காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ குறித்து நிறைய சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கிறதே ?
நடிகை குஷ்பூ எப்பொழுதுமே சர்ச்சைக்குள்ளாவது அதிசயம் ஒன்றல்ல. ஆற்றலும், திறமையும் கொண்ட அவர், டிவிட்டர் பக்கத்தில் வகுப்புவாத பா.ஜ.க.விற்கு எதிராக கடுமையான கருத்துக்களை கூறுவதால் எத்தகைய தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். அவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதும், மதச்சார்பற்ற கொள்கையின் மீதும் அசைக்க முடியாத பற்று கொண்டவர். அவரோடு நேற்று செல்பேசியில் பேசியதில் இருந்து அவர் மீது பரப்பப்படுகிற அவதூறுகள் ஆதாரமற்றவை என்பது தெளிவாகிறது.
பா.ஜ.க.வில் குஷ்பூ சேருவார் என்பது மிகப்பெரிய நகைச்சுவை. காங்கிரஸ் கட்சியில் எப்போதும் போல தீவிரமாக செயல்பட வேண்டுமென்று நடிகை குஷ்பூ விரும்புகிறார். அவரது விருப்பத்தை தலைவர் கே.எஸ். அழகிரி நிச்சயம் நிறைவேற்றுவார். கொரோனா தொற்று காலத்தில் அரசியல் நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால் குஷ்பூவின் ஈடுபாடும் குறைவாக இருக்கிறதே தவிர, தமிழக காங்கிரஸ் கட்சியோடு மிகுந்த நம்பிக்கையோடும், ஈடுபாட்டோடும் குஷ்பூ இருந்து வருகிறார் என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முன்னணித் தலைவர்கள் பலர் இன்னும் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்களே ?

1947 இல் சுதந்திரம் பெற்ற போது, இந்தியாவோடு காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. 90 சதவிகித மக்கள் இஸ்லாமியர்களாக இருக்கிற ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைவதா ? முஸ்லீம்கள் நிறைந்த பாகிஸ்தானோடு இணைவதா ? என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. இந்நிலையில் அந்த மாநில மக்களின் நம்பிக்கைமிக்க தலைவராக விளங்கிய ஷேக் அப்துல்லாவுக்கும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இருந்த கொள்கை ரீதியான நட்பு காரணமாக காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு இணைக்கிற போது ஷேக் அப்துல்லா சில நிபந்தனைகளை விதித்தார். அந்த மாநில மக்களின் தனித்தன்மையைக் காப்பாற்றுகிற வகையில் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 370 சேர்க்கப்பட்டது. அதை சேர்த்தது முதல் பா.ஜ.க., அதை ரத்து செய்ய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்திற்கு பிரிவு 370-ன் மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதி அம்மாநில மக்களின் ஒப்புதலைப் பெறாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த மக்களிடையே எழுந்த எதிர்ப்பை அடக்குவதற்காக முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். மதரீதியான கடமைகளை நிறைவேற்றவோ, உறவினர்களை சந்திக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மெஹபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டுமென தலைவர் ராகுல்காந்தியும், ஜனநாயகத்தில் நம்பிகையுள்ள பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் விடுதலை செய்யப்பட வேண்டுமென அவரது மகள் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் அரசு, சைபுதீன் சோஸ் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வகையில் ஒரு பொய்யை கூறியுள்ளது. அதை அம்பலமாக்குகிற வகையில் தொலைக்காட்சி ஊடகங்கள் சைபுதீன் சோஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை காட்சிப்படுத்தி, அவரது பேட்டியை வெளியிட்டன. இதன்மூலம் உண்மை அம்பலத்திற்கு வந்தது.
கடந்த 363 நாட்களாக 25-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பலரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்து அராஜக ஆட்சியை காஷ்மீரில் பா.ஜ.க. நடத்தி வருகிறது. சில காலத்திற்கு அடக்குமுறை மூலம் அவர்களை அடக்கி வைக்கலாம். ஆனால், நிரந்தரமாக அடைத்து வைக்கப்பட்டால் கடும் விளைவுகளை பா.ஜ.க. சந்திக்க நேரிடும்.
அறநிலையத்துறை புதிய ஆணையர் நியமனம் காலதாமதம் ஆவது ஏன் ?
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பனீந்திர ரெட்டி கடந்த ஜூன் 18 ஆம் தேதி வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அறநிலையத்துறைக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படாததால் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. காலியாக உள்ள உதவி ஆணையர், துணை ஆணையர் பதவியிடங்களையும், நகைகளை சரிபார்க்கும் அலுவலர் பணியிடங்களையும் நிரப்பாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேபோல, திருக்கோயில் பாதுகாப்புப் படை அமைக்கும் திட்டமும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோயில் கடைகளின் வாடகை நிர்ணயம் செய்வதில் கடும் குழப்பம் நிலவுகிறது. மேலும் கூடுதல் அறநிலையத்துறை ஆணையரிடம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதால் அலுவலகத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த அதிகாரியின் பேச்சைக் கேட்டு செயல்படுவது என தெரியாமல் அறநிலையத்துறை ஊழியர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதுதான் எடப்பாடி ஆட்சியின் லட்சணமாகும்.
தமிழகத்தில் மது விற்பனை கடந்த சனிக்கிழமை ரூபாய் 180 கோடியாக உயர்ந்திருக்கிறதே ?
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிற அதேநேரத்தில் மது விற்பனையும் அதிகரித்திருப்பது எடப்பாடி ஆட்சியின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம். அனைத்து வகைகளிலும் வருவாய் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை டாஸ்மாக் கடை வருவாய் தான். டாஸ்மாக் விற்பனையை அதிகரிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதுதான் அதனுடைய முதன்மைப் பணியாக இருக்கிறது. இதுதான் அம்மாவின் வழியில் எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் நலன்மீது இருக்கிற அக்கறை.
ஜெ நினைவு இல்லத்திற்கு அரசு பணம் வாரி வழங்கப்படுகிறதே ?
தமிழகத்தின் நிதிநிலைமை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒதுக்கிய ரூபாய் 22 கோடி நிதியை ஜெயலலிதா நினைவிடப் பணிக்காக தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே மக்கள் வரிப் பணத்தில் 100 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா கட்ட வேண்டிய வருமான வரி பாக்கியான ரூபாய் 39 கோடியை தமிழக அரசு ஏன் கட்டியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. ஏனெனில் ஜெயலலிதாவிற்கு கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா போன்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கும் போது மக்கள் வரிப் பணத்தை வாரி இறைப்பது நியாயமா ?
ரூபாய் 137 கோடி செலவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டியூட்டில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் வி.வி.ஐ.பி.களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே ?
கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவமனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையானது. 750 படுக்கைகளுடன் 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்டது. இதில் நோயாளிகளை அனுமதிப்பதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவது ஏன் ? வி.வி.ஐ.பி.கள் உள்ளிட்ட பணக்காரர்களுக்கு ஒரு நீதி ? ஏழை, எளியவர்களுக்கு ஒரு நீதியா ? ஏன் இந்த பாரபட்சம் ? இத்தகைய போக்கு உடனடியாக நிறுத்தப்பட்டு, நோயின் தீவிரத்தன்மை அடிப்படையில் இங்கு சிறப்பு சிகிச்சை அளிக்க பாரபட்சமில்லாமல் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாங்காங் சிசோ ஏரிப் பகுதியில் மட்டும் 40 ஆயிரம் சீன வீரர்கள் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதே ?
இந்திய – சீன மோதலில் 20 வீரர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் ? எப்படி கொல்லப்பட்டார்கள் ? சீன எல்லையில் கொல்லப்பட்டார்களா ? இந்திய எல்லையில் கொல்லப்பட்டார்களா ? என்ற தலைவர் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. ஆனால், அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் எவரும் ஊடுருவவில்லை என கூறியிருந்தார். ஆனால், இப்போது 40 ஆயிரம் வீரர்கள் இந்திய எல்லைக்குள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தொடக்கம் முதல் இந்திய – சீன பிரச்சினையில் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையுடன் பிரதமர் மோடி செயல்படாதது குறித்து தலைவர் ராகுல்காந்தி பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே அவருக்கு தேசப்பற்று இல்லை என்று மக்களை திசைத் திருப்ப பா.ஜ.க.வினர் முனைகின்றனர். ஆனால் தலைவர் ராகுல்காந்தி கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பிரதமர் மோடி பதில் கூற தயங்குவது ஏன் ?
மத்திய அரசு, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று எந்த கடமையும் இல்லை என்று அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஆலோசனை கூறியிருக்கிறாரே ?
ஜி.எஸ்.டி. வரியைப் பொறுத்தவரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில் இத்தகைய கருத்தை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இதே கருத்தை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ஒப்புக் கொண்ட பங்கீட்டின்படி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. நிதி ஒதுக்கீடு செய்யும் நிலையில் மத்திய அரசு இல்லை என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். இந்த இரண்டு கருத்துக்களுமே மத்திய அரசின் மீது மாநிலங்களுக்கு இருந்த நம்பிக்கையை தகர்த்து விடுகிற வகையில் அமைந்துள்ளன.
மத்திய அரசு தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறுவது நியாயமா ? மாநிலத்தின் பங்கை கொடுப்பது தங்கள் கடமை இல்லை என்பதை எப்படி சொல்ல முடியும் ? 2017 இல் எடுக்கப்பட்ட முடிவை 2020 இல் கை விரிப்பது தான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியின் லட்சணமா ? ஜி.எஸ்.டி. வரியில் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறுகிற துணிவு எடப்பாடி அரசுக்கு இருக்கிறதா ?
சென்னை மாநகரத்தில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்களே ?
80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரத்தில் மொத்தம் 80 ஆம்புலன்ஸ்கள் தான் இருக்கின்றன. நாள்தோறும் 20 நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக 108 ஆம்புலன்ஸ் அனுப்ப வேண்டிய நிலை இருக்கிறது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை 12,190 கொரோனா பாதிப்பு உள்ளவர்களும், 1,065 புதிய நோயாளிகளையும் கொண்டு வருவதற்கு ஆம்புலன்ஸ் தேவைப்படுகிறது. 200 வட்டங்களைக் கொண்ட சென்னை மாநகரத்தில் ஆக்சிஜன் வசதியுள்ள 40 ஆம்புலன்ஸ்கள் இன்னும் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனாவினால் உயிரிழப்பு தமிழகத்தில் தான் குறைவாக இருக்கிறது என்கிற காரணத்தினால் 108 ஆம்புலன்ஸ் வாங்குவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறதோ ?
வீட்டு சொந்தக்காரருக்கும், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் நடந்த மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறதே ?
சென்னை புறநகரான புழல் பகுதியில் வாடகைதாரர் வீட்டின் வாடகை பாக்கி வைத்துள்ளார் என்று கூறி, வீட்டின் உரிமையாளர் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை விசாரித்த புழல் காவல்நிலைய ஆய்வாளர் 40 வயது நிரம்பிய வீட்டு வாடகைதாரரை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கிறார். வாடகைதாரர் சீனிவாசன் வீட்டிற்கே சென்று காவல் ஆய்வாளர் இத்தகைய வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கிறார். இந்நிலையில் காவல்துறை ஆய்வாளரால் தாக்கப்பட்டதில் மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சாத்தான்குளம், தென்காசி போன்ற காவல் நிலையப் படுகொலைகள் நடத்தப்பட்டு மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்கிற நிலையில் இத்தகைய காவல் நிலைய அதிகாரிகளின் அத்துமீறிய வன்முறை போக்கு தலைவிரித்தாடுவது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி மக்களுக்காக நடைபெறுகிறதா ? காவல்துறையினரின் அராஜகத்திற்கு துணை போகிறதா ?
தேசிய பஞ்சாலை தொழிலாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் ஆன EPS 95 பென்ஷன் கோரிக்கைக்கு நமது டாக்டர் செல்லகுமார் MP அவர்கள் இறுதி கூட்ட தொடரில் முன் வைத்த பதிவில் இப்போது எந்த நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதை தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டுகிறேன்.