இனிய நண்பர்களே,
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு 1920 முதல் மகாத்மா காந்தி தலைமையேற்று சத்தியம், அகிம்சை என்ற தத்துவங்களின் அடிப்படையில், ‘சத்தியாகிரகம், ஒத்துழையாமை’ என்ற போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், இறுதியாக 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்பட்டு 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தேசப்பிதா காந்தியடிகள் எடுத்த முடிவின்படி முதல் பிரதமராக தேர்வு பெற்று மூவண்ண தேசிய கொடியை ஏற்றி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். விடுதலைப் போராட்ட காலத்தில் கைராட்டை பொறிக்கப்பட்ட மூவண்ணக் கொடியின் கீழ்தான் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மூவண்ணக் கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரனைப்போல் பலர் போராடி உயிரை துறந்திருக்கிறார்கள். அந்த மூவண்ணக் கொடியில் இருந்த ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு இந்தியாவின் தேசியக் கொடியாக பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி விளக்கமான உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரநாளை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் கொடியேற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், 1947 முதல் 1963 வரை 16 முறை தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தவர் நவ இந்தியாவின் சிற்பி பிரதமர் நேரு.

மகாத்மா காந்தி அவர்களின் 150 வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகிற தருணத்தில், அவரது நினைவை போற்றுகிற வகையில் 150 அடி உயரத்தில் சத்தியமூர்த்தி பவனில் கொடிக் கம்பம் அமைத்து தேசிய கொடியையும், காங்கிரஸ் கொடியையும் அதற்குரிய தருணங்களில் பட்டொளி வீசி பறக்க விடவேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் 150 அடி உயர கொடிக் கம்பத்திற்கு அடிக்கல் நடப்பட்டது. அதற்கான விழாவில் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைக்கும் பணி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் ஆர்.மனோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியை தமது சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அனைவரும் பாராட்டுகிற வகையில் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
தலைவர் ராகுல் காந்தி அவர்களை அழைத்து பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் மூலமாக 150 அடி உயரத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க செய்ய வேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கினால் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் கொடியேற்று விழாவில் தலைவர் ராகுல் காந்தி அவர்களால் பங்கேற்க முடியவில்லை. நீண்டகாலமாக 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு அதில் கொடி ஏற்றப்படாமல் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்கிற வகையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி கோலாகலமான முறையில் விழாவை நடத்தவேண்டும் என்று தலைவர் அழகிரி முடிவெடுத்தார். அதன்படி நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டன.

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் வாகா என்கிற இடத்தில் 367 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. அதைப் போல, இன்னும் இரு இடங்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. ஆனால் உலகத்திலேயே எந்த ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திலும் 150 அடி உயரத்தில் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டதில்லை. இதன் அடிப்படையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைத்து தேசிய கொடியையும் காங்கிரஸ் கொடியையும் ஏற்றி உலக கின்னஸ் சாதனையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி படைத்திருக்கிறார். இதன்மூலம் உலக வரலாற்றிலும், காங்கிரஸ் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிற வகையில் தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய சரித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.
150 அடி உயரத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 அடி அகலம் 20 அடி உயரம் கொண்ட தேசியக் கொடியை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொத்தானை அழுத்தியபோது கொடிக் கம்பத்தின் உச்சியை அடைவதற்கு 11 நிமிடங்கள் பிடித்தது. 150 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏறுகிறபோதும் உச்சியை அடைந்த பிறகு பட்டொளிவீசி பறப்பதைப் பார்த்து பரவசமடைய ஆயிரம் கண்கள் வேண்டும். கொடிக் கம்பத்தை சுற்றி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணாந்து பார்த்து ஆனந்த பரவசமடைந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார்கள்.
தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றியது தேசியக் கொடியாக இருந்தாலும் அது காங்கிரஸ் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதால் இரண்டையும் வேறுபடுத்தி தேசபக்தியுள்ளவர்கள் பார்க்க மாட்டார்கள். மூவண்ண ராட்டைக்கொடி விடுதலைக்காக போராடிய கொடி. அசோக சக்கரம் பொறித்த சுதந்திர இந்தியாவின் கொடி. ஒரு நாட்டிற்கு அடையாளம் அரசியல் சாசனம்,கொடி, தேசிய கீதம் தான். அந்த வகையில் உலக நாடுகளால் நாம் யாரென்று அறிய நம் தேசிய கொடியே நமக்கு அடையாளம். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியை ஏற்றி, தலைவர் கே.எஸ்.அழகிரி பார்போற்றும் சாதனையை செய்திருக்கிறார்.
நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை நமது கொடி குறித்து பல பாடல்களை உணர்ச்சிப் பெருக்கோடு இயற்றியுள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்த பாடல்களை பாடாத தேசபக்தர்களே இருந்ததில்லை. அதில் ‘கொடி பறக்குது’ என்ற தலைப்பில் அவர் பாடிய பாடலை, சென்னை தொலைக்காட்சிக்கு நான் தயாரித்து அளித்த ‘கொடியின் கதை’ என்ற ஆறு வார தொடருக்கு தொடக்கப் பாடலாக (Title Song) புகழேந்தி இசையில் பாடகர் மனோ பாட இடம்பெற செய்தேன்.
கொடி பறக்குது கொடி பறக்குது
கொடி பறக்குது பாரடா!
கோணலற்ற கோலில் எங்கள்
கொடி பறக்குது பாரடா!
சிறைகிடந்து துயரமடைந்த
தேசபக்தர் நட்டது
தீரவீர சூரரான
தெய்வபக்தர் தொட்டது
முறைகடந்து துன்பம்வந்து
மூண்டு விட்ட போதிலும்
முன்னிருந்து பின்னிடாமல்
காக்கவேண்டும் நாமிதை!
வீடிழந்து நாடலைந்து
வினையிழந்த நாளிலும்
விட்டிடாத தேசபக்தர்
கட்டிநின்று காத்தது
மாடிழந்து கன்றிழந்து
மனையிழக்க நேரினும்
மானமாக நாமுமிந்தக்
கொடியைக் காக்க வேண்டுமே!
மனமுவந்திங் குயிர்கொடுத்த
மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று
நட்டுவைத்த கொடியிது!
தனமிழந்து கனமிழந்து
தாழ்ந்து போக நேரினும்
தாயின்மானம் ஆன இந்தக்
கொடியையென்றும் தாங்குவோம்!
இந்த பாடல் இயற்றி 90 ஆண்டுகள் நெருங்குகிற இக்காலகட்டத்திலும் இதை படிக்கிறபோது உணர்ச்சி வயப்படாதவர்களே இருக்க முடியாது. இன்றைக்கும் உணர்ச்சியை தூண்டுகிற வகையில் அன்றே பாடல் எழுதிய நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மகாகவி பாரதியின் வரிகளின்படி 150 அடி உயரத்தில் “ஓங்கிவளர்ந்ததோர் கம்பம்! அதன் உச்சியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்! கொடிக் கம்பத்தில் கீழ் நின்ற தேசிய வீரர் பெருந்திருக் கூட்டம் பார்த்து பரவசமடைவதை பாரீர்”. என்று போற்றுகிற அளவிற்கும் அந்த விழா சிறப்பாக அமைந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் டி.யசோதா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், கே.வீரபாண்டியன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், துறைகளின் தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் எழுச்சிமிக்க உரை காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய வெளிச்சத்தையும், உணர்ச்சியையும் வழங்கியது. தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று உறுதிமிக்க குரலில் அவர் கூறினார். அதை அங்கே திரண்டிருந்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கரவொலி மூலம் வரவேற்றனர்.
வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம் மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிற விழா நடைபெற்றது. இவ்விழாவில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தலைவர் அழகிரி வரவேற்றார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி கொடிக் கம்பத்தை சுற்றி சுவர் எழுப்பி அதில் பளிங்கு கற்கள் பதித்து கல்வெட்டில் பெயர்களை பொறித்து மிகச் சிறப்பாக அமைக்கிற பணியை டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் செய்திருந்தனர். பொன் கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. மேலும் பான்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைவதற்கு காரணமான பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். சேவாதள தலைவர் குங்ப்பூ விஜயன் தலைமையில் சேவாதள அணிவகுப்பு மரியாதை ஏற்கப்பட்டது. அதேபோல சத்தியமூர்த்தி பவன் மேலே புதிய பெயர் பலகை பொலிவுடன் அமைக்கப்பட்டது. இதை சிறப்பாக வடிவமைத்த ஓவியர் இரா.ஜெயசீலன் அனைவரது பாராட்டையும் பெற்றார்.
அருமை நண்பர்களே,
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவன் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. உலக கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டோடு 10 மாதங்கள் கடுமையாக உழைத்தால், மே 2021 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி சாதனைகளைப் படைக்கும். அதற்கான கால்கோல் விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
அன்பன்,
ஆ.கோபண்ணா
Our National Flag is a symbol of our freedom struggle. Hearty congratulations to the Tamil Nadu Congress Committee President Mr. K S Azhagiri, and other senior office-bearers who have made this feat of hoisting the tricolour on a 150-feet tall mast on Independence Day possible at Satyamurthi Bhavan and to Mr. A. Gopanna for his moving report.
Thanks for your support and appreciation!
ஒன்றுபட்டு உழைப்போம்