ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதே ?
கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை, தலைவர் ராகுலும், பிரியங்காவும் இணைந்து ராஜ தந்திரத்துடன் முறியடித்துள்ளார்கள். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைய மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்த சச்சின் பைலட்டின் மனக்குறைகளை போக்குவதற்கு பிரியங்காவின் முயற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைப் போல, சச்சின் பைலட் சந்தர்ப்பவாதி அல்ல. காங்கிரஸ் தலைமை மீதும், கொள்கைகள் மீதும் அளவற்ற பற்று கொண்டவர்.
முதலமைச்சர் அசோக் கெலாட் வரம்பு மீறி விமர்சனம் செய்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி மீதோ, தலைமை மீதோ எத்தகைய விமர்சனத்தையும் சச்சின் பைலட் செய்ததில்லை. நேற்று தொலைக்காட்சி ஊடகங்களில் அளித்த பேட்டியில் ஒரே ஒரு பா.ஜ.க. தலைவரிடம் கூட நாங்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று பகிரங்கமாக கூறியதன் மூலம், அவர் ஓர் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். இதன்மூலம் தலைவர் ராகுல், பிரியங்கா முயற்சி சரித்திரம் படைத்திருக்கிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேச ஆட்சி கவிழ்ப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க., ராஜஸ்தானில் முறியடிக்கப்பட்டதற்காக தலைவர் ராகுலும், பிரியங்காவும் நாட்டு மக்களின் பாராட்டை பெற்று வருகிறார்கள்.
மத்திய அரசு அவசியமில்லை என தெரிவித்த பின் இ-பாஸ் முறையை தமிழக அரசு தொடருவது ஏன் ?
கடந்த நான்கு மாதமாக ஊரடங்கினால் தொழில்கள் முடங்கி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், சென்றவர்கள் திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். உயர்கல்வி பயில இருக்கும் மாணவ – மாணவிகளின் பெற்றோர் கல்லூரியில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட முடியவில்லை. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான தனிமனித உரிமை தடுக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான தனிமனித உரிமை மீறல் என்றும், இ-பாஸ் திட்டம் தேவையா என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மக்கள் படும் துன்பங்களை எதிர்கட்சிகள் எதிரொலித்தால் ஆட்சியாளர்கள் பதில் சொல்வதில்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். தற்போது தமிழக அரசை நீதிமன்றங்களும், மனித உரிமைகள் ஆணையமும் தான் இயக்கிக் கொண்டிருக்கின்றன.
பா.ஜ.க.வில் பிரபல ரவுடி இணைந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே ?
தமிழக பா.ஜ.க.வின் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்ட பின், கட்சிப் பதவிகளை புதுமுகங்களுக்கு வாரி வழங்குவது குறித்து அக்கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சித் தலைவராக இருப்பவரே அக்கட்சிக்கு புதுமுகம். அவருக்கு பழைய முகங்களை தெரியாது. இந்நிலையில், பிரபல ரவுடியை கட்சியில் இணைத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக தமிழக பா.ஜ.க. தலைமை நிலையமான கமலாலயம் பதவிகள் வழங்கும் நிலையமாக மாறிவிட்டது. பதவிகள் தான் வழங்கலாமே தவிர, கட்சியை வளர்க்க முடியாத நிலையில் புதிய தலைவர் திணறிக் கொண்டிருக்கிறார்.
இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் சமூக நீதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதே ?
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான கட்ஆப் மதிப்பெண்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் மதிப்பெண் 95.34. பத்து சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உரியோருக்கு 90 மதிப்பெண்கள். இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களை விட 5.34 மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை தேர்வில் பொருளாதாரத்தில் முன்னேறிய உயர் வகுப்பினர் தேர்வு பெற்றுள்ளனர். இதனால் சமூக நீதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் பின்தங்கிய சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
பொது ஊரடங்கு காலத்தில் ஜூம் செயலி அனைவரையும் இணைக்கும் பாலமாக விளங்கி வருகிறதே ?
ஒட்டுமொத்த உலகையே முடக்கிப் போட்டுள்ள கொரோனாவால் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகள், சமூக ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் கருத்துப் பரிமாற்றங்களை செய்து வருகிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்ததாக இந்தியாவில் ஜூம் செயலி அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் ஏற்பாடு செய்த தியாகி சின்ன அண்ணாமலை நூற்றாண்டு விழா காணொலி காட்சியை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். சாதாரண காலங்களில் ஆயிரம், இரண்டாயிரம் பேரை திரட்டுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஜூம் செயலி நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப் பிரசாதமாகும்.
தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு அடுத்து ‘ட்ரோன்” புரட்சி தான் எதிர்காலத்தில் உலகை ஆளப் போவதாக கூறப்படுகிறதே ?

அண்மை காலமாக திருமண நிகழ்ச்சிகளிலும், காவல்துறை கண்காணிப்பிற்கும், கிருமி நாசினி தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு உரம், மருந்து தெளிப்பதற்கு பெருமளவில் ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாத குட்டி விமானங்கள் இன்று ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எதிர்காலத்தில் மிகப் பெரிய புரட்சியை ட்ரோன் ஏற்படுத்தப் போகிறது. சமீபத்தில் நாட்டை உலுக்கிய வெட்டுக்கிளி தாக்குதலை முறியடிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ட்ரோன் தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.
சமீபத்தில் புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரன் தொகுத்த சென்னை முதல் மெட்ராஸ் வரை என்ற புகைப்பட நூலை பார்த்து வியப்படைந்தேன். கொரோனா காலத்தில் ட்ரோன் தொழில்நுட்ப கேமரா மூலம் சென்னையில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்கள் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. இதைப் போல, புகைப்பட தொகுப்பு நூலை என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. புகைப்படக் கலைஞர் எல். ராமச்சந்திரன் மற்றும் காண்டீபன் உள்ளிட்ட நண்பர்கள் இந்நூலை வெளியிட இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி. ஊக்கப்படுத்துவது நமது கடமை.
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அவர்களின் பதவிக் காலம் முடிவதற்குள் வருமா ?
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக பகிரங்கமாக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் தனபாலிடம் தி.மு.க. மனு அளித்தது. அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் முடிவே இறுதியானது எனக் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகியும் சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முறையிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான் சபாநாயகருக்கு ஒரு நீதியையும், தமிழக சபாநாயகருக்கு ஒரு நீதியையும் வழங்குவது ஏன் என்று தெரியவில்லை. ராஜஸ்தான் சபாநாயகருக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தலையிட முடியாது என்று கூறுகிறது. 2017 பிப்ரவரியில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து 2020 ஆகஸ்ட் வரை மூன்றரை ஆண்டுகளாக நீதிமன்றங்களுடன் தி.மு.க. போராடிக் கொண்டிருக்கிறது. கட்சி மாறி வாக்களித்தவர்களுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி சபாநாயகர் தண்டனை வழங்க மறுக்கிறார். கட்சிமாறிகளுக்கு உச்ச நீதிமன்றமும் தண்டனை வழங்கவில்லை என்றால், இதை எங்கே போய் சொல்வது ?
தமிழக ஆளுநரிடம் முதலமைச்சருக்கு எதிராக மனு வழங்கினார்கள் என்பதற்காக டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக சபாநாயகர் பதவி நீக்கம் செய்தார். ஆனால், சட்டப் பேரவையில் அ.தி.மு.க. கொறடா பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய மறுக்கிறார். இந்த பாரபட்சத்தை கேட்க நீதிமன்றங்கள் முன்வராததை நீதி தேவன் மயக்கம் என்று தான் கூற வேண்டும்.
இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மற்ற நாடுகளுடன் அதிகரித்து வருவது ஏன் ?
இந்திய – சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல்களுக்கு பிறகு பா.ஜ.க.வினரால் அதிகமாக ஓங்கி ஒலிக்கும் குரல் தற்சார்பு இந்தியா. ஆனால், முக்கியமான 9 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. சீனாவுடன் பற்றாக்குறை ரூபாய் 3 லட்சத்து 64 ஆயிரத்து 875 கோடி. சவுதி அரேபியாவுடன் ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 650 கோடி. ஈராக் ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 950 கோடி. தென்கொரியா ரூபாய் 81 ஆயிரத்து 75 கோடி. மொத்தமாக 9 முக்கிய நாடுகளோடு வர்த்தக பற்றாக்குறை ரூபாய் 8 லட்சத்து 52 ஆயிரத்து 750 கோடி. மோடியின் தற்சார்பு வெறும் முழக்கமாக இருக்கிறதே தவிர, நடைமுறையில் செயலில் இல்லை என்பதையே வர்த்தக பற்றாக்குறை படம் பிடித்து காட்டுகிறது.
டிஜிட்டல் இந்தியா ஆமை வேகத்தில் நகருவது ஏன் ?
பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நம்மை விட சிறிய நாடுகள் பராமரிக்கும் வேகம் கூட இந்தியாவிடம் இல்லை என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. டிஜிட்டல் இன்டர்நெட் வேகத்தை ஆய்வு செய்ததில் 138 நாடுகளில் 129-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவா ?