இனிய நண்பர்களே,
மத்தியில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவும், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவும், தமிழக காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அன்னை சோனியா காந்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதனடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 9 பொதுச் செயலாளர்களையும், 17 பொறுப்பாளர்களையும் மாநில வாரியாக நியமித்திருக்கிறார்.
இந்த நியமனத்தின் மூலமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா பொறுப்பாளராக கர்நாடக மாநில முன்னாள் பிரதேச காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த திரு. குண்டுராவ் அவர்களது மகன் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களை தமிழகத்தின் பொறுப்பாளராக நியமித்திருப்பது மிக மிக பொருத்தமானதாகும். தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தைச் சேர்ந்த திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் தமிழக அரசியலை நன்கு அறிந்தவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற காந்திநகர் தொகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களின் பேராதரவைப் பெற்றவராக திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் விளங்கி வருகிறார். அவரது நியமனத்திற்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சி புதிய பொலிவையும், வலிமையையும் பெறும் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அகில இந்திய காங்கிரசின் தமிழக பொறுப்பாளரான திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களை செப்டம்பர் 21 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. அழகிரி அவர்களுடன் சமீபத்தில் பெங்களுர் சென்று தமிழக காங்கிரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினோம். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, செயல் தலைவர்கள் திரு. மயூரா ஜெயக்குமார், திரு. மோகன் குமாரமங்கலம் மற்றும் திரு. டி.என். முருகானந்தம், திரு. பொன். கிருஷ்ணமூர்த்தி, திரு. டி. செல்வம் ஆகியோருடன் இணைந்து நானும் சந்தித்து உரையாடினோம்.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த செப்டம்பர் 24, 25 ஆகிய இரு நாட்களில் சென்னைக்கு வருகை புரிந்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களோடு கலந்துரையாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் நாளான 24.9.2020 அன்று காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அவரது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு செய்தியாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும், ஆதரவும் இருந்தது.
அதைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சியினரோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அடுத்தநாள் காலையிலும், மாலையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டங்களின் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியினரின் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆரோக்கியமான உரையாடல் நடைபெற்று 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான செயல் திட்டம் வகுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
வருகிற 2021 சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கும் இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன. உடனடியாக தமிழக காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக சீரமைக்கிற பணியை மேற்கொள்கிற வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த முடிவின்படி, கட்சி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்து முடிந்த பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முதற்கட்டமாக வாக்குச்சாவடி குழுக்களை அமைப்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது வாக்குச்சாவடி குழுக்கள் தான்.
தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 உறுப்பினர்கள் உறுதி செய்யப்பட வேண்டும். அத்தகைய பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். அதேபோல, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்படும். வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு கொள்கை பிரச்சார பாத யாத்திரைகள், தொகுதி அரசியல் மாநாடுகள் ஆகியவை நடத்தப்பட வேண்டுமென்று தலைவர் அழகிரி திட்டமிட்டிருக்கிறார். இதனை செயல்படுத்துவதற்கு திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கிறார்.
திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களுடைய வருகை தமிழக காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற வைத்திருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிற திரு. கே.எஸ். அழகிரி அவர்களைப் பற்றி திரு. தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்டு பேசும் போது, ‘பஞ்சாயத்து தலைவராக, பஞ்சாயத்து யூனியன் தலைவராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக என, தமது கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக பதவிகளைப் பெற்று இன்றைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றார். நிறைந்த அரசியல் அனுபவமும், செயல் திறனும் உள்ளவராக இருப்பதை என்னாலே அறிய முடிகிறது. எந்த நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதில் மிகுந்த தெளிவுள்ளவராக அவர் இருக்கிறார். அவரது சிறப்பான தலைமையின் மூலம் தமிழக காங்கிரஸ் கட்சி நிச்சயம் வலிமை பெறும் என நம்புகிறேன்’ என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அவரது உரை குழுமியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த கரவொலியையும், பேராதரவையும் பெற்றது. இதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மிகத் தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறார்.
“தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைவராக நியமிக்கப்பட்ட ஒருசில மாதங்களிலேயே அவர் விரைவில் மாற்றப்படுவார், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற வதந்திகளை பரப்புவது காங்கிரஸ் கட்சியில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதவி வகிக்கிற திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் குறித்து இதுவரை, இத்தகைய வதந்திகள் வெளிவராமல் இருப்பதே தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் மிகப்பெரிய சாதனை” என்று அனுபவமும், ஆற்றலுமிக்க தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் ஆகியோர் குறிப்பிட்டது பலத்த கரவொலியையும், வரவேற்பையும் பெற்றது. இந்தப் பின்னணியில் செப்டம்பர் 25 ஆம் தேதி மாலை நடைபெற்ற கூட்டத்தில் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள், “வருகிற சட்டமன்றத் தேர்தலை தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களது தலைமையில் தான் சந்திக்கப் போகிறோம்” என்ற தெளிவுபடுத்தியது அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை வழங்கியது. தமிழக காங்கிரசுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஏற்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிய சகாப்தத்தை திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் தொடங்கியிருக்கிறார்.
மேலும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து பல கட்ட போராட்டத்தை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள இருக்கிறது. இந்த போராட்டங்களின் மூலமாக விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிற பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், அதை எதிர்க்க துணிவற்ற அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுகிற வகையிலும் தமிழக விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிற வகையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார். இத்தகைய போராட்டங்களின் மூலம் விவசாய விரோதச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் கிளர்ந்து எழுந்ததற்கு ஈடாக தமிழகத்திலும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்காக வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக மாவட்ட, வட்டார, நகரங்களில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, வடசென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி கலந்து கொள்கிறார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
விவசாயிகளுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று (24.09.2020) மாலை 7.07 மணிக்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக அத்துறையின் தலைவர் திரு ஜெ.எம்.எச். ஹசன் மௌலானா அவர்கள் தலைமையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்த்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் திரு தினேஷ் குண்டு ராவ் எம்.எல்.ஏ., தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் திருமதி ஜெபி மேத்தர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், திரு சி.டி.மெய்யப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., திரு மயூரா எஸ்.ஜெயக்குமார், திரு மோகன் குமாரமங்கலம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.