தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் நிலையில் கூட, தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறாரே?
2021 மே மாதத்தில் நடக்கவிருக்கிற சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களுக்கு முன்பாகவே, தேர்தலுக்கான வாக்குச்சாவடி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குழுவை ஆய்வு செய்கிற பணியை திருப்பூர், கோவை மாவட்டங்களில் அமரர் ராஜீவ் காந்தி பிறந்த நாளன்று தொடங்கியிருக்கிறார். நாள்தோறும் காலையிலும், மாலையிலும் செயல்தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கோபி, தென்னரசு ஆகியோர் துணையோடு வாக்குச்சாவடி தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று செயல்திட்டத்தையும் வகுத்திருக்கிறார்.
கொரோனா தொற்று பரவல் குறித்து கடுகளவும் கவலை கொள்ளாமல், காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்திவருகிற தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் பணியை காங்கிரஸ் கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் பாராட்டி பேசி வருகிறார்கள். தமது உடல்நிலையைக் கூட துச்சமென நினைத்து, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிற கே.எஸ். அழகிரி அவர்களின் துணிவை எல்லோருமே பாராட்டத்தான் செய்வார்கள்.
ஆன்லைன் வகுப்புகளில் பயில அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்காது. நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகள் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 65 சதவிகித பேரிடமும், கிராமப்புறங்களில் 44 சதவிகித பேரிடமும் மட்டுமே இணைய தள வசதி உள்ளது. கிராமப்புற மாணவர்களிடையே இணைய சேவை, ஸ்மார்ட் போன், லேப்டாப் வசதிகள் இல்லை. கிராமப்புறங்களில் பெரும்பாலும் செல்பேசிக்கான சிக்னல் கிடைப்பதில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறப்பதன் மூலமே மாணவர்கள் முறையான கல்வி பயில முடியும். எனவே, ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி பயில்வதற்கு பெரும்பாலான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் செயல் தலைவர் வசந்தகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனரே?
தோழர் நல்லக்கண்ணுவை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியாகி இருப்பது மனதிற்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. ‘புன்னகை மன்னன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் அளவிற்கு எப்பொழுதும் சிரித்த முகத்தோடு இயக்கப் பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் எச். வசந்தகுமார், சேவை மனப்பான்மையோடு, கட்சிப் பணியாற்றி வரும் ரூபி மனோகரன் உள்ளிட்டவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வரவேண்டுமென மனதார வாழ்த்துகிறோம். நம்மைப் போன்றவர்களின் வாழ்த்துகள் நிச்சயம் பயனளிக்கும்.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளதே?
தேர்தல் நடைமுறைகளை வெளியிடுவது மிக, மிக சுலபம். ஆனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் பணநாயகத்தை ஒழித்து, ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்பதற்கு எந்த குறிப்பும் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளில் இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.
கொரோனா நோய் தொற்றுக் காரணமாக இந்திய பின்னலாடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறதே?
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்திய அளவில் 2019 – 20 ஆம் ஆண்டில் ரூ 53,145 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், கடந்த 4 மாதங்களில் ரூ 9,342 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் திருப்பூரில் ரூ 24,750 கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றது. ஆனால், நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில் ரூ 4,324 கோடிக்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. பொதுவாக, பின்னலாடை நுகர்வு குறைந்துள்ளதே இதற்கு காரணம்
திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாகவும் பின்னலாடை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் உரிய தீர்வு காண மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் அதிக அளவில் பரவி வருகிறதே?
சென்னை மாநகரத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த எண்ணெயை சிகரெட்டில் பயன்படுத்தி, போதைப் பொருட்களாகப் பயன்படுத்துகிறார்கள். அதைப் போல, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சாவும், ஆவடியில் 15 டன் குட்காவும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, காவல்துறை உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்நிலையில், குட்கா, கஞ்சா அதிகளவில் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிற தலைநகரமாக சென்னை மாநகரம் மாறி வருவதற்கு காவல்துறையினரின் அலட்சியப் போக்குத்தான் காரணமாகும்.
கொப்பரை தேங்காய்க்கான மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை பாதித்துள்ளதே?
தமிழகத்தில் ஏறத்தாழ 4.40 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கொப்பரை தேங்காய்க்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு கிலோவிற்கு ரூபாய் 99.60 வழங்கி வருகிறது. இதை கிலோவிற்கு 130 ரூபாயாக வழங்க வேண்டுமென மத்திய அரசை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தேங்காய் போன்ற விளை பொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை கொடுக்கவும், அதை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதை மோடி அரசு பரிசீலிக்க வேண்டும்.
தூய்மையான நகரங்களில் முன்னணி வரிசையில் இருந்த சென்னை மாநகரம் பின்னுக்கு தள்ளப்பட்டது ஏன்?
இந்தியாவில் தூய்மையான நகரங்களின் வரிசையில் கடந்த ஆண்டு 61 வது இடத்திலிருந்த சென்னை மாநகரம் நடப்பாண்டில் 312 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இந்த தகவல் வெளியிடப் பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு 12 வது இடத்திலிருந்து 10 வது இடத்திற்கு இறங்கியுள்ளது. சென்னை மாநகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணியில் சென்னை மாநகராட்சி முழு தோல்வி அடைந்து விட்டதையே இது காட்டுகிறது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலித் பஞ்சாயத்து தலைவர் ஆகஸ்டு 15 அன்று தேசிய கொடியேற்றுவதற்கு பல தடைகள் போடப்பட்டுள்ளது எதைக் காட்டுகிறது ?
சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகளாகியும், கிராமப்புறங்களில் தீண்டாமை கொடுமை ஒழியவில்லை என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவர் திருமதி வி. அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றுவவதற்கு, ஊராட்சி துணைத்தலைவரும், செயலாளரும் சேர்ந்து பல தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த தடைகளை முறியடித்து தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வி. அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பெரிதும் துணை நின்ற மாவட்ட ஆட்சித் தலைவரையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் மனதார பாராட்டுகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கையாகும்.
கரும்பு கொள்முதல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருக்கிறதே?
2019 – 20 சந்தை ஆண்டில் கரும்புக்கு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 275 ஆக உள்ளது. இதைக் குவிண்டாலுக்கு 10 ரூபாய் உயர்த்தி, 285 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இந்த விலையை பெற வேண்டுமெனில், கரும்பிலிருந்து சர்க்கரை பிழி திறன் 10 சதவிகிதமாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் பிழி திறன் 8.5 சதவிகிதம் தான். இதன்படி, தமிழகத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூபாய் 285 க்கு பதிலாக ரூபாய் 260 தான் கிடைக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையை கிலோவிற்கு ரூபாய் 10 உயர்த்தியும் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 25 நஷ்டம்தான் ஏற்படுகிறது. எனவே, சர்க்கரை பிழி திறன் அளவை 10 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். மேலும், கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டுமென்பதே கரும்பு விவசாயிகளின் கோரிக்கையாகும்.