இனிய நண்பர்களே,
20 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று 2004 இல் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் அன்னை சோனியா காந்தி. தம் மீது திணிக்கப்பட்ட பிரதமர் பதவியை மறுத்து அந்த பதவிக்கு தகுதியானவராக பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியவர். அதன்மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று சாதனை படைத்தவர். காங்கிரஸ் தலைவராக அன்னை சோனியா காந்தியும், பிரதமராக மன்மோகன் சிங்கும் மிகுந்த நல்லிணக்கத்தோடு பணியாற்றியதால் மத்தியில் 10 ஆண்டுகாலம் நிலையான ஆட்சியை காங்கிரஸ் கட்சி வழங்கியது. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைத்தன. இத்தகைய சாதனைகளைப் படைத்தவர் அன்னை சோனியா காந்தி.
கடந்த 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி விலகுவதென முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டுக்கோப்புடன் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய பெரும் சுமையை அவர் ஏற்று செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சனம் செய்கிற வகையில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் கடிதம் எழுதினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், 23 பேர் எழுதிய கடிதம் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அன்னை சோனியா காந்தி தொடர்ந்து 6 மாதத்திற்கு தலைவராக நீடிக்கழ வேண்டுமென்று கோரினார்கள். அதற்குள்ளாக அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டுமென்கிற கருத்தையும் வலியுறுத்தினார்கள். கடிதத்தில் கையொப்பமிட்ட எவருக்கும் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எந்த ஆதரவும் இல்லை.
மக்களவை தேர்தலை சந்திக்காமலேயே காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளைப் பெற்றவர்கள் காங்கிரஸ் தலைவருக்கு தேர்தல் நடத்த வேண்டுமேன்று கோரிக்கை விடுத்திருப்பது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது. மக்கள் எவரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியும். சோனியா காந்தி தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதனால் காங்கிரசின் தலைவராக 20 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் செல்வாக்கு பெற்ற ராகுல்காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில், ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை, பா.ஜ.க. ஆட்சியை எதிர்த்து தன்னந்தனியாக போராடினேன்’ என்று தமது கடிதத்தில் கூறி, காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகினார்.

தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகினாலும், மீண்டும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த நேரத்தில் தான் 1998 இல் அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதேபோல, உடல் நலிவுற்றிருக்கிற அன்னை சோனியா காந்தி வகிக்கிற தலைமை பொறுப்பை விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்பதே நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம் மட்டுமல்ல, பொதுமக்களின் விருப்பமும் கூட.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாக அமைப்பை அன்னை சோனியா காந்தி சீரமைத்திருக்கிறார். செயற்குழுவிற்கு 22 உறுப்பினர்களை நியமித்ததோடு, நிரந்தர அழைப்பாளர்களாக 26 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு துணைபுரிகிற வகையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் வரை செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய சீரமைப்பு நடவடிக்கையின்படி பொதுச்செயலாளர்களாக 9 பேரும், மாநில பொறுப்பாளர்களாக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த கர்நாடக முதலமைச்சர் குண்டுராவ் அவர்களின் புதல்வராவார். இவர் ஏற்கனவே கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். கட்சி செயல்பாடுகளில் மிகுந்த அனுபவம் உடையவர். இவரது நியமனத்தின் மூலம் தமிழகத்தில் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமையும், புத்துணர்ச்சி பெறுகிற வகையில் இவரது வழிகாட்டுதல் துணைபுரியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நிகழ்த்த வேண்டிய சீரமைப்புப் பணிகள் மிக விரைவாக நடத்தி முடிப்பதற்கு தினேஷ் குண்டுராவ் நியமனம் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகத்தில் இருந்து தெலங்கானா மாநில பொறுப்பாளராக மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஒரிசா மாநில பொறுப்பாளராக மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.
இந்தியாவை கடந்த 6 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையில் ஆண்டு கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்திற்கு விரோதமாக எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதை முடக்குவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதை எதிர்கொள்ள முடியாமல் மனஉளைச்சலில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட முடியாமல் முடங்கி விடுவார்கள் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் அடக்குமுறையை எதிர்த்து சிறை சென்ற டி.கே. சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, கர்நாடகத்திலும் மத்தியபிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் வெற்றி பெறுவதை தடுக்கிற வகையில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் கடைபிடித்த உத்திகளின் அடிப்படையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்றுக் கொண்டால் மிகப்பெரிய எதிர்ப்பு சக்திகளின் வடிவமாக அவர் திகழ்ந்து விடுவார் என்று பா.ஜ.க. கருதுகிறது. அவர் தலைவராவதை தடுக்கும் வகையில் ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன. காங்கிரஸ் தலைவர்களிடையே சந்தேகங்களையும், கருத்து வேறுபாடுகளையும் வளர்ப்பதற்கு கட்டுக்கதைகள் ஊடகங்கள் மூலமாக நாள்தோறும் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய காங்கிரசை முடக்கும் உத்திகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலரே செயல்படுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. இத்தகைய நிலையை உருவாக்குகிற வகையில் செயல்படுகிறவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து களையெடுக்கப்படுகிற காலம் வெகு தொலைவில் இல்லை.
எனவே, 136 ஆண்டுகால பாரம்பரியமிக்க மகோன்னதமான காங்கிரஸ் பேரியக்கத்தை காப்பாற்றுவதற்கும், பா.ஜ.க. ஆட்சியை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கும் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும். அவர் பொறுப்பேற்பதில் ஒருசில மாதங்கள் காலதாமதம் ஆகலாம். ஆனால், காங்கிரஸ் தலைமையை ஏற்பதை அவர் தட்டிக்கழிக்க முடியாது. நேரு பாரம்பரியத்தில் வந்தவர்கள் இதுவரை நாட்டையும், காங்கிரஸ் கட்சியையும் காப்பாற்றுவதற்கு செய்த தியாகங்கள் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரா காந்தியும், ராஜிவ்காந்தியும் தங்களை பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உயிர்த் தியாகம் செய்த நேரு பாரம்பரியப் பின்னணியில் வளர்ந்த தலைவர் ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைமை பொறுப்பை என்றைக்கு ஏற்கிறாரோ, அதுவே பா.ஜ.க. ஆட்சிக்கு விடப்படுகிற சவாலாக அமையும். விரைவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டு, ராகுல்காந்தி தலைமை ஏற்கிற மகிழ்ச்சியான காலம் விரைவில் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
அன்பன்,
ஆ. கோபண்ணா