அன்புடையீர்,
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயின் உண்மை தன்மையை தெளிவுபடுத்துகிற வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தொலைக்காட்சி ஊடகங்கள் கொரோனா தொற்றுக் குறித்து பரபரப்பாக வெளியிட்ட செய்திகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் வளர்த்திருக்கிறது. மக்கள் தன்னம்பிக்கை இழந்து கொரோனா நோயை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போதோ, செல்பேசியில் பேசும் போதோ கொரோனா பற்றிய பேச்சே ஆக்கிரமித்து கொள்கிறது. கொரோனாக்கு தீர்வு காண நிறைய மருத்துவமுறைகள் கூறப்படுகின்றன. ஆனால், கொரோனா பற்றிய சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு ஏற்படவில்லை.
இந்நிலையில் நம்பகதன்மை மிக்க பி.பி.சி நிறுவனம் கொரோனா குறித்து மிகத் தெளிவான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையை ‘இந்து’ குழுமத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திரு என். ராம் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை நான் ரீட்விட் செய்ததோடு, அக்கட்டுரையை மொழி பெயர்த்து தேசியமுரசு டாட் காமில் வெளியிட வேண்டுமென்று முடிவு செய்தேன். அதன்படி, பி.பி.சி. யில் வெளிவந்துள்ள கட்டுரையின் தமிழாக்கம் இங்கே வெளியிடப்படுகிறது. இக்கட்டுரை அச்சத்திலிருக்கும் மக்களுக்கு சரியான புரிதலையும், நம்பிக்கையையும் தரும் என்று நம்புகிறேன்.

பி.பி.சி. இல் வெளிவந்துள்ள கட்டுரையின் தமிழாக்கம்:
சளி, காய்ச்சல் மற்றும் கொரோனாவுக்கு வெவ்வேறு வைரஸ் காரணமாக இருந்தாலும், அறிகுறி ஒரே மாதிரியாகவே உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலோருக்கு, கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருக்கும்.
- உடலில் அதிக வெப்பம்.
- புதிதாகத் தொடர்ந்து இருமல் இருப்பது.
- நுகர்தல் அல்லது சுவையில் மாற்றம் அல்லது இழப்பு.
எனவே, வரும் மாதங்களில் பின்பற்றவேண்டிய மற்ற விசயங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காய்ச்சல் என்றாலே கொரோனா என்று அர்த்தமா?
உடலின் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37.8 சென்டிகிரேடுக்கு மேல் இருப்பதையே குறிக்கிறது. ஏதாவது தொற்றுடன் உடல் போராடும்போது தான் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும். கொரோனா வைரஸ் மட்டுமல்ல, பிற வைரசுகளுக்கும் இதேதான் காரணமாக இருக்கிறது.
உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டரைப் பயன்படுத்தலாம். இத்தகைய வசதி இல்லை என்றால், நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதிகளைத் தொட்டுப் பார்த்து வெப்பநிலையை அறிந்து கொள்ளலாம்.
காய்ச்சல், கொரோனா வைரஸ் போல் தோன்றினாலும், இது வேறு காய்ச்சலாகவோ அல்லது வெவ்வேறு தொற்றுகளாகவோ இருக்கலாம்.
இருமல் எப்படி வருகிறது?
உங்களுக்கு சளியோ அல்லது காய்ச்சலோ இருந்தால், மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து நிச்சயம் இருமலும் இருக்கும்.
வழக்கமாகக் காய்ச்சல் திடீரென வரும். உடல் வலி, குளிர், தலைவலி, அயர்வு, தொண்டை வலி, இருமலுடன் ஜலதோஷம் இருக்கும். கடும் சளியை விட மோசமானதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் என்றால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து இருமல் இருக்கும். 24 மணி நேரத்துக்குள் இதுபோன்று 3 அல்லது அதற்கு மேற்பட்ட தடவை இருமல் வரும்.
தொடர்ந்து இருமல் இருந்தால், நீங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
நுகர்தல் மற்றும் சுவையில் ஏற்படும் மாற்றம் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான முக்கிய அறிகுறி என்பதால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
- சளி அல்லது சாதாரண காய்ச்சலிலிருந்து கொரோனா வைரசால் ஏற்படும் நுகர்தல் இழப்பு வித்தியாசமானதாக இருக்கும்.
- கொரோனாவால் நுகரும் உணர்வை இழக்கும் போது, இறைச்சி மீது பெட்ரோல் வாசம் வரும்.
கொரோனா வைரசின் முக்கிய அறிகுறிகள்:

- காய்ச்சல் – பொதுவானது
- இருமல் – பொதுவானது
- சுவை, நுகரும் உணர்வு இழப்பு – உடனே
- சோர்வு – சில சமயங்களில்
- தலைவலி – சில சமயங்களில்
- மூக்கு ஒழுகுதல் – எப்போதாவது
- தொண்டை வலி – எப்போதாவது
- தும்மல் – இருக்காது
- குறைவான சுவாசம் – சில சமயங்களில்
- வயிற்றுப் போக்கு – சில சமயங்களில், குறிப்பாகக் குழந்தைகளுக்கு.
தும்மல் இருந்தாலே கொரோனா வைரசா?
கொரோனா வைரசுக்குத் தும்மல் ஓர் அறிகுறி அல்ல. காய்ச்சல், இருமல் அல்லது நுகர்தல் மற்றும் சுவை இழப்பு இல்லாதவரைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கை, முகம், மற்றும் இடைவெளி ஆகியவை கொரோனா வைரஸ் மற்றும் மற்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.
- தொடர்ந்து கைகளைக் கழுவ வேண்டும்
- சமூக இடைவெளி சாத்தியம் இல்லாதபட்சத்தில், முகக்கவசம் அணிய வேண்டும்.
- உங்கள் குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்களிடம் இருந்து தொலைவில் இருக்க வேண்டும்.
மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
குளிர்காலத்தில் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கும், வேலை பார்க்கும் இடங்களிலிருந்து வீட்டுக்குத் திரும்புவோருக்கும் சளி இருக்கும்.தொடர்ந்து மூக்கு ஒழுகினால், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என ஸ்காட்லாந்தின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவைக் கண்காணிக்கச் செயலியை பயன்படுத்தும் மக்கள் தெரிவித்துள்ள ஆலோசனையில், குழந்தைகளுக்குக் குறைந்த அளவில் சுவாசப் பிரச்சினை ஏற்படுவதாகவும், பெரும்பாலும் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தோல் தடிப்புகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உடல் சுகவீனம் என்றால் என்ன?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு வகையான அறிகுறிகள் தென்படுகின்றன. கொரோனா அறிகுறிகளில் சில இல்லாமல் இருந்தாலும், தொற்று இருக்கும்.
குறைந்தது 2 வாரங்களில் கொரோனா வைரசுக்கான அறிகுறி தெரியும். ஆனால், வழக்கமாக 5 நாட்களில் தெரியும்.
கொரோனா வைரஸ் பாதிப்பில், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதை உணரலாம்.
சுவாசிப்பதில் பிரச்சினை இருந்தால், மருத்துவரை இணையத்திலோ அல்லது நேரடியாகவோ சந்திக்கலாம்.
கொரோனாவை புரிந்து கொள்வோம்.
அச்சத்தைத் தவிர்ப்போம்.
நம்பிக்கையை வளர்ப்போம்.
அன்பன்
ஆ. கோபண்ணா