எந்தக் கட்சியும் ஆதரிக்கத் தயாரில்லை என்பது மட்டுமல்ல,தங்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவது தான் தற்போது பெரும்பாடாகிவிட்டது!
பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் பகை வளர்க்கும் பிரச்சாரம் தான் அரங்கேறியுள்ளது!
மூட நம்பிக்கைகள் மிகுந்து சமூகம் பேரழிவை சந்தித்த காலங்களிலெல்லாம் வரலாற்றுத் தேவையாக வந்து வழிகாட்டியதே நாத்திகம்!
பகுத்தறிவு பேசுபவர்கள் எல்லாம் தங்களை பெரியாராகக் கருதிக் கொள்ளமுடியாது!
பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தவர்! பச்சிளங் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது,விதவைகளை காலமெல்லாம் கொடுமைப்படுத்துவது, சடங்குகளின் பெயரால் எளிய மக்களின் பணம் விரையமாவது, பார்ப்பனிய ஆதிக்கம் சக மனிதர்களை தாழ்த்தி வைத்திருந்தது…ஆகியவற்றை எதிர்த்து தரைமட்டமாக்க ஒரு பெரியார் வரலாற்றின் தேவையாக வந்தார்!
இன்றைக்கு மதத்தின் பெயரால் மக்களை வென்றெடுக்க காத்திருக்கும் மதவாத சக்திகளுக்கு ஒரு சிறந்த ஆயுதத்தை கூர் தீட்டித் தந்துள்ளது!
கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பார்ப்பது என்பது அறியாமையின் உச்சம்! ஒரு பக்தி பனுவலை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற பக்குவமின்றி, அரைவேக்காட்டுத்தனமாக உளறியுள்ளனர்.
முருகன் என்ற கடவுள் காலங்காலமாக தீமைகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றும் கடவுளாக தமிழ் சமூகத்தின் ஆழ் மனதில் பதிந்து போன பிம்பம்! முருகனை நினைப்பதிலும்,வழிபடுவதிலும் தங்களுக்கு அளப்பறிய பாதுகாப்பு உணர்வை தமிழ் மக்கள் பெறுகின்றனர்!
அதற்கு வடிவம் சேர்க்கும் அம்சமாக உணரப்படுவதே கந்தர் சஷ்டிக் கவசம்!
தமிழகத்தின் மூலைமுடுக்கு பட்டிதொட்டி எங்கும் தினசரி பாடப்படும் கோடானுகோடி முருக பக்தர்களின் வேதம் என்று கூட அதைச் சொல்லமுடியும்! இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,தமிழன் உலகில் எங்கெங்கெல்லாம் புலம் பெயர்ந்துள்ளானோ அங்கெல்லாம் ஒலிக்கும் பாடல்!
இதில் எந்த ஆபாசமும் இல்லை! ஒன்றை ஆபாசமாக உணர்வதும்,புனிதமாக உணர்வதும் சம்பந்தப்பட்டவர்களின் மன நிலை சார்ந்தது!
தன்னுடன் வாழும் சக மனிதர்களின் உணர்வை,உரிமைகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காமல்,அவனுடைய மகத்தான நம்பிக்கைகளின் மீது மிக வன்மமான ஒரு தாக்குதலை நடத்துவது எந்த விதத்திலும் பகுத்தறிவுக்கு உகந்ததல்ல!
மனித உடலின் எந்த ஒரு உறுப்புமே ஆபாசமானதோ,அறுவருக்கதக்கதோ அல்ல! ஆண்குறி, பிட்டம், மலம் வெளியேறும் ஆசனவாயில்…மார்பு காம்பு…ஆகிய யாவுமே அதி புனிதமானவை! உன்னதமானவை!
இந்தப் பாடல் குறித்து நான் ஆய்வு செய்தவற்றை சிறிதளவு பகிர்ந்து கொள்கிறேன்.
கந்தர் சஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகளால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிக ஆழ்ந்த பொருள் கொண்ட ஒரு பக்தி பனுவல்! சிலர் பதினெட்டாம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள்!
ஒரு பாடல் தோன்றிய காலகட்டத்தின் சமூகச் சூழலை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்! அக் காலம் தமிழ் சமூகம் புறச் சூழல்களில் பல பகைவர்களைக் கொண்டிருந்தது. பில்லி,சூனியம் வைக்கும் மாந்திரீகவாதிகள் நிறைந்த காலமாகவும் இருந்தது. இப்போதும் கூட சில இடங்களில் இருக்கிறது தானே!
அந்த மாந்தீரிகவாதிகள் மூலமாக மனித உடலின் ஏதாவது ஒரு உறுப்பை முற்றிலும் செயலிழக்க வைக்கும்,விளங்காமல் செய்யும் கொடுமைகள் அரங்கேறுவது வழக்கம்! அதனால் தான் இப் பாடலில் முருகனிடம் ஒவ்வொரு உறுப்பாக பாதுகாக்கும் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது!
அத்துடன் மக்களை பாதிக்கும் அக்காலத்தியப் பிணிகள் பலவற்றில் இருந்தும் தீர்வுக்கு வேண்டுகிறது இப் பாடல்!
எல்லாவற்றும் மேலாக குழந்தை பாக்கியம் வேண்டுவோரின் பாடலாகவும் இது காலங்காலமாக கருதப்பட்டுவருகிறது. அதுவும் ஆண்குழந்தையாக முருகனே வந்து பிறக்க கேட்கும் பாடலாகவும் இது உள்ளது!
மிக கற்றறிந்த அறிஞர்களால் கூட சில இடங்களில் பொருள் உணரமுடியாது! அந்த அளவுக்கு நுட்பமும்,பொருட்செறிவும் கொண்டது இந்தப் பாடல்! இதற்கு உரை எழுதுவது கூட பிழையாய் போய்விடும், படிப்பவன் பிழையாய் புரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது எனக் கருதி நம் முன்னோர்கள் இதற்கு உரை எழுதுவதையே தவிர்த்து வந்தனர்.ஆனால்,ஒரளவுக்கு சொல்லக் கூடிய விளக்கம் வரையிலும் சொல்வது குற்றமாகாது என்று துணிந்து முயன்றவர் அமிர்தம் சுந்தரநாத பிள்ளையவர்கள்! இவர் எழுதிய கந்தர் சஷ்டிக் கவசம் மூலமும்,மெய்ப் பொருள் விளக்க விருத்தி உரையும் என்ற நூல் 1926 ல் அ.மஹாதேவ செட்டியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலில் சில இடங்களில், ’’இதற்கான பொருளை குருவிடம் கேட்டறிக’’ என்று சொல்லப்பட்டிருக்கும்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும் சில ’ரைம்மிங்’கான சொற்கள் மந்திரச் சொற்களாகும்! மந்திரச் சொற்கள் சக்திவாய்ந்தவை! அதை ஏதோ போகிற போக்கில் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே எப்படி அதை துதிக்க வேண்டும் என்பதையும் பாலதேவராய சுவாமிகளே பாட்டில் விளக்கியுள்ளார்.
முருகன் என்பவனே ஓரு மாபெரும் வீரக் கடவுள் தான். வீரத்தின் வடிவமாக காலங்காலமாக வணங்கப்படுவன் தான்! அந்தக் காலத்தில் எளிய மக்களை கொடுமைக்கு ஆளாக்கிய அசூரர்கள் எனப்படுவோரிடமிருந்து காப்பாற்றிய ஒப்பற்ற வீரன் என்று தான் மக்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கப்படுகிறான். அதனால் தான் முருகன் பிம்பத்திற்கு கீழாக, ’’யாமிருக்க பயமேன்?’’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். அவன் சூரசம்காரம் செய்யும் கடவுளாகத் தான் கொண்டாடப்படுகிறான்!
ஆனால்,இன்றைய சூழலில் முருகன் சூரசம்காரம் செய்ய வேண்டியவை என்ன என்ற தேடுதலுடன் கூட இதை பொருத்தி பார்க்கலாம். பல வகைகளில் இந்தப் பாடல் இன்றைய காலமாற்றச் சூழலில் மாற்றிப் பாடப்பட வேண்டியாகக் கூட நான் உணர்கிறேன்.இன்றைய மக்களுக்கு உண்மையான எதிரியை யார் என புரிய வைக்க வேண்டும்!
சித்தர்கள் என்பவர்கள் அதைத் தான் செய்தார்கள்…! ’’கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக…’’ என்று வள்ளலார் கூறியுள்ளார்.
’’சாத்திரத்தை சுட்டு,சதுர் மறையை பொய்யாக்கி சூத்திரத்தைக் கண்டு துயரறுப்பது எக் காலம்?’’ என்றார் பத்திரகிரியார். ’’சதுர் வேதம்,ஆறுவகை சாத்திரங்கள் பல தந்திரம் புராணங்காலை சாற்றும் ஆகமம் வித விதமான வேறு நூல்களும் வீணான நூல்களே என்று ஆடுபாம்பே’’ என்றார் பாம்பாட்டிச் சித்தர். ஆகவே சமூகத்தின் நலன் சார்ந்து எதிர்க்க வேண்டியவை என்ன என்ற புரிதல் தான் மிகமிக அவசியமானது.
பகுத்தறிவோ, நாத்திகமோ…ஆன்மீகமோ…எதுவானாலும், அது மக்களுக்கு நன்மை சேர்ப்பதாக, மக்களை பிளவுபடுத்தாமல் ஒன்றிணைப்பதாக, மேன்மேலும் நேசத்தை வளர்ப்பதாக அமையட்டும்!
முருக பக்தனாக இருந்த போதிலும் தனிப்பட்ட முறையில் கந்தசஷ்டி கவசம் பாடலை நான் ஒரு முறை கூட பாடியதே இல்லை! பாடவேண்டும் என்று தோன்றியதும் இல்லை!
ஆனால்,சின்னஞ் சிறிய வயதில் இருந்து அந்தப் பாடலை பல நூறு முறை யதேச்சையாக கேட்டு வந்துள்ளேன்! நானாக விரும்பி ஒலிக்கவிட்டு கேட்டதில்லை!
டி.எம்.எஸ்சின் நிறைய முருகன் பாடல்களை மீண்டும்,மீண்டும் கேட்டு உள்ளம் கனிந்து கசிந்துருகியுள்ளேன்!
’’உள்ளம் உருகுதையா முருகா…’’
’’அழகென்ற சொல்லுக்கு முருகா’’
இந்த இரண்டும் என் நெஞ்சுக்கு நெருக்கமானவை!
’’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..’’என்ற பாடலில் வரும்
’’உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது – அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ..’’ என்ற வரியில் நெஞ்சம் நெக்குருகிவிடும்!
என் வாழ்க்கையில் இடையில் ஒரு பதினைந்து ஆண்டுகள் எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தது! ஆனால்,அப்போதும் கூட இந்தப் பாடல்களை நான் விரும்பி கேட்டுள்ளேன். உருவ வழிபாடுகள் அனைத்தும் நமது கற்பிதங்கள் என்பதை இன்றும் நான் நன்கு உணர்ந்தாலும் கூட, பக்தி இசையில் மனம் லயிப்பது ஏதோ ஒரு வகையில் எனக்கு மகிழ்வைத் தருகிறது.
யோசித்துப் பார்க்கும் போது மென்மையான – நம் உள்ளத்தை உருகச் செய்கின்ற – நம்மை மேன்மைபடுத்துகிற பாடல்களில் எனக்கு பெரு விருப்பம் ஏற்பட்டுள்ளது என உணர்கிறேன்!
விபரம் தெரியாத வயதில் இருந்து காந்தி மீது எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு! ஆனாலும் காந்தியடிகள் மிகவும் பக்தி சிரத்தையுடன் வணங்கிய ராமன் மீது எனக்கு ஏனோ சிறிதளவு கூட ஈடுபாடு ஏற்பட்டதில்லை! அது போல ஆண்டாளின் பெருமாள் பாடல்களின் தமிழ் மிக பிடித்திருந்தாலும் அதை பக்திக்கானதாக என்னால் ஏற்க முடியவில்லை!
எனக்கு மாணிக்க வாசகரின் எட்டாம் திருமுறை திருவாசகப் பாடலான, ’’நமச் சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’’ பாடலும், அவ்வையாரின் விநாயகர் அகவலான ’’சீதகளபச் செந்தாமரைப் பூவும் பாதச் சிலம்பும் பண்ணிசை பாட..’’ பாடலும் மனப்பாடம்! இத்துடன் சிவவாக்கியரின் ’’ஓடி,ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை..’’ என்ற தத்துவப் பாடலிலும் அதிக ஈடுபாடு உண்டு!
என் அம்மா ஒரு வள்ளலார் பக்தையாக இருந்தார்கள்! அவர்கள் வள்ளலார் பாடல்களை மனம் உருகப்பாடுவார்கள்! அந்த வகையில் என் சிறு வயது முதலே எனக்கு வள்ளலார் பாடல்கள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.
வள்ளலரின் முருகன் பாடலான ’’ஒருமையுடன் நினது திருவடிகளை நினைக்கும் உத்தமர் தம் உறவு வேண்டும்…!’’ என்ற பாடலும்,
’’அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்.
ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்’’
என்ற பாடலும் என் அம்மா வழியில் இன்றும் நான் தினசரி பாடும் வள்ளலார் பாடல்களில் முக்கியமானவை!
அதாவது, ’ஒருயிர்,ஈருயிர் உயிரினங்கள் தொடங்கி ஆறுயிரான மனிதன் ஈறாக எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும்’ என்ற கருத்து எனக்கு விருப்பமுள்ளது என்ற வகையில் மனதில் ஆழப் பதிந்தது!
கந்தர் சஷ்டி கவசத்தின் சில வரிகள் வன்முறை வரிகளாக உள்ளது என்பதே அந்தப் பாடலை பாடாமல் நான் தவிர்த்தற்கு காரணம் எனத் தோன்றுகிறது.ஆனால், நான் முன்பே சென்ற பதிவில் குறிப்பிட்டபடி அந்த காலகட்டத்தில் நிலவிய சமூகச் சூழல்களின் தேவையாக அந்தப் பாடலுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது என்பதே என் புரிதல். மேலும் சூலமங்களம் சகோதரிகள் குரலில் மிக இனிமையாக அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கிய பிறகு இப்பாடல் மென்மேலும் புகழ் பெற்றது! என் மனைவிக்கு கந்த சஷ்டிக் கவசத்தில் சிறுவயது முதலே ஈடுபாடு உண்டு!
ஆனால், இந்தப் பாட்டில் எனக்கு மட்டும் ஏன் ஒரு ஈர்ப்பு உருவாகவில்லை என யோசித்துப் பார்க்கையில், இக்காலகட்டத்திற்கான பொருத்தப்பாடு இந்தப் பாட்டில் சற்று குறைந்திருப்பதும்,அகிம்ஸையை நாடும் என் மன நிலைக்கு இந்தப் பாடல் அவ்வளவு ஏற்பில்லாமல் இருப்பதும் இந்தப் பாடலை நான் பாடாமல் தவிர்த்திருக்க காரணமாயிருக்கலாம்!
ஒரு பாட்டில் ஒருவருக்கு பெருஈடுபாடு உருவாவதற்கு அவரது மன நிலை, வாழ்க்கைச் சூழல், குடும்பச் சூழல்,சமூகச் சூழல் ஆகிய பல்வேறு காரணிகள் இருக்கிறது என்பதே யதார்த்தம்! நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன். அதே போல அவரவர்களும், அவரவர் தன்மையிலேயே வழிபடவும், வழிபாட்டை மறுத்து இயங்குவதற்குமான எல்லா உரிமைகளும் கொண்டவர்கள் என உணர்ந்து மதிக்கிறேன்!
(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)
இக்கட்டுரையின் ஆழம் என்னை உள்ளே இழுத்துக்கொண்டே சென்றது. மிகவும் அருமை.
சாவித்திரி கண்ணன் அவர்களின் சொல்லாக்கம் எப்போதும் எளிமையாக இருக்கும். இப்போது இனிமையாக இருக்கிறது.
இவரது கட்டுரைகள் படிக்கும்போது விட்ட இடத்திலிருந்து படிக்கவேண்டியதில்லை. எந்தப் பாராவை, எங்கிருந்து படித்தாலும், நம்மை கட்டுரைக்குள் இட்டுச் செல்லும்.
நிறைய தகவல்களைப் பின்னி பிணைந்து எழுதுவதென்பது அவர் திறமைகளுள் ஒன்று. அதேபோல் வெறும் சொற்களை அவர் நிரப்புவதில்லை. பலரும் படித்துப் புரிந்துகொள்ளட்டும் என வரிகளை வடிகட்டுவார், வரிந்து கட்டுவார்.
நாட்டில் எத்தனையோ அசாதரணச் சூழல் நிலவும் இவ்வேளையில், மனித ஜீவராசிகள் தப்புமா என்னும் சூழலில் நயவஞ்சகர்கள், கந்த சஷ்டி கவசத்தைக் கேவலப்படுத்தியிருப்பது சகிக்க முடியாததொன்று. அப்படிப்பட்டவர்களுக்கு சாவித்திரி கண்ணன் இட்ட சூடு, அவர்களுக்குப் பெரும் வடுவாக இருக்கப்போவது தின்னும்.