(செப்டம்பர் 5: இன்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 வது பிறந்த நாள்)
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமை வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களுக்கு உண்டு. விடுதலைக்கு முதல் முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆகியோரது தியாகமும், வீரமும் நிறைந்த வரலாறுகளை, தமது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்பதுபோல மேடைக்கு மேடை பேசி, புத்தகங்கள் எழுதி, நாடகங்கள் நடத்த செய்து, திரைப்படமாக எடுக்க சொல்லி நாடறியச்செய்ய ஓய்வறியாமல் உழைத்தவர் சிலம்பு செல்வர் ம.பொ.சி.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவி, செயல்படவேண்டும் என்பதில் வ.உ.சிதம்பரனார் மிகவும் உறுதியாக இருந்தார். இந்த முயற்சிக்கு ஆங்கிலேயர்கள் பல தடைகளை உருவாக்கினார்கள். அவற்றையெல்லாம் முறியடித்து 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனம் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இவரது கடும் முயற்சியால் ‘காலியா’ மற்றும் ‘லாவோ’ என்ற இரண்டு கப்பல்கள் 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. இவை கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையே பயணக்கப்பல்கள் ஆயின. இந்த சுதேசி கப்பல் இயங்குவதற்கு ஆங்கிலேயர்கள் செய்த இடையூறுகள் ஏராளம்.
பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக கட்டணத்தை அடியோடு குறைத்தார்கள். கட்டணமே இல்லை. இலவச பயணம் செய்யலாம் வாருங்கள் என்று அழைத்தார்கள். இப்படி எத்தனையோ தந்திரங்களைக் கடைப்பிடித்தும் ஆங்கிலக் கப்பல் கம்பெனியின் சரிவை அவர்களால் தடுத்த நிறுத்த முடியவில்லை. சிதம்பரனாரை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சுதேசி கம்பெனியிலிருந்து விலகச் செய்து விட்டால், அத்தோடு அந்த கம்பெனி முழுகிப் போய்விடும் என்று போட்ட திட்டத்தையும் சிதம்பரனார் தகர்த்து விட்டார்.
இனி ஒரே வழி, சிதம்பரனார் மீது ஏதாவது ஒரு பொய் வழக்குப் போட்டு அவரை சிறையில் தள்ளி, சுதேசி கம்பெனி வளர்ச்சியில் பங்கு கொள்ளாமல் தடுப்பது தான் என்ற முடிவுக்கே அவர்களால் வர முடிந்தது. சிதம்பரனாரைச் சிறையில் தள்ளுவது எப்படி ?
அதற்கான பொன்னான வாய்ப்பு ஒன்று, அவர்கள் எதிர்பாராத விதத்தில் விரைந்து வந்தது. கப்பல் கம்பெனியாரின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது போல், பிரிட்டிஷ் அரசு, சிதம்பரனார் மீது ராஜ துரோகக் குற்றம் சாட்டி வழக்குப் போட்டது.
1908-ம் ஆண்டு , பிப்ரவரி மாதம் 23, 26 ஆகிய தேதிகளிலும், மார்ச் 1, 3 ஆகிய தேதிகளிலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிடும் வகையில் சிதம்பரனார் பேசினார் – இது முதல் குற்றம் சுப்பிரமணிய சிவா என்ற ராஜ துரோகியுடன் ஆங்கிலேயர் அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி, சதி – இது இரண்டாவது குற்றம்.
இந்த இரு குற்றச்சாட்டுகளின் மீது நீதிபதி பின்ஹே என்பவர் முன்னிலையில் நடந்த வழக்கின் முடிவில் சிதம்பரனாருக்கு ராஜ துவேஷப் பேச்சுக்காக இருபது வருடத் தீவாந்திர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்து ஆங்கில அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததற்காக இன்னொரு 20 வருடத் தீவாந்திர தண்டனையும் விதிக்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 40 வருடங்கள் சிதம்பரனார் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
தண்டனையை எதிர்த்து சிதம்பரனார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை தலா பத்து ஆண்டுகள் சிறை வாசம் என்று குறைத்தது. இரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் 10 வருடங்கள் மட்டும் அனுபவித்தால் போதும் என்று அது உத்தரவிட்டது.
இன்றைக்கு கடைசி நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் இருப்பது போல அன்று லண்டனில் பிரிவீக் கவுன்சில் என்ற நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. சிதம்பரனார் பிரிவீக் கவுன்சிலில் அப்பில் செய்தார். லண்டன் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தலா பத்தாண்டுகள் என்பதை தலா ஆறு வருடங்கள் என்றாக்கி, அதையும் ஒரே சமயத்தில் அனுபவித்தால் போதுமென்று தீர்ப்பு வழங்கியது.
36 வயதில் சிறை புகுந்த சிதம்பரனார் – திருநெல்வேலி, பாளையங்கோட்டை கடலூர், கோவை – கண்ணனூர் ஆகிய ஊர்களில் சிறை வாசம் அனுபவித்தார். திருடர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் அடைக்கப்பட்டிருந்த இடங்களில் அவர்களோடு சேர்த்து சிதம்பரனாரை சிறையிலடைத்தது வெள்ளை அரசு. கல்லுடைக்க வேண்டும், கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று சிறையில் அவர் மீது கொடுமைகள் வரிசையாக ஏவிவிடப்பட்டன. சிறிது தவறினாலும் சாட்டையால் அடிப்பார்கள். எண்ணெய் ஆட்டும் செக்கில் அவரை மாடுபோலப் பிணைத்து, செக்கு இழுக்கச் செய்தார்கள். 190 பவுண்டுகள் எடையுடன் சிறை புகுந்த அவரது உடல் எடை ஆறே மாதங்களில் 27 பவுண்டாகக் குறைந்தது.
இத்தனை கொடுமைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையாகி சிதம்பரனார் வெளியே வந்தபோது – அவரால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் கம்பெனி, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது.
அவரது சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் – தங்கள் பங்குகளை ஆங்கிலக் கப்பல் கம்பெனிக்கே விற்றார்கள். பயம் காரணமாக கம்பெனியையே கலைத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் விட சிதம்பரனாரின் நெஞ்சைக் குமுற வைப்பது போல வடநாட்டிலிருந்து அவர் வாங்கி வந்த கப்பல்களையும் ஆங்கில கம்பெனிக்கே அவர்கள் விற்று விட்டார்கள்.
‘சிதம்பரம், மானம் பெரிது; மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே கப்பலை விற்றுவிட்டார்களே… பாவிகள்! அதைவிட அந்தக் கப்பலை சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காள வளைகுடாக் கடலில் மிதக்கவிட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்த சில காசுகள் போய்விட்டால் தமிழ்நாடு அழிந்துவிடுமா? பேடிகள்’ என்று சிதம்பரனாரிடம் பாரதியார் வருத்தப்பட்டதாக தமது நூலில் ம.பொ.சி. சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சுதேசிக் கப்பல் கம்பெனியைக் கலைத்து விட்டதோடு நின்றுவிடவில்லை அந்தப் பாவிகள். ‘கம்பெனி மூழ்கியதற்கு சிதம்பரனார் தான் காரணம். ஆகவே, எங்களுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்தை சிதம்பரனாரே தர வேண்டும்’ என்று அவர் மீது வழக்கும் போட்டார்கள்.
அந்நியர் ஆட்சியை அகற்ற – நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக சொத்தை எல்லாம் சுதேசிக் கப்பல் கம்பெனி மூலம் இழந்து, சிறையில் சித்திரவதைகளை அனுபவித்த சிதம்பரனாரின் இறுதிக்கால வாழ்க்கை எப்படி இருந்தது?
1912-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரனார் விடுதலையாகி சிறை மீண்டபோது, சுப்பிரமணிய சிவாவைத் தவிர, அவரை ‘வா’ என்று அழைப்பார் எவருமிலர்.
ராஜ துவேஷக் குற்றத்துக்கு தண்டனை பெற்றதன் காரணமாக வ.உ.சி-யின் வக்கீல் தொழிலுக்கான சன்னத்து பறிமுதல் ஆகிவிட்டது. வக்கீலாகவும் பணியாற்ற முடியாத அவர், வருவாய்க்கு வேறு வழியின்றித் திண்டாடினார். அந்நாளில் தமக்குற்ற கஷ்டத்தைக் குறித்து தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதமொன்றில்,
‘வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல் பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று – சந்தமில் வெண்
பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து’!
எனக் கூறியிருந்தார். சிறைக்கஞ்சாத அவர் நெஞ்சம் வறுமையை நினைத்து வாடியது’ என்று உள்ளம் உருக எழுதியிருக்கிறார் சிலம்புச் செல்வர்.
வ.உ.சி-யின் பேரன் வ.உசி. இளங்கோ . இவர் ‘துக்ளக்’ ஏட்டின் ஆரம்ப காலத்தில் ‘வானவன்’ என்ற பெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார். சிறந்த கவிஞரும் புகைப்பட நிபுணருமான இவர், சில காலம் குமுதத்திலும் பணிபுரிந்திருக்கிறார். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு – தமது தாத்தாவைப் பற்றி ஒரு நாள் நெஞ்சம் நெகிழ்ந்து சில தகவல்களைக் கூறினார்!
அவர் மிகச் சிறந்த வக்கீல் என்பது மட்டுமல்ல, அவருக்குத் தெரிந்த தொழில் அதுதான். வெள்ளையராட்சி, அவர் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியாதபடிக்கு அவரது வக்கீல் தொழிலுக்கான சன்னத்தைப் பறிமுதல் செய்துவிட்டது. தெரியாத தொழில்களான எண்ணெய்க் கடை, மளிகைக் கடை என்றெல்லாம் வைத்துப் பார்த்தார். எல்லாமே அவரது கையைக் கடித்தன.
சென்னைக்கு வந்தார். அப்போது அவரது தொழிற்சங்க நண்பர்களான சர்க்கரைச் செட்டியார், கஜபதி செட்டியார் போன்றவர்கள் அவருக்கு உதவிட முன்வந்தார்கள். ஒரு அரிசிக் கடை வைத்துக் கொடுத்தார்கள். அவர்களே கடையைப் பிடித்து, அவர்களே அரிசி மூட்டைகள் வாங்கித் தந்து, வியாபாரம் செய்ய உதவினார்கள். அரிசிக் கடையையும் அவரால் லாபகரமாக நடத்த முடியவில்லை. கடையை நண்பர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸின் மிகப்பெரிய தலைவராக இருந்தவர் ஸ்ரீனிவாச அய்யங்கார். அவர் சென்னையின் மிகப்பெரிய வக்கீலாகவும் புகழோடு விளங்கி வந்தார். ஏதாவது வேலை தேட வேண்டும் என்ற நிலையில், தனக்குத் தெரிந்த வேலையை ஸ்ரீனிவாச அய்யங்கார் தருவார். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கையை ஓட்டி விடலாம்; என்று நினைத்தார் அவர்.
நம்பிக்கையோடு மைலாப்பூர் போனார். ஸ்ரீனிவாச அய்யங்காரைச் சந்தித்தார்.
‘வாங்கோ- வாங்கோ’ என்று மகிழ்ச்சி பொங்கிட அய்யங்கார், அவருக்கு காபி கொடுத்து உபசரித்தார்.
‘வராதவர் வந்திருக்கிறீர்களே.. என்ன விசேஷம்’ என்று விசாரித்தார். மெதுவாக, தயக்கத்துடன் ‘உங்களிடம் வேலை தேடி வந்தேன்’ என்றார் சிதம்பரனார்.
வேலையா… என்னிடமா? உங்களுக்குப் போய் நான் வேலை தர முடியுமா?’ என்றார் ஸ்ரீனிவாச அய்யங்கார்.
‘எனக்குத் தெரிந்த தொழில் வக்கீல் தொழில்தான். அந்தத் தொழிலை நான் செய்ய முடியாமல் அரசாங்கம் தடை விதித்துவிட்டது. நீங்கள் இப்போது சிறந்த வக்கீலாக இருக்கிறீர்கள், உங்களுக்கு ஏராளமான வழக்குகள் கிடைத்திருக்கின்றன. உங்களிடம் வரும் வழக்குகளுக்கான கேஸ் கட்டுகளை என்னிடம் கொடுங்கள். நீங்கள் கோர்ட்டில் வாதாட வசதியாக நான் சட்டரீதியான விஷயங்களை – பாயிண்ட்டுகளை உங்களுக்குத் தயாரித்துத் தருகிறேன். அதற்காக மாதம் ஒரு தொகையை நீங்கள் எனக்குத் தந்தால் அது பேருதவியாக இருக்கும்’ என்றார்.
சிதம்பரனார் சொல்லி முடிக்கும் வரையில் காத்திருந்த ஸ்ரீனிவாச அய்யங்கார், ‘கொஞ்சம் இருங்கோ பிள்ளைவாள், இதோ நொடியில் வந்துவிடுகிறேன்’ என்று சொல்லி விட்டு மாடிக்குப் போனார்.
மாடியிலிருந்து அவர் இறங்கி வந்தபோது, அவரது கையில் ஒரு கவர் இருந்தது. அதில் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று இருந்தது.
பிள்ளைவாள்… நீங்க ரொம்பவும் பெரியவாள். உங்களுக்கு நான் வேலை கொடுப்பது என்பது, என்னால் நினைத்தும் பார்க்க முடியாத காரியம். என்னாலே முடிந்த உதவி இது. இதை நீங்கள் பெற்றுக்கொண்டால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன்’ என்றார்.
அந்தப் பணத்தைக் கையால் தொடவே இல்லை சிதம்பரனார்.
‘ரொம்ப நன்றிங்க. நான் உங்களிடம் வேலை தேடித்தான் வந்தேன். வேலை செய்து சம்பாதித்துத்தான் எனக்குப் பழக்கம். யாசகம் வாங்கிப் பழக்கமில்லை என்று உணர்ச்சிப் பொங்கிடக் கூறிவிட்டு, வக்கீல் ஸ்ரீனிவாச அய்யங்காரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார். வறுமையிலும் செம்மை என்பதின் அடையாளமாக நடந்து கொண்டார் அவர்.
அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈ.செ.வாலேஸ் என்பவர் நீதிபதியாக இருந்தார். இவர், சிதம்பரனார் மீது ராஜ துவேஷ வழக்கு நடந்து கொண்டிருந்த போது – திருநெல்வேலி மாவட்டத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர். சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்றபோதிலும் நேர்மை மிகுந்தவர், எல்லோருக்கும் உதவிடும் உதாரண குணம் படைத்தவர், வழக்காட வசதியற்றவர்களுக்காகத் தாமே முன் வந்து வழக்காடி உதவி செய்பவர் என்பதையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். நெல்லை மாவட்டத்தின் தலை சிறந்த வக்கீலாக இருந்த சிதம்பரனார், சென்னையில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்து வருந்தினார் அவர்.
தனது கோர்ட் குமாஸ்தாவைக் கூப்பிட்டு, ‘உனக்கு சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமா?’ என்று கேட்டார்.
அவரைத் தெரியுமாவாவது – அவரைத் தெரியாதவர் என்று யாராவது இருக்க முடியுமோ?’ என்றார் அந்த குமாஸ்தா. அடுத்து நீதிபதி கேட்ட கேள்வி, அந்த – ஊழியரை அதிசயத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
‘அவரை என்னிடம் அழைத்து வர முடியுமா என்று கேட்டார். நீதிபதி.
கோர்ட் குமாஸ்தா ஒரு பிராமண இளைஞர்தான். சிதம்பரனாரிடம் ஓரளவு பழக்கமும் உண்டு , அரசாங்கத்துக்கு விரோதமானவருடன் பழக்கம் வைத்திருப்பது தெரிந்தால் வேலை போய்விடுமோ என்ற பயமும் உள்ளூர உண்டு.
எங்கே சிதம்பரனாரைக் கண்டாலும் கைகூப்பி வணங்கி, அவரிடம் நலம் விசாரிக்க மட்டும் பயப்பட்டதில்லை அவர்.
‘சிதம்பரனாரிடம் பழகினால் கோர்ட் குமாஸ்தா வேலையே போய்விடும் என்று பயப்படுகிறோம் நாம். இந்த நீதிபதிக்கு எதற்கு இந்த வம்பு? சிதம்பரனார் வந்து இவரைப் பார்த்தார் என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் இவரது நீதிபதி பதவிக்கு ஆபத்து வருமே ..’ என்பது தான் அந்த இளைஞரது அதிசயமும், அதிர்ச்சியும். தயங்கி, தயங்கி தனது பயத்தை நீதிபதியிடம் அவர் தெரிவித்தபோது, பயப்படாதே… ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தைரியம் சொன்னார் அவர்.
சிதம்பரனாரை நீதிபதியிடம் அழைத்து வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.
காரணம், சிதம்பரனார் குடியிருந்த வீட்டுத் திண்ணையில் ஒரு போலீஸ்காரர் எப்போதும் இருப்பார். சிதம்பரனார் நடவடிக்கைகளைக் கவனிக்க பிரிட்டிஷ் அரசு செய்த ஏற்பாடு அது.
சிதம்பரனார் இருந்த தெரு வழியாக அந்த குமாஸ்தா, எப்போது போனாலும் ஒரு போலீஸ்காரர், திண்ணையிலோ – எதிர்ப்பக்கத்திலோ – டீக்கடையிலோ – பெட்டிக் கடையிலோ நின்றுகொண்டு சிதம்பரனார் வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று கண்காணித்துக் கொண்டிருப்பார்.
ஒரு நாள் அந்த குமாஸ்தா நீதிபதியின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தத் தெருவுக்குப் போனபோது, என்ன காரணத்தினாலோ அந்த வீட்டருகே எந்த போலீஸ்காரரையும் காணோம்.
போலீஸ்காரர் யாரும் இல்லை என்பதை நன்கு ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு வீட்டினுள்ளே நுழைந்தார் அந்த இளைஞர். சிதம்பரனாரைச் சந்தித்து நீதிபதி வாலேஸ் அவரைப் பார்க்க விரும்புவது குறித்துத் தெரிவித்தார்.
சிதம்பரனார் நீதிபதியைச் சந்திக்க மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அந்த குமாஸ்தா – இப்படியும் கூட நல்லெண்ணம் படைத்த நல்ல மனிதர்கள் இருக்கிறார்களே…’ என்று நெஞ்சம் நெகிழ்ந்தார்.
‘நான் அரசாங்கத்துக்கு விரோதமானவன். என்னை அந்த நீதிபதி சந்தித்தார் என்பது அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டினால், பாவம்…. என்னைச் சந்தித்த ஒரே குற்றத்துக்காக அந்த நீதிபதியின் வேலை போய்விடும்’ என்றார் சிதம்பரனார். அவரது இந்த உறுதி கலந்த மறுப்பைக் கேட்டு அந்த குமாஸ்தா மனம் தளர்ந்துவிடவில்லை. அய்யா. இதுபற்றியெல்லாம் நான் நீதிபதியிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன் அய்யா. ‘ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பிடிவாதமாக அவர் என்னை வலியுறுத்தியதால்தான் நான் உங்களை அழைத்து வருவதாக அவரிடம் சம்மதம் அளித்தேன்’ என்று கூறி, நீதிபதிக்கும் தனக்குமிடையே நடந்த உரையாடலை அப்படியே வரி பிறழாது சிதம்பரனாரிடம் தெரிவித்தார்.
நீதிபதி வாலேசை சிதம்பரனார் சந்தித்த அங்கே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
நீங்கள் சென்னைக்கே வந்துவிட்டதாகவும் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும் கேள்விபட்டேன். உங்களுக்கு தெரிந்த வேலையான வக்கீல் தொழில் நடத்த உங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமானால், அது உங்களுக்கு உதவியாய் இருக்கும் என்பதோடு, எத்தனையோ பேருக்கு – அதிக செலவு செய்து வழக்காட வசதி இல்லாதவர்களுக்கெல்லாம் உதவியாக இருக்குமே என்று தோன்றியது. உங்களது வக்கீல் சனனத்து மீண்டும் உங்களுக்கு கிடைக்க நான் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருக்கிறேன்.
எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத நிலையில் இந்த உதவிக் குரல், சிதம்பரனாரை மகிழ்ச்சியில் மட்டுமல்ல. நன்றிக் கடலிலும் ஆழ்த்தியது.
உடுக்கையிழந்தவன் கைபோல இடுக்கண் களைய, யாரும் கேட்க வேண்டும் என்று காத்திராமல் – தாமாகவே முன்வந்து வக்கீலுக்கான சன்னத்தை மீண்டும் வாங்கித் தந்த நீதிபதி வாலேஸ், காலத்தினாற் செய்த அந்த உதவியை வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவேயில்லை சிதம்பரனார்.
கோவில்பட்டிக்குத் திரும்பி வந்து மீண்டும் வக்கீலாகப் பணியாற்றத் தொடங்கிய அவர், தமது இரண்டு மகன்களில் ஒருவருக்கு வாலேஸ் துரையின் நினைவாக ‘வாலீஸ்வரன் என்றே பெயரிட்டார்’ என்று சொல்லிக்கொண்டே போன வ.உ.சி-யின் பேரன் வ.உசி. இளங்கோவன் குரலும் இந்த இடத்தில் நன்றியுணர்வால் தழுதழுத்தது.
கோவில்பட்டி சென்று மீண்டும் வக்கீல் தொழிலைத் தொடங்கிய பிறகும் சிதம்பரனாரின் சிரமங்கள் பெரிய அளவில் தீர்ந்து போய்விடவில்லை.
1928-ம் வருடம் ஜூன் மாதம், 1-ம் தேதி – சுயமரியாதை இயக்கத் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான பெரியாருக்கு சிதம்பரனார் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் என்ன எழுதியிருந்தார் என்பதைவிட நாட்டின் சுதந்திரத்துக்காக தமது சொத்து சுகங்களையெல்லாம் இழந்து, சிறையில் செக்கிழுத்து சித்திரவதை அனுபவித்த ஒரு தியாக புருஷனின் இறுதிக்கால வாழ்வு எந்த அளவுக்கு இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது இதோ அந்த கடிதம்…
அன்பார்ந்த சகோதரர் அவர்களே, ஷேமம், ஷேமத்துக்குக் கோருகிறேன்.
நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லோருக்கும் அசந்தோஷத்தை உண்டு பண்ணிற்று. ஒருவாறு இரண்டு இடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம்.
இப்போது உங்கள் உடம்பு பூரண சௌக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால், நீங்கள் எப்போது சென்னைக்குச் செல்லுதல் கூடும்?
என் மகன் School Final Examination-ல் தேறி விட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்க வைக்க முடியாது. போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபாரிசு இருந்தால் முதலிலேயே Circle-Inspector ஆகலாம். சாதாரண சிபாரிசு இருந்தால் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபாரிசு நமக்குக் கிடைக்குமா என்பதைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.
அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்
( கட்டுரையாளர் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மறைந்த திருவாரூர் இரா.தியாகராஜன் என்கிற திரு. சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய ‘எத்தனை மனிதர்கள்’ என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் வெளியிட்ட நூலில் இருந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழறிஞர் கலைஞர் பாதையில் பயணித்தவர். அப்பழுக்கற்ற சுயமரியாதைக்காரர். )