணா ஆசப் அலியும் ஆகஸ்டு 8ஆம் தேதி இரவே தலைமறைவாயினர். 1940இல் கைது செய்யப்பட்ட ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வந்தார்.
மிட்னாபூர், சதாரா பகுதிகளில் அச்சுத்பட்டவர்த்தன் போட்டி அரசாங்கம் நிறுவினார். அந்தப் போட்டி அரசாங்கத்திற்கு மக்கள் வரி செலுத்தினார்கள். இவ்வாறு நாட்டில் புரட்சித்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது, ஹஜாரிபாக் சிறையில் அடைந்து கிடப்பது ஜெயப் பிரகாஷுக்கு வெறுப் பாக இருந்தது. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிப் புரட்சியை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டுமென்று அவர் துடித்துக்கொண்டிருந்தார்.
ஒப்பற்ற செயல்வீரரும் விவசாயிகளின் தலைவருமான ரமா நந்தன் மிஸ்ரா, சூரஜ் நாராயண் சிங் ஆகியோரிடம் ரகசியமாக ஆலோசனைகள் நடத்தி, ஒரு திட்டம் தயாரித்தார். 1942 தீபாவளியன்று இரவு, ஜெயப் பிரகாவும் மற்றும் ஐந்து நண்பர்களும், 8 மீட்டர் உயரமுள்ள மதில் சுவர்களைத் தாண்டி சிறையிலிருந்து வெளியேறினர்.
ஜீகல் கிஷோர், லோகியா, கேஸ்கர், திவாகர், சுசேதா கிருபளானி, அருணா ஆசப் அலி, யூசுப் மேகரலி, அச்சுத்பட்டவர்த்தன் போன்றோர், பம்பாயில் தலைமறைவாக இருந்து புரட்சி இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஜெயப்பிரகாஷ் தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் திட்டங்களை முறியடிக்கக் கொரில்லாப்படை ஒன்றைத் திரட்ட முடிவு செய்தார். இதற்காகப் போராட்டத் திட்டம்’ என்ற சிறு வெளியீடு தயாரித்து நாடு முழுவதும் அனுப்பினார்.
பிரிட்டிஷ் வன்முறையின் சின்னங்களான போலிஸ் நிலையங்களுக்குத் தீ வைத்தல், தந்திக் கம்பிகளை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்து எறிதல், யுத்த தளவாடங்களை ஏற்றிச் செல்லும் ரயில்களைக் கவிழ்த்தல்’ இவையெல்லாம் கொரில்லாப்படையின் ரகசியத்திட்டங்களாகும். அரசாங்கத்தின் ஈவு இரக்கமற்ற கொடுங்கோன்மைக்கு இந்திய மக்கள் கொடுக்கும் பதிலடி அது!
‘மனித உயிர்களைப் போக்குவதைத் தவிர, மற்ற எல்லா வகையான நாச வேலைகளும் அஹிம்சை தத்துவத்திற்கு ஒப்பானவைதான்’ என்று புது விளக்கம் தரப்பட்டது.
‘கலவரங்களுக்கு யார் பொறுப்பு’ என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட நூலுக்குக் காந்திஜி தெளிவாகவே பதில் சொன்னார்.
“ஜெயப்பிரகாஷ் வன்முறையாளர் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. அப்படியானால், அந்தக் குற்றவாளிகளின் பட்டியலில் முதலில் இடம் பெறவேண்டியது அரசாங்கமே! கிளைவ், ஹேஸ்டிங்ஸ் முதலியவர்கள் இந்திய மக்களின் ரத்தத்தைச் சிந்தி, ஆட்சியை நிலைநாட்டினர். இந்தியாவில் அவர்களுடைய ஆட்சி வன்முறை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஜெயப்பிரகாஷை ஒரு வன்முறையாளர் என்று சுட்டிக்காட்டும் உரிமை இந்த வன்முறை அரசுக்கு இல்லை” என்றார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடந்ததால், ஏராளமான தேசபக்தர்கள் மீது சதி வழக்குகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் போட்டது.
விமான தளம் நாசம்
1942 ஆகஸ்டு மாதம் மகாத்மா காந்தியும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த கோவை மக்களும் தொழிலாளர் தோழர்களும் கொதிப்படைந்தனர். என். ஜி.ராமசாமி தலைமையில் மாபெரும் தொழிலாளர் பேரணி நடத்தினர். விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தத் திட்டங்களை வகுத்தனர். இதனால் என். ஜி. ராமசாமியும் ஏனைய தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் செய்தி கேட்டுப் புரட்சி வீரர்கள் ஆத்திரம் கொண்டனர். இரயில் தண்டவாளங்களைத் தகர்த்தெறிந்தனர். போர்த் தளவாடங்களை ஏற்றி வந்த இரயில் கவிழ்ந்தது! தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன!
சூளூர் விமான தளம், புரட்சி வீரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. தலைமறைவானவர்கள் போகப் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைக்குள் அடைக்கப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் வார்த்தையால் சொல்ல இயலாது!
உப்பள முற்றுகை!
நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்திலுள்ள உப்பளத்திலிருந்த காவலர்களைக் கட்டிப் போட்டு விட்டு, அவர்களது துப்பாக்கிகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றிக் கொண்டனர். காவலிலிருந்த துணை இன்ஸ்பெக்டர் ‘லோன்’ என்ற வெள்ளையரை வெட்டி வீழ்த்தினர். புரட்சியாளர்களும் படுகாயமடைந்தனர்.
சீர்காழி சதி!
சீர்காழியிலுள்ள உப்பனாற்றுப் பாலத்தை வெடி வைத்துத் தகர்க்கச் சதி செய்தனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகள் நடத்தினர்.
தேவகோட்டைப் புரட்சி!
1942 ஆகஸ்டு போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டதற்காகப் புரட்சி மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்த போலிஸார், திருவாடானை சப்-ஜெயிலில் காவலில் வைத்தனர். அவர்கள் கைது செய்யப் பட்டதைக் கேள்விப்பட்ட மக்கள், தங்கள் எதிர்ப்பைக் காட்ட கடை அடைப்புப் போராட்டம் செய்தனர். கூட்டத்தைக் கலைக்கப் போலிஸார் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் சுட்டதில் மூன்று பேர் இறந்தது கண்டு, மக்கள் மேலும் கொதித்தெழுந்தனர். ஆத்திரம் கொண்ட மக்கள் கோர்ட்டுக்குத் தீ வைத்தனர். மேசை, நாற்காலி, தஸ்தாவேஜிகள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. ராணுவம் வரவழைக்கப்பட்டது!
திருவாடானை சப்- ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களை விடுவிக்க, புரட்சி எண்ணம் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து, சிறைக் கதவின் பூட்டை உடைத்து. “விடுதலை!… விடுதலை!…” என முழங்கிக்கொண்டு கைதிகள் எல்லாரையும் விடுவித்தனர். |
தாலுகா அலுவலகம், மாஜிஸ்டிரேட் கோர்ட் ஆகியவற்றையும் புரட்சிக் கூட்டனத்தினர் தீ வைத்துக் கொளுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த திருவாடானை, இன்றும் தேசபக்தியை நாட்டுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திருவாடானை கலவரத்தையொட்டி, 147பேர் களைக் கைது செய்தனர். தேவகோட்டை கலவரத்தில் 110பேர்மீது போலிஸார் கலவர வழக்கு தொடர்ந்தனர்.
1944 பிப்ரவரி 22இல் அன்னை கஸ்தூரிபா சிறையிலேயே மரணம் அடைந்தார். மனித குல வரலாற்றின் ஒப்பற்றத்தலைவர், தமது மனைவியை இருந்தார்! தாம் சிறைப்பட்ட போதெல்லாம் சேர்ந்து சிறைப்பட்ட மனைவியை இழந்ததுயரால் மகாத்மாவின் கண்களில் நீர் ததும்பியது!
மறைந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை, மகன் தேவதாஸ் காந்தி சிறையிலே செய்தார். தேசம் முழுவதும் கடை அடைப்பும் அனுதாபக் கூட்டங்களும் நடந்தன. பிறகு, மகாத்மா காந்தியின் செயலாளர் மகாதேவ தேசாயும் இறந்து போனார். அதைத் தொடர்ந்து மகாத்மாவின் உடல்நிலை கெட்டதால், அவரை விடுதலை செய்யும்படி நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது.
1942 ஆகஸ்டு 9இல் ‘தற்காலிகச் சிறை முகாம்’ என்று அழைக்கப்பட்ட பூனா ஆகாகான் மாளிகையில் சிறைப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி, 21 மாதங்களுக்குப் பின்பு, 1944 மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்!
‘ஆகஸ்டு புரட்சி’யில் ஈடுபட்டு, சிறைக் கொடுமை களை அனுபவித்த தேசபக்தர்களின் நினைவை என்றும் போற்றுவோமாக!