முக்கியமான நாட்டு நடப்புகள் குறித்து நாள்தோறும் ஆதியின் பதில்களை படியுங்கள் – ஆதி.கோபண்ணா.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போது சமூக நல்லிணக்கம், இந்தியாவின் ஒற்றுமை, மக்களிடையே பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவது குறித்து குறிப்பிட்டுள்ளாரே ?
பொதுவாக பிரதமர் மோடியின் பேச்சுக்கும், செயலுக்கும் எப்போதும் சம்மந்தம் இருந்ததில்லை. தமது உரையில் ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாக கூறுகிறார். இத்தகைய முயற்சியில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் ஈடுபட்டதில்லை. மகாத்மா காந்தி எந்தளவிற்கு ராம பக்தராக இருந்தார் என்பதும், வகுப்புவாத சக்திகளால் ஏவிவிடப்பட்ட நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட போது கடைசியாக உதிர்த்த வார்த்தை ‘ஹேராம்”. காந்தியடிகள் வழிவந்த காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் மீதும், ராமபிரான் மீதும் உண்மையான பக்தி கொண்ட இயக்கமாகும்.
ஆனால், 1984 இல் விஷ்வ இந்து பரிஷத்தும், 1989 இல் பா.ஜ.க.வும் முதல் முறையாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றின. அதுவரை ராமர் கோயிலைப் பற்றி பா.ஜ.க. நினைத்துப் பார்த்தது கிடையாது. அதன்மூலம் மத உணர்வுகளை தூண்டி, மக்களை பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பா.ஜ.க. ராம பிரானை கையில் எடுத்தது. இதன்மூலம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்த பா.ஜ.க., அடுத்து வந்த ஒவ்வொரு மக்களவை தேர்தலிலும் தனது எண்ணிக்கையை பெருக்கி அரசியல் ஆதாயம் பெற்றது.
இந்நிலையில் சமூக நல்லிணக்கம் பற்றியும், மக்களின் ஒற்றுமை குறித்தும் மோடி பேசுகிறார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியில் 303 மக்களவை உறுப்பினர்களில் 14 கோடி இஸ்லாமியர்களுக்கோ, 2 கோடியே 40 லட்சம் கிறிஸ்தவர்களுக்கோ ஒரு பிரதிநிதித்துவம் கூட வழங்கியது கிடையாது. இந்த நிலையில் சமூக நல்லிணக்கம் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் என்ன உரிமை இருக்கிறது ? அரசியல் ஆதாயத்திற்காக ராம பிரானை கையில் எடுத்தார்கள். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடி ஆட்சியில் அமர்ந்து பலனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராம பிரானை ஒரு கடவுளாக பார்க்கிறது. அவர் மீது மிகுந்த பக்தியையும், மதிப்பையும் வைத்திருக்கிறது. எந்த காலத்திலும் ராம பிரானை அரசியல் ஆதாயத்திற்கு மகாத்மா காந்தி பயன்படுத்தியதில்லை. காந்தியடிகளின் வழிவந்த காங்கிரஸ் இயக்கத்தின் கருத்துக்களைத் தான் தலைவர் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வலியுறுத்தி இருக்கிறார்கள். ராமர் மீது பக்தி கொள்வதற்கும் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் உள்ள வேறுபாட்டை யார் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அயோத்தியில் பாபர் மசூதியும் இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!
அயோத்தி பிரச்சினை குறித்து வழக்கு தொடுத்த மறைந்த இக்பால் அன்சாரியின் மகன் அசீம் அன்சாரி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறாரே ?
அசீம் அன்சாரி கலந்து கொண்டது இஸ்லாமியர்களுக்கே உரித்தான சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அசீம் அன்சாரி அளித்த பேட்டியில், ‘பாபர் மசூதிக்காக வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பின்படி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கூறியிருக்கிறார். இத்தகைய பெருந்தன்மையை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினரிடம் எதிர்பார்க்க முடியுமா ?
தமிழக பா.ஜ.க.வினர் ராமர் கோயில் பூமிபூஜை நடந்த வேளையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி இருக்கிறார்களே ?
பா.ஜ.க.வின் கொண்டாட்டம் குறித்து வந்த செய்தியை விட, கு.க. செல்வம் காவி துண்டு அணிந்து ராமர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதைத்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. இனி தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. கட்சி மாறி கு.க. செல்வம் பா.ஜ.க.வில் சேர்ந்தவுடன் கட்சி வளர்க்கிற வேலையை அவர் பார்த்துக் கொள்வார். அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. வந்த கு.க. செல்வத்திற்கு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வாய்ப்பு கொடுத்தது, தி.மு. கழக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. அந்த பெருந்தன்மைக்கு தகுதியற்றவர் என்பதை கு.க. செல்வம் நிரூபித்து விட்டார்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடம் சரியாக ஒதுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளதே ?
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி பெறுவது சட்டமாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற நடைமுறை தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்படவில்லை. 2014-முதல் 2019 வரை 70.31 சதவிகித இடங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளனன. ஏறத்தாழ 30 சதவிகித இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன . தற்போது கொரோனா தொற்றை காரணமாகக் கூறி தனியார் பள்ளிகள் 25 சதவிகித இடங்களை நிரப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அதேபோல, தமிழக அரசு 25 சதவிகித மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கிறது. எனவே, தமிழக அரசு தலையிட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்துவதோடு, கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனயாக எடுக்க வேண்டும்.
ஹிரோஷிமா, நாகாசாகி பேரழிவு நடந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டதே ?
உலக மனிதகுல வரலாற்றில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 6, 1945 அன்று ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா, நாகாசாகியில் முதல் அணுகுண்டு வீசப்பட்டதனால் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல இரண்டாவது குண்டு வீச்சில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஜப்பான் மீது அமெரிக்கா மேலும் ஓர் அணுகுண்டை வீசுவதற்கு தயாரான நிலையில் ஜப்பான் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அணு ஆயுதங்களின் அபாயம் குறித்து அனைத்து நாடுகளும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பின் பெயரில் பல நாடுகள் அணு ஆயுத பரிசோதனைகள் மேற்கொண்டாலும் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்ற உடன்படிக்கையில் வடகொரியா தவிர அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டு இருக்கின்றன. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் அணு ஆயுதம் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு உலக நாடுகள் அனைத்தும் இந்நாளில் சூளுரை ஏற்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லீம்கள் சகிப்புத்தன்மையுடன் ஆதரவு வழங்கியுள்ளனரே ?
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பூமிபூஜையில் பிரதமர் கலந்து கொண்டதும், அதை மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்ததும் எவரும் மறந்திட இயலாது. அதேபோல, உச்சநீதிமன்ற ஆணையின்படி இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக ராம ஜென்ம பூமி வளாகத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் பாபர் மசூதியை முஸ்லீம் வக்பு வாரியம் கட்ட திட்டமிட்டுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி எடுத்த அக்கறையைப் போல பாபர் மசூதி கட்டுவதற்கும் அக்கறை எடுப்பாரா ? பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பாரா ? அதை மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்புமா ? இதுவே மதச்சார்பற்ற சக்திகளின் கோரிக்கையாகும்.
இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளாரே ?
குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் மட்டும் என்கிற திட்டத்தை ஊக்குவிக்கவும், அதை மீறுபவர்களுக்கு சில சலுகைகளை மறுக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. 2048 இல் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் சராசரியாக சதுர கிலோ மீட்டருக்கு 20 பேர் வாழ்கிறார்கள் என்றால், இந்தியாவில் சதுர கிலோ மீட்டருக்கு 419 பேர் வாழ்கிறார்கள். 1950 இல் 20 பேராக இருந்தது, 2020 இல் 419 பேராக உயர்ந்து 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் 1951 இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மக்கள் தொகை. இதை புரிந்து கொண்டு மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக இஸ்லாமியர்கள் மசூதி கட்டும்சமயம் அவர்கள் விரும்பி அழைத்தால் பிரதமர் மோடி கலந்துகொள்வது அவரது கடமை.அதுதான் மதச்சார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு