புதுச்சேரியில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் கலைஞர் கருணாநிதி பெயரில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்களே ?
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பெயரில் காலையில் ரொட்டி, பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டம் நிறுத்தப்படவில்லை. தற்போது அத்திட்டத்தோடு இணைந்து இட்லி, பொங்கல், உப்புமா வழங்கும் சிற்றுண்டி திட்டத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரை முதலமைச்சர் நாராயணசாமி சூட்டியிருக்கிறார். இதுகுறித்து மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வகையில் அ.தி.மு.க.வினர் பேசியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
இந்தியாவில் பின்னலாடை தொழிலில் முன்னணிப் பங்கு வகித்திருக்கிற திருப்பூர், கொரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறதே ?
அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்வதற்காக திருப்பூரில் ஆண்டுதோறும் ரூபாய் 50 ஆயிரம் கோடியிலிருந்து 60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடந்து வந்தது. அதைத் தவிர உள்ளுர் சந்தையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடைபெற்று வந்தது. ரூபாய் 25 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்கிற நிலையில் 6 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி உள்ளிட்ட பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மாதந்தோரும் ரூபாய் 2,500 கோடி வியாபாரம் செய்கிற மிகப்பெரிய தொழில் நகரமாக திருப்பூர் விளங்கி வந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டது. மே மாதத்தில் 10 சதவிகிதம், ஜூன் மாதத்தில் 25 சதவிகிதம், ஜூலை மாதத்தில் 35 சதவிகிதம் என படிப்படியாக வர்த்தகம் பெருகி வருவது நம்பிக்கையைத் தருகிறது.
ஆனால், 1200-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 25 சதவிகிதத்தை திருப்பூரில் தான் செய்து வந்தனர். திருப்பூர் தொழில் முனைவோர் சந்திக்கிற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களவை உறுப்பினர் தோழர் சுப்பராயன் மத்திய வர்த்தக மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களோடு இப்பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். இவரது கடும் முயற்சியின் விளைவாக பல்வேறு தடைகள் நீக்கப்பட்டு படிப்படியாக ஏற்றுமதி அதிகரித்து வருகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக திருப்பூர் தொழில் முனைவோர்களின் பாராட்டை மக்களவை உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. தொடரட்டும் அவரது பணி.
நடிகர் கமல்ஹாசன் வீட்டில் ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு” என்ற நோட்டீசை ஒட்டியதற்காக மாநகராட்சி ஊழியர் வினோத்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே ?
மேற்கண்ட சம்பவத்திற்கு பிறகு வினோத்குமார் பணிக்கு சென்ற போது 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்ததாக சுகாதார ஆய்வாளர் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார். ஆனால், இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யவில்லை, வழக்கம் போல பணிக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், கடந்த மே மாதம் 9 ஆம் தேதி பணிக்கு சென்ற போது வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் வினோத்குமார் அளித்த புகாரில் ‘மேலதிகாரிகள் செய்த தவறை மறைக்க என் மீது பழிசுமத்த பார்க்கிறார்கள். எனக்கு அதே இடத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் தான் மாநகராட்சி ஆணையருக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலதிகாரிகள் சொன்னதை செய்ததற்காக வினோத்குமார் பழிவாங்கப்பட்டதற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது நியாயமான நடவடிக்கையாகும். இதன்மூலம் வினோத்குமாருக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.
தமிழறிஞர் கோவை ஞானி மறைந்து விட்டாரே ?
கோவை ஞானி என்று அழைக்கப்பட்ட கி. பழனிசாமி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். தமிழாசிரியராக, கவிஞராக, திறனாய்வாளராக, இதழாசிரியராக என பன்முகத்தன்மை கொண்டு, கலை, இலக்கியம், அரசியல் பண்பாட்டுத் தளங்களை செழுமைப்படுத்தியவர். மார்க்சிய பார்வையோடு தமிழ் தேசியத்திற்கு புதிய இலக்கணம் வகுத்தவர். இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தி தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய கோவை ஞானி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கொரோனா தொற்றை எதிர்த்து முன்னின்று போராடி வரும் களப் பணியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் கட்டணமில்லாமல் கல்வி வழங்கும் திட்டத்தை வேல்ஸ் பல்கலைக் கழகம் அறிவித்திருக்கிறதே ?
தமிழகத்தில் எந்தவொரு பல்கலைக் கழகமும் இத்தகைய முயற்சியில் ஈடுபடாத போது வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் கட்டணமில்லா கல்வி என்ற திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்களை தமிழக அரசும் கண்டுகொள்வதில்லை. அறிவித்தப்படி ஊக்கத்தொகையும் வழங்கவில்லை. இந்நிலையில், இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்கிற வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் முன்மாதிரியான உதவியினை மற்ற பல்கலைக் கழகங்களும் பின்பற்ற வேண்டுமென என கேட்டுக் கொள்கிறோம்.
கொரோனா தொற்று காரணமாக சில்லரை வணிகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதே ?
பெரும்பாலான சில்லரை விற்பனை கடைகளில் 50 சதவிகித வியாபாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. குறிப்பாக நகை மற்றும் கைக்கடிகார விற்பனை 78 சதவிகிதம், உடைகள் 74 சதவிகிதம், காலணிகள் 74 சதவிகிதம், அழகு சாதனப் பொருட்கள் 71 சதவிகிதம், விளையாட்டுப் பொருட்கள் 68 சதவிகிதம், வீட்டு உபயோகப் பொருட்கள் 63 சதவிகிதம் என்கிற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பெரும்பாலான கடைகளில் 10 சதவிகித விற்பனை கூட நடைபெறவில்லை. கடைகளை திறந்து வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து, ஏமாற்றத்துடன் வெறிச்சோடிய நிலையில் தான் இருந்து வருகின்றனர். இந்த வீழ்ச்சியிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கத்துடன் வணிகர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வருகிறதே ?
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964. மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை 3232 பேர். நேற்று மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 6472 பேர். நேற்று 88 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 11 பேர். மொத்த பாதிப்பில் சென்னை 90 ஆயிரமாகவும், நேற்றைய பாதிப்பு 1336 ஆகவும் உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்டவர்கள் 62,112 பேர். இத்தகைய போக்கு தொடர்ந்து நீடிக்குமேயானால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. சமூகப் பரவல் இல்லை என்று மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதை ஏற்றுக் கொண்டால் பொது ஊரடங்கு தோல்வி அடைந்ததாக கருதப்படும். எனவே, சமூகப் பரவல் இல்லை என்று மறுத்து வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்றை நோக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுக்கிற முயற்சிகளில் ஈடுபடவில்லை. இந்த வகையில் தென்கொரியாவின் அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும். தொடக்கத்தில் பரிசோதனை காலதாமதமானது தான் கொரோனா தொற்று இந்தளவிற்கு பரவியதற்கு காரணமாகும். இதை மத்திய, – மாநில அரசுகள் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கூறியிருக்கிறாரே ?
அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் எப்படி தொடர்பில்லையோ, அதைப் போலவே சனாதன பா.ஜ.க.விற்கும், சமூகநீதிக்கும் தொடர்பில்லை. பொறுப்பிற்கு வந்தவுடன் புதிய தலைவர் சமூகநீதி வேஷம் போடுகிறார். அந்த வேஷம் போடுகிறவர் பா.ஜ.க.வின் தலைவராக இருப்பதால், அது எக்காலத்திலும் தமிழ் மண்ணில் எடுபடாது.