இனிய நண்பர்களே, வணக்கம்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,496. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,291. இதில் கவலை தருகிற விஷயம் என்னவென்றால் இறப்பு விகிதம் கூடிக்கொண்டே போவதுதான்.
மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய சுகாதாரத்துறை மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். ஆனால், நரேந்திர மோடி அரசு, முடிவுகளை எடுத்து மாநில அரசுகள் மீது திணித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளிடையே கொரோனாவை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயல்திட்டம் இல்லாத காரணத்தால் தமிழகத்தில் 0.8 சதவிகிதமாக இருந்த இறப்பு விகிதம் 1.4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 60, 70 பேர் இறந்து போகின்றனர். தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,167. சென்னையில் மட்டும் 1,318. இதனால், தமிழக மக்கள் அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா நோய் சென்னை மாநகரில் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவினால் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் விளைவுகள் கடுமையாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்ட பிறகு, செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் திறமையாக செயல்படக்கூடியவர். கொடுத்த பணியை வெற்றிகரமாக முடிப்பவர். ஆனால், சென்னை மண்டலத்தை பல பகுதிகளாக பிரித்து சில அமைச்சர்களிடம் பொறுப்பு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. தொடக்கத்தில் வேகமாக பணியாற்றிய அமைச்சர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை களத்தில் பார்க்க முடியவில்லை. கொரோனாவை எதிர்கொள்ளவேண்டிய முழுப் பொறுப்பு சுகாதாரத்துறை செயலாளரிடம் குவிந்திருக்கிறது. அதனால், தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கும், சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த ஜுன் 11 முதல் ஜுலை 5 வரை கொரோனா தொற்று காரணமாக இறந்த 290 பேர் மாநில இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கடந்த மார்ச் முதல் ஜுன் 10 ஆம் தேதி வரை 256 பேரின் மரணம் ஏற்கனவே மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது. ஆக மொத்தம் 546 பேரின் மரணம் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படாதது தமிழக சுகாதாரத்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒர் உதாரணமாகும். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை சேர்க்கிற போது தற்போதுள்ள இறப்பு விகிதம் 1.6 சதவிகிதத்திலிருந்து 2.3 சதவிகிதமாக உயர்ந்து விடுகிறது.
மேலும் மரணமடைந்த 290 பேரது பெயர்கள் விடுபட்டது குறித்து உறுதி செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு இடங்களில் உள்ள சுடுகாடு, இடுகாடு ஆகியவற்றில் விசாரணை செய்தது. இதனையடுத்து, 290 மரணங்கள் ஜுன் 11 முதல் ஜுலை 5 வரை நிகழ்ந்ததாக தமிழக சுகாதாரத்துறைக்கு மாநகராட்சி மருத்துவ அதிகாரி உறுதிப் படுத்தி கடிதம் எழுதியிருக்கிறார். இந்த 290 பேரில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் தொற்று மார்ச் மாதத்தில் ஒன்றாகவும், அடுத்த 61 நாளில் 5 ஆயிரமாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 23 நாட்களில் 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்தது. கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உயர்வுக்கு காரணம் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதுதான் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்த நிலையில் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.
பொது ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. மக்களிடையே இருக்கிற அச்சத்தைப் போக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை செய்வதற்கே அச்சப்படுகிற நிலையில் மக்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று சிகிச்சை மூலம் தீர்வு காணமுடியும் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உரிய மருந்துகளை தமிழக அரசு இலவசமாக விநியோகம் செய்யவேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கமுடியும்.
கொரோனாவை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடுகளில் வியட்நாம் முதன்மை நிலையில் இருக்கிறது. சீன எல்லையில் அமைந்துள்ள ஏறத்தாழ 10 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 தான். இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி கூட 4.1 சதவிகிதமாக இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. வியட்நாமில் 10 ஆயிரம் பேருக்கு எட்டு மருத்துவர்கள் தான் உள்ளனர். ஆனால் இந்தியாவை விட அதிகமாக இருந்தாலும் 22 ஆக உள்ள பிரேசில் நாட்டை விடவும், 26 ஆக உள்ள அமெரிக்க நாட்டைவிடவும் வியட்நாமில் குறைவான மருத்துவர்கள் தான் உள்ளனர். அந்த வகையில் வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனாவை எதிர்கொண்டு வெற்றி பெறுகிற போது இந்தியாவினால் முடியாதது ஒன்றும் அல்ல.
கொரோனாவின் முதல் தொற்று மார்ச் மாதத்தில் கேரளாவில் தென்பட்டதும் தொலைநோக்குப் பார்வையுடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க மோடி அரசு தவறிவிட்டது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி 4 மணி நேர அவகாசத்தில் பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். பணமதிப்பு நீக்கம் எப்படி முன் திட்டமிடல் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டதோ, அதைப் போலவே பொது ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. பொது ஊரடங்கினால் வேலைவாய்ப்பிழந்த 13 கோடிக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும், குடியிருக்கிற இடத்தில் வாழ்வாதாரத்தை இழந்தும் அவர்கள் சந்தித்த துன்பத்திற்கு அளவேயில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி செய்யாத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மைல்கள் நெடுஞ்சாலைகளில் குடும்பத்தோடு மூட்டை, முடிச்சுகளை தலைகளில் சுமந்து கொண்டு அகதிகளைப் போல நடந்தே சென்றனர். இந்த நடைப் பயணத்தின் போது, விபத்து, மனஉளைச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 160 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைப்பற்றியெல்லாம் மோடி அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
எனவே, கொரோனா தொற்று என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கிற நோயல்ல. உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவியல் ரீதியாக சிந்தித்து எவ்வளவு விரைவாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் படுகின்றதோ, அப்பொழுதுதான் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.
“தேசிய முரசு ” இணைய இதழா வருவதை இன்றுதான் (19.07.2020) அறிந்தோம். மிக்க மகிழ்ச்சி. வரவேற்கிறோம்.
தேச விடுதலைப் போராட்டத்தில் வளர்க்கப்பட்ட, வளர்ந்து வலிமை பெற்ற மரபுகளில் முற்போக்கு தன்மை கொண்டதை முன்னெடுப்பதும், கால வளர்ச்சியில் கை விடப்பட வேண்டியவைகளை தயக்கமின்றி உதறி தள்ளவும் தயக்கம் கொள்ளக் கூடாது.
அச்சு வாகனத்தில் வந்த ‘தேசிய முரசு’ இதழின் வாசகன் என்கிற முறையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நண்பர்கள் அனைவரையும் ‘தேசிய முரசு’ வாசியுங்கள். விவாதியுங்கள். முன்னெடுத்துச் செல்லுங்கள்.
சுயசார்பு இந்தியா, தேச பாதுகாப்பு, தேச பக்தி என்ற ‘வாய்ச்சவடால் ‘ பேர்வழிகளை நிதி மூலதன சக்திகள் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆபத்தை உணர வேண்டும்.
நமது தாய் நாட்டை பாதுகாப்பது என்பது ‘தேர்தல் ‘ நடவடிக்கையாக மட்டும் சுருங்கி விடக்கூடாது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் மதவெறி சக்திகளை எதிர் கொள்ள ‘தேசிய முரசு’ போர் முழக்கமாக ஒலிக்க வேண்டும் .
சாண் ஏறினால் முழம் சறுக்கும் கசப்பான அனுபவம் திரும்ப திரும்ப வருகிற போதும் கொள்கை வழிப் பயணத்தை தொய்வின்றி முன்னெடுக்கும் சகோதரர் திரு ஆ கோபண்ணா வெற்றி பெற வேண்டும். அது அவரது வெற்றி மட்டும் அல்ல தேசத்தின் வெற்றியாக அமையும். தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நா பெரியசாமி Ex MLA ,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
உங்கள் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி !
நான் காங்கிரஸில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆனாலும்
செய்வதைத் திருந்தச் செய் ,
ஆழம் தெரிந்து காலை விடு
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
இதுபோன்ற பொன் மொழிகளையும் இன் மொழிகளையும் தெரிந்து அரசியலில் இறங்கி இருக்கிறேன்
நான் சிறுவயது முதலில் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கொண்டவன் ஏனென்றால் பத்து வயதாக இருக்கும் போதே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன் நான் குடியுரிமை பணிக்காக சிறுவயதிலிருந்தே படிக்கத் தொடங்கியிருந்தேன் டீ காபி குடிக்க மாட்டேன் ஆனால் பத்திரிக்கை படிப்பதற்காக காப்பி கடைக்குச் சென்று உட்கார்ந்து பேப்பரை மட்டும் படித்து விட்டு வந்து விடுவேன் .
இப்படியாக காலங்கள் உருண்டோடி எந்த நகரத்துக்கு சென்றாலும் மாவட்ட மைய நூலகத்தில் சென்று குடியுரிமைப் பணி அன்றாடச் செய்திகளையும் படித்து தேர்வு முறைக்காக எழுதிக் கொள்வேன் அரசியலுக்கு வந்த பின் எந்த நாளிதழ் படிக்க வேண்டும் என்று பெரிய குழப்பமாக இருந்தது எனது நண்பர் ஒருவர் தீக்கதிர் படிக்கலாம் என்று சொன்னார் தீக்கதிர் ஒரு வருட சந்தா தொகை ஆயிரத்து 500 ரூபாய் கட்டி விட்டேன் அடுத்த இதழாக நமது தேசிய முரசை ஆரம்பிக்கிறோம் என்று அறிவித்தபோது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாகவே காங்கிரசுக்காக ஒரு பத்திரிக்கை இல்லையே என்று கவலை இருந்தது நாமே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தால் என்ன என்று கூட என் மனதுக்குள் ஒரு ஆசை குடிகொண்டிருந்தது அதனால்தானோ என்னவோ தேசிய முரசு வந்தவுடன் ஆவலாக விசாரித்து கோபண்ணாஅவர்களையும் நான் தொடர்பு கொண்டேன் இந்த தேசிய முரசு படிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செய்திகள் சாதனைகள் மற்றும் அரசியல் செய்திகளை அன்றாட பாமரனுக்கும் பரவிட செய்தல் வேண்டும்தமிழக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு விஸ்வரூப தரிசனத்தை மக்களுக்கு தரவேண்டும் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமல்படுத்தி மக்களுக்கு சேவை செய்து தமிழனாக தமிழக வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கை துறையில் நமது தேசிய முரசும் ஒரு முக்கிய தூணாக இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது
நன்றி இப்படிக்கு கே குணசேகரன்
இலக்கிய அணி ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி