இனிய நண்பர்களே,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளராக 58 வயது நிரம்பிய துடிப்புமிக்க அருமை நண்பர் ராஜீவ் தியாகி தமது வீட்டிலிருந்து தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த செய்தி கேள்விபட்டதும் மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பலமுறை சிரித்த முகத்துடன் அவர் வலம் வந்ததை பார்த்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினரோடு போராடியிருக்கிறார். பா.ஜ.க.வினரை கருத்து மோதலில் வீழ்த்துகிற ஆற்றல்மிக்கவராக அவர் விளங்கினார். ராஜிவ் தியாகி உயிரிழப்புக்கு பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பாட்ராவும் ஆஜ் தக் நெறியாளரும்தான் பொறுப்பாகும். மறைந்த ராஜிவ் தியாகிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைநகர் தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் தியாகிக்கு நேர்ந்த சோகத்தைக் கண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தோடு இருக்கின்றனர். தமிழகத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறுகிற விவாதங்களில் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி விவாதங்களில் வரம்புமீறி அநாகரீகமாக பேசுபவர்களை நெறியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில ஊடகங்களில் இத்தகைய சூடான விவாதங்களின் மூலம் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடுவதற்கு உதவுவதால் அதை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் ஊடக வெளிச்சம் பெற வேண்டும் என்பதற்காக அதில் பங்கேற்பவர்கள் எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக் கொள்வதற்கு ஒருசிலர் தயாராக உள்ளனர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவரை ஒருவர் மிக தரக்குறைவான இழிவான வார்த்தைகளில் திட்டிக் கொண்டதை பார்த்த அனைவருமே முகம் சுளித்தனர். தமிழக தொலைக்காட்சி விவாதங்கள் படுபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பது குறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அக்காலகட்டங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர்களாக ஜென்ராம், மு. குணசேகரன், கார்த்திகைசெல்வன், கார்த்திகேயன், சிகாமணி, தியாகச்செம்மல், நெல்சன், விஜயன், செந்தில், ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்ற பலருடன் பங்கேற்று விவாதங்களை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர். இவர்களில் எவருமே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக எப்பொழுதுமே நான் கருதியது கிடையாது. புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் நிறைய கலந்து கொண்டிருக்கிறேன். அந்த விவாதங்கள் ஆரோக்கியமாகவும், செழுமையாகவும் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அதேபோல, சன் நியூஸ், நியூஸ் 18, தந்தி டிவி, நியூஸ் 7 ஆகிய தொலைக்காட்சி விவாதங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நான் பார்த்திருக்கிறேன்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது 2004 முதல் 2014 வரை தொடர்ந்து பல்வேறு விவாதங்களில் பங்கேற்று வந்திருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் மீது பா.ஜ.க. உள்ளிட்ட எவராவது குற்றச்சாட்டு எழுப்பினால் அதற்கு கோபப்படாமல் அமைதியாக, ஆதாரப்பூர்வமாக எனது வாதங்களின் மூலம் குற்றச்சாட்டுக்களை மறுத்து பேசியிருக்கிறேன். எந்த இடத்திலும் இந்தியாவை ஆளுகிற கட்சியைச் சேர்ந்தவன் என்கிற ஆணவத்தோடு ஒருநாள் கூட நான் விவாதத்தில் பேசியது கிடையாது.
என்னைப் பொறுத்தவரை தொலைக்காட்சி விவாதங்கள் என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு கருத்து மோதலே தவிர, தனிப்பட்ட தாக்குதலுக்கு அங்கே இடமில்லை. அக்காலங்களில் தொலைக்காட்சி விவாதங்கள் முடிந்ததும் பங்கேற்ற பா.ஜ.க. உள்ளிட்ட நண்பர்களோடு சுமூகமாகவே நான் விடை பெற்றிருக்கிறேன். எவரிடத்திலும் பகை பாராட்டியது கிடையாது.
ஆனால், சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்கள் தரம் தாழ்ந்து தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்த காரணத்தினாலும், விவாதத்தில் பங்கேற்க தரம் குறைந்தவர்கள் அழைக்கப்படுவதாலும் காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதை நான் தவிர்த்து வருகிறேன். ஒரு தொலைக்காட்சி விவாதம் என்று நான் அழைக்கப்பட்டால் அதற்காக குறிப்புகள் தயாரிக்க ஒருமணி நேரத்திற்கு மேலாக நான் செலவிடுவேன். அதற்கு பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு மணி நேரம், பயண நேரம் ஒரு மணி நேரம் என ஏறத்தாழ மூன்று மணி நேரத்தை செலவழிக்க வேண்டிய நிலை இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக நமது கருத்துக்களை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும், காங்கிரஸ் கொள்கைகளை நிலை நிறுத்த வேண்டும், விமர்சனங்களுக்கு எதிராக கேடயமாகவும், வாளாகவும் பணியாற்றி தமிழக மக்களின் பரவலான பாராட்டையும், அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் ஆணவத்தோடு பேசுவதை பார்த்து வருகிறேன். அத்தகைய சூழலின் காரணமாக விவாதங்களில் கடும் மோதல் ஏற்படுகிறது. தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடைபெறுகிறது. இதைப் போன்ற தாக்குதலின் உச்சகட்டத்தினால் தான் இன்றைக்கு ராஜீவ் தியாகியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. அதைப் போன்ற நிலை எவருக்கும் ஏற்படக் கூடாது.
எனவே, தொலைக்காட்சி விவாதங்களை சில நெறிமுறைகள், கட்டுப்பாடுகளோடு நடத்துவதற்கு தொலைக்காட்சி நெறியாளர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இதன்மூலமே தொலைக்காட்சி விவாதங்கள் ஆரோக்கியமாகவும், மக்கள் முகம் சுளிக்காத வகையிலும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். தொலைக்காட்சி விவாதங்களில் அதிகளவில் பங்கேற்றவன் என்ற முறையில் இதை உரிமையோடு கூற விரும்புகிறேன். ராஜீவ் தியாகியின் மரணத்தின் மூலம் அபாய சங்கு ஊதப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தொலைக்காட்சி ஊடகங்கள் விழிப்புணர்வு பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அன்பன்,
ஆ. கோபண்ணா
Thanks sir. Happy Independence Day
Happy independence day