தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை என்பதாலும், பொதுமக்கள் பணத்தில் செயல்படுவதாலும் அதில் தவறு நடந்தால் கேள்வி கேட்கிற உரிமை இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளாரே ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சொத்தை பொறுத்தவரை எவரிடமும் நன்கொடை பெற்றதில்லை. காமராஜர் அரங்கம் உள்ளிட்ட வாடகை வருமானத்தின் அடிப்படையில் தான் அறக்கட்டளை செயல்படுகிறது. பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர் அமைப்பிற்கு 52 நாட்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து வசூல் ராஜாவாக விளங்கி வருகிறார். இந்த அமைப்பிற்கு கட்டுமானத் தொழில் செய்கிற தனியார் நிறுவனமான லார்சன் டியூப்ரோ ரூபாய் 150 கோடி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ரூபாய் 500 கோடி, டாடா நிறுவனம் ரூபாய் 500 கோடி என பல தொழில் நிறுவனங்கள் வாரி வழங்கியுள்ளன. நன்கொடைகளை எவர் கொடுத்தார்கள் ? எவ்வளவு கொடுத்தார்கள் ? என்பதை அறிய அனுமதி இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டால் பதில் வழங்காமல் இருக்க பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வருமானத்தில் இருந்து எந்த செலவு செய்தாலும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அப்படி ஒப்புதல் பெறப்பட்டு, செலவு செய்த தொகை விபரங்களை தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும். ஆனால், பி.எம். கேர் அமைப்பை பொறுத்தவரை சி.எ.ஜி. ஆய்வு செய்ய முடியாது. இத்தகைய நிலையில் செயல்படுகிற பா.ஜ.க. ஆண்டுதோறும் வருமான வரித்துறைக்கு முறையாக கணக்குகளை சமர்ப்பித்து வரிச் சலுகையைப் பெற்று வருகிற தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது ?தொடர்ந்து இத்தகைய அரசியல் சர்ச்சைகளை செய்வதன் மூலமாக தமிழக காங்கிரசை அச்சுறுத்தி விடாலம் என்று பா.ஜ.க. தலைவர் முருகன் நினைத்தால் அது பகற் கனவாகத் தான் முடியும்.
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டம் தீட்டி வருகிறதே ?
அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, 50 ஆண்டுகளுக்கு முன்பு 19 ஜூலை 1969 அன்று அவசர சட்டத்தின் மூலம் 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். மொத்த வைப்புத் தொகையில் 70 சதவிகிதம் இந்த வங்கிகளிடம் இருந்தது. பிறகு 1980 இல் மேலும் 6 வங்கிகளை தேசியமயமாக்கினார். இதற்கு முன்பு 1955 இல் பிரதமர் நேரு இம்பீரியல் வங்கியை தேசியமயமாக்கி, இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிற பாரத ஸ்டேட் வங்கியை அன்றே உருவாக்கினார். இதன்மூலம் ஏழை,எளிய மக்கள், விவசாயிகள், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது எளிதாக்கப்பட்டது.
ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய பா.ஜ.க. அரசு மொத்தம் இருந்த 27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 வங்கிகளாக முதலில் குறைத்தது. இப்போது பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி உட்பட 6 வங்கிகளில் உள்ள பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகளை தனியாருக்கு விற்பதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 5 ஆக குறைக்க முடிவு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
ஊரடங்கால் மத்திய அரசின் வரி வருவாய் வெகுவாக குறைந்து விட்டதால், அதை ஈடுகட்ட பொதுத்துறை பங்குகள் விற்பனை, சொத்துக்கள் விற்பனை, ரிசர்வ் வங்கி உபரி நிதி என பல்வேறு வகைகளில் மத்திய அரசு நிதி ஆதாரத்தை பெருக்க முயற்சி செய்கிறது.
மேலும், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை 27 இல் இருந்து 5 ஆக மட்டுமே வைத்திருக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி வங்கிகள் இணைக்கப்பட்டால், அதில் பணியாற்றுகிற லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகிற நிலை ஏற்படப் போகிறது.
பொதுவாக, நரேந்திர மோடி ஆட்சியில் அதிகாரக் குவியல் மட்டும் நடைபெறவில்லை. மாறாக, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்து அதிக நிதி ஆதாரங்களை 5 வங்கிகளிடம் மட்டுமே குவிப்பது இந்திய மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதை பா.ஜ.க. அரசு உணருவதாக தெரியவில்லை. மக்கள் விரோத நடவடிக்கைகளில் இதையும் ஒன்றாகக் கருதி, கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனாவை ஒழிப்பதில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளதா ?
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ஓரளவு குறைந்தாலும் பேருந்துகளே எட்டிப் பார்க்காத குக்கிராமங்களில் எல்லாம் கொரோனா வேகமாக பரவி வருவது தமிழக அரசின் சாதனையாக எடுத்துக் கொள்ளலாம். நெருக்கமாக வாழ்ந்தே பழக்கப்பட்ட கிராம மக்களிடம் தொற்று வேகமாக மற்றவர்களுக்கு பரவி வருகிறது. இதனால் சென்னையிலிருந்து பெருந்திரளாக ஊர்களுக்கு சென்றவர்கள் கொரோனா பீதியால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நகர்ப்பகுதிகளில் கொரோனாவிற்கு வழங்கப்படுகிற சிகிச்சையைப் போல கிராமப்புற மக்களுக்கு வழங்குவதற்கு மருத்துவ வசதிகள் இல்லை.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதிலும் கொரோனா கடுமையாக பரவி வருகிறது. அதேபோல, சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவலை எதிர்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பீதியில் ஆழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 19 நாட்களில் மட்டும் சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் 84,834 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மிகுந்த கவலையை ஏற்படுத்தி வருகிறது. சென்னையிலிருந்து கிராமங்களுக்கு சென்று கொரோனா பாதிப்பிலிருந்து நிம்மதியாக வாழலாம் என்று சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்புவதற்கு இ-பாஸ் விண்ணம் செய்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு தமிழக அரசிடம் என்ன அணுகுமுறை இருக்கிறது ?
சட்டவிரோத குவாரிகளை தடுக்க ‘மணல் விற்பனை கழகம்’ துவக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறாரே ?
தமிழகத்தில் அதிகளவில் மணல் திருட்டு நடக்கிறது. ஒரு போட்டி அரசாங்கமே செயல்பட்டு வருகிறது. சவுடு, உவர், வண்டல் மற்றும் சரளை மண் அள்ளுவதாக அனுமதி பெற்று, விதிகளை மீறி பல இடங்களில் அளவுக்கு அதிகமான ஆற்று மணல் அள்ளிக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, இத்தகைய சட்டவிரோதச் செயல்களை தடுக்க தமிழக அரசு கணிம வள சட்டப்படி ‘மணல் விற்பனை கழகம்’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டுமென்று மனுவில் கூறியுள்ளார். இந்த கோரிக்கை அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்மூலமே மணல் கொள்ளையை தடுக்க முடியும்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் 80 சதவிகித விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது ஏன் ?
காவிரி டெல்டா மாவட்டத்திற்கு பாசனத்திற்காக கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி தமிழக அரசால் திறக்கப்பட்டது. ஆனால் குறுவை நெல் பயிருக்கு ஒருசில கிராமங்களில் மட்டும் காப்பீடு செய்ய காப்பீடு நிறுவனம் அனுமதித்துள்ளது. மற்ற பல பகுதிகளில் குறுவை சாகுபடி செய்த 80 சதவிகித விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, அ.தி.மு.க. அரசு குறுவை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தமிழக அரசு செய்யுமா ?
வேடந்தாங்கல் சுற்றளவை குறைக்கும் திட்டத்தை தேசிய வனவிலங்கு வாரியம் திருப்பி அனுப்பி விட்டதாக செய்திகள் வெளி வந்துள்ளதே ?
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு பகுதியை மறுவரையறை செய்து, வெளிச்சுற்று பகுதி பரப்பை பாதியாக குறைக்க மத்திய வனவிலங்கு வாரியம் திட்டமிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினாலும், உள்ளுர் மக்கள் எதிர்த்ததாலும், மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய வனவிலங்கு வாரியம் திட்டத்தை திருப்பி அனுப்பியது வரவேற்புக்குரியது. மீண்டும் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.
கடன்சுமை, மன அழுத்தம் காரணமாக 50 ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளதே ?
இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு இயக்கி, தொழில் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் போதிய கல்வி அறிவற்றவர்களாக உள்ளனர். ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தற்போது சவாரி இல்லாமல் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் வட்டிக்கு, வட்டி சேர்த்து கடன் தொகை கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். பல நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளன. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 50 ஓட்டுநர்களுக்கும் மேலாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி உண்மையாக இருந்தால் இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மருத்துவ சிகிச்சைகளை ஆதரிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதே ?
கொரோனா தொற்றை ஆயுஷ் சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க நிறைய வாய்ப்பு உள்ளன. ஆயுஷ் சிகிச்சைக்கு செலவும் குறைவாக உள்ளது. மேலும் அலோபதி மருந்துகளை விட ஆயுஷ் மருந்துகளின் விலையும் குறைவாக உள்ளது. ஆயுஷ் மருந்துகளும் எளிதாக கிடைக்கின்றன. சென்னையை சேர்ந்த டாக்டர் வீரபாபு துவக்கதில் ஆயுஷ் சிகிச்சையை சுயமாக வழங்கி வந்தார். அதில், கிடைத்த பலனின் அடிப்படையில் தமிழக அரசு டாக்டர் வீரபாபுவை பயன்படுத்திக் கொள்கிற வகையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் கல்லூரியில் 700 படுக்கைகளுக்கு மேல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் கொரோனா சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் நல்லமுறையில் கவனிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இதனால் அனைவரது பாராட்டையும் டாக்டர் வீரபாபு பெற்று வருகிறார். இந்த வகையில் அலோபதி சிகிச்சை முறையை கையாளுகிற அதேநேரத்தில் ஆயுஷ் சிகிச்சைக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூபாய் 60 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே ?
கடந்த நான்கு மாதங்களில் 60 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் கடந்த மார்ச் 20 முதல் கோயில் மூடப்பட்டது தான். கொரோனா தொற்று காரணமாக மக்கள் வருமானத்தை பறிகொடுத்து, வாழ்வாதாரத்தை இழக்கிற நிலையில் ஆஞ்சநேயர் கோயில் வருவாய் இழந்தது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு தான் இழப்பு ஏற்படக் கூடாதே தவிர, ஆஞ்சநேயருக்கு இழப்பு ஏற்பட்டால் அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை.
அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க கொரோனா காலத்தில் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறதே ?
கொரோனா தொற்று காரணமாக நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 11 லட்சத்து 55 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,084 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோயில் தரிசனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்கள் கொரோனா நோயில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது, ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தள்ளி வைக்கலாம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார். இதன்மூலம் மத்திய அரசுக்கு கொரோனாவை ஒழிப்பதில் அக்கறை இருக்கிறதாக வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். இந்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்பாரா ?