அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 பேர் யார், யார் ?
குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசிதரூர், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், பி.ஜே. குரியன், ரேணுகா சவுத்ரி, மிலிந்த் தியோரா, அஜய் சிங், தன்கா, ஜிதின் பிரசாதா, புபீந்தர் சிங் ஹூடா, ராஜேந்தர் கவுல் பட்டால், வீரப்ப மொய்லி, ப்ரித்விராஜ் சவுகான், ராஜ்பப்பர், அர்விந்தர் சிங் லவ்லி, கௌல்சிங் தாகூர், அகிலேஷ் சிங், குல்தீப் சர்மா, யோகானந்த் சாஸ்திரி, சந்திப் தீக்ஷித் ஆகியோரே அந்த 23 பேர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகாலமாக மாநிலங்களவை உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள். அன்னை சோனியாவின் கருணையால் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள்.
கொரோனா தொற்று இருக்கிற சூழலில், அன்னை சோனியா உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நேரத்தில், அவரை புண்படுத்துகிற வகையில் 23 பேர் கடிதம் எழுதியதை எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கடிதம் எழுதியதை விட அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டு தொலைக்காட்சி விவாதங்களின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு 23 பேர் கடிதம் உதவியிருக்கிறது. இதைத் தவிர, காங்கிரஸ் கட்சிக்கு இந்த கடிதத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த கடிதத்தை எழுதுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
கடந்த ஓராண்டு காலத்தில் கட்சி வளர்ச்சிக்கு இவர்களது பங்களிப்பு என்ன என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும். அமரர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த அன்னை சோனியா காந்தியை வலியுறுத்தி அழைத்து வந்து, காங்கிரஸ் தலைமையை ஏற்க வைத்து, மத்தியில் பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி அமைந்து, அதில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, உடல் நலிவுற்றிருக்கிற நேரத்தில் இப்படி ஒரு கடிதம் எழுதலாமா ? கடிதம் எழுதுவதில் ஏன் இந்த அவசரம்?
அன்று காங்கிரஸ் தலைமையை சோனியா காந்தி ஏற்க மறுத்திருந்தால், இன்று காங்கிரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதை 23 தலைவர்களும் அமைதியாக, மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை வழங்குகிற உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப ஒத்தி வைப்பது ஏன் ?
நாடு முழுவதும் ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள். அவரது துணிவை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் அவர் ஒரு நேர்மையான போராளி. இந்தப் பின்னணியில் தான், பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கிக் கொண்டு வருகிறது. ஆனால், பிரசாந்த் பூஷன், ‘நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, எனது மனசாட்சிப்படி நான் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை’ என்று துணிவுடன் கூறியிருக்கிறார். இதையொட்டி அவருக்கு தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்பதையே வழக்கு ஒத்திவைப்புகள் உணர்த்துகின்றன.
தி.மு. கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே ?
கடந்த 2013 இல் தடை விதிக்கப்பட்ட குட்கா, தமிழகத்தில் பரவலாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. இதுகுறித்து 2017 இல் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்தன. குட்கா தொழிலில் ஈடுபட்டுள்ள மாதவராவ் சம்மந்தப்பட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும், ரூபாய் 250 கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், காவல்துறை தலைமை அதிகாரி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தமிழக அமைச்சர் பி.வி. ரமணா மற்றும் சில சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. மேலும், வருமான வரி சோதனையில் சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு ரூ.39.91 கோடி வழங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கின. ஆனால், 20 மாதங்களாக சி.பி.ஐ. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதில் பா.ஜ.க.வின் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.
இந்தப் பின்னணியில் தான் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடுக்கப்படவில்லை என்பதை அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு உணர்த்துகிற வகையில் எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் குட்கா போதைப் பொருளை சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்து சபாநாயகர் முன்னிலையில் காட்டினார்கள். இது அவை உரிமையை மீறுவதாக கூறி 21 எம்.எல்.ஏக்கள் மீது நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அ.தி.மு.க.வின் பழிவாங்கும் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முடிவு கட்டியிருக்கிறது.
மத்திய அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு ரத்து செய்ய மறுப்பது ஏன் ?
இ-பாஸ் முறை தொடருவதால் ஆளுங்கட்சி இடைத் தரகர்களின் வியாபாரம் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க. அரசு முன்வராதது வியப்பொன்றும் இல்லை.
டி.டி.வி. தினகரன் சமீபகாலமாக எங்குமே தென்படவில்லையே ஏன் ?
தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் வல்லவராக விளங்கிய டி.டி.வி. தினகரன் 150 நாட்களுக்கும் மேலாக எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. தம்மை தேர்ந்தெடுத்த ஆர்.கே. நகர் தொகுதியைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. ஒருவேளை கொரோனா பயத்தினால் தம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டிற்குள் முடங்கி இருக்கிறாரோ என்னவோ ? ஒருவேளை சசிகலா விடுதலைக்கு வியூகம் வகுக்கிறாரா ? யாம் அறியோம் பராபரமே!
உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டு என துக்ளக் தலையங்கம் எழுதியுள்ளதே ?
எல்லோரும் தெற்கே சென்றால், துக்ளக் மட்டும் வடக்கே செல்வது வழக்கம். பிரசாந்த் பூஷன் வழக்கில் ஜனநாயக உணர்வு உள்ள அனைவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சிக்கிற போது, அவர்களுக்கு வக்காலத்து வாங்க துக்ளக் முயற்சிக்கிறது. எப்போதுமே துக்ளக் வழி, தனிவழி தான். வெகுஜன அரசியலுக்கும், துக்ளக்கிற்கும் எப்போதுமே சம்மந்தம் இருந்தது இல்லை.
பா.ஜ.க.வில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை சேர்ந்த செய்தி நாளேடுகளில் முக்கியத்துவமாக வெளிவந்துள்ளதே ?
அவர் சாதாரண அண்ணாமலையாக இருந்தால் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்காது. அவர் ‘சிங்கம் அண்ணாமலை’. எனவே, பரபரப்புடன் செய்தி வெளியாகி இருக்கிறது. விரைவில், கமலாலயத்தில் சிங்கம் நுழைய உள்ளது. பாதுகாப்பாக இருப்பது பா.ஜ.க.வினருக்கு நல்லது.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே கலாச்சாரம், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே நீட் தேர்வு என பா.ஜ.க. அரசு அதிகாரக் குவியலுடன் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தி வருவது நாட்டிற்கு நல்லதா ?
பா.ஜ.க. ஆட்சி நடப்பதே நாட்டிற்கு நல்லதல்ல. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். இதில் ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும். அரசமைப்பு சட்டப்படி மோடி ஒரு பிரதமர். ஆனால், செயல்பாட்டின்படி ஒற்றை ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். முன்பு மோடியுடன் அமித்ஷா மட்டும் தெரிந்தார். இப்போது மோடி மட்டுமே தெரிகிறார். இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.