வங்கிக் கடன் தவணையை நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கும் வங்கிகள் விதித்த வட்டியை வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறதே ?
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை வசூலிப்பதை மார்ச் முதல் மே வரை மூன்று மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. மேலும், ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த ஆறு மாத தவணைகளும் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்தி வைப்பு காலத்திற்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.
இதன்மூலம் கடனுக்கான மாதத் தவணையில் அசலுடன் வட்டியையும் சேர்த்து தான் வங்கிகள் வசூலிக்கின்றன. வட்டிக்கு வட்டி வசூலிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘கடன் பெற்றவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தீர்வு காண வேண்டும், ரிசர்வ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளியக் கூடாது, இது தொடர்பாக ஒரு வாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தன. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மத்திய அரசு எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
பிரதமர் கிசான் திட்டத்தில் ரூபாய் 1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளி வந்திருக்கிறதே ?
விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிசான் திட்டத்தை பிரதமர் மோடி 2018 டிசம்பரில் அறிவித்தார். ஒவ்வொரு ஏழை விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூபாய் 6,000 வங்கிக் கணக்கில் மூன்று தவணையாக தலா ரூபாய் 2,000 என வரவு வைக்கப்பட்டது. இதில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலி பயனாளிகள் முறைகேடாக பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூபாய் 1,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, தமிழக வேளாண் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ரகசிய வங்கி குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 38,000 போலி விவசாயிகளின் பெயரில் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, முறைகேடு நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சில உயர் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் இன்னும் பல மாவட்டங்களில் நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் முறைகேட்டிற்கு ஒத்துழைக்க மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதே ?
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், தமிழ்நாடு பைபர் நெட் கழகத் தலைவராகவும் பதவி வகித்தவர் சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ். இவர் பதவி வகித்த காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தும் மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1815 கோடி ஒதுக்கியது. தமிழகத்தில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். அதற்கு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி ரூ.2,000 கோடி மதிப்பில் டெண்டர் அறிவிப்பு வெளியானது.
தமிழக மூத்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய நிறுவனத்திற்கு டெண்டர் அளிப்பதற்காக டெண்டர் விதிகளை தளர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், டெண்டரில் திருத்தம் செய்ய அவர் மறுத்து விட்டார். இதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து மத்திய அரசின் தலையீட்டின் பேரில் பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தற்போது, இந்த பிரச்சினையில் சந்தோஷ் பாபு, ஐ.ஏ.எஸ். ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களுக்கு இசைவாக, ஊழலுக்கு துணை போகிற வகையில் தான் பெரும்பாலானவர்கள் செயல்படுவார்கள். ஆனால், அவர்களுக்கு விதிவிலக்காக துணிச்சலுடன் தமது பதவியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபுவை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது ஏன் ?
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 480 இல் இருந்தது, 458 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 73 ஆயிரத்து 360 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், இந்த ஆண்டு 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 மாணவர்கள் தான் விண்ணப்பம் செய்துள்ளனர். இறுதி எண்ணிக்கையில் மேலும் இது குறையும் என்று தெரிகிறது.
அதனால் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிக்கிற மாணவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, கல்வியின் தரம் கூடவில்லை. இதற்கு காரணம் சில பொறியியல் கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான கல்லூரிகளால் வணிக நோக்குடன் இதை ஒரு தொழிலாகவே நடத்தப்படுகிறது. அதனால், லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்களில் உணவு டெலிவரி பணியில் ஈடுபடுகிற பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. அதனால் வேலை வாய்ப்பும் இல்லை.
புதிய கல்விக் கொள்கை ஏற்கனவே நடைமுறையில் இருந்த கல்வி முறையை முற்றிலும் மாற்றி அமைக்கிற வகையில் அமைந்துள்ளதே ?
அரசமைப்புச் சட்ட உறுப்பு 45-ன்படி 6 வயது முதல் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதேபோல, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. இதில் தொடக்க கல்வி 5 ஆண்டுகளும், அதையொட்டி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் கல்வி பயிலுகிற முறை இருந்தது. ஆனால், இந்த முறைகளை முற்றிலும் புரட்டி போட்டு விட்டு, அதிரடியாக 3 வயது முதல் பள்ளியில் சேர்த்து பாடங்களை போதிக்கிற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 6 வயது 3 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. இது 1966 இல் கோத்தாரி குழு வழங்கிய பரிந்துரைகளுக்கு நேர் எதிராக இருக்கிறது. இக்குழு 10 பிளஸ் 2 என்ற முறையை அமல்படுத்தியது. அதற்கு மாறாக, தற்பொழுது 5 பிளஸ் 3 பிளஸ் 4 என்கிற முறையை புகுத்தியிருக்கிறது. இதில் 3 வயதில் தொடங்கி 5-வது வகுப்பு வரையிலும், பிறகு, 3 ஆண்டுகள், தொடர்ந்து 4 ஆண்டுகள் என கல்வி முறையை புகுத்துகிறது. ஒரு குழந்தையின் இளமைப் பருவத்தில் 3 வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது பெற்றோருக்கு எவ்வளவு சுமையாக இருக்கும் என்பதை பாஜ.க. ஆட்சியாளர்கள் உணருவதாக தெரியவில்லை. பொதுவாக, புதிய கல்விக் கொள்கை என்பது கிராமப்புற மாணவர்களையும், ஏழை, எளியோர்களையும் புறக்கணிக்கிற கொள்கையாகவே இருக்கிறது.
நடப்பு ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மோசடிகள் அதிகரித்துள்ளதே ?
முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது நடப்பு ஆண்டில் மட்டும் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதன் ரூபாய் மதிப்பு 159 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்த மோசடிகள் குறித்து ஆர்.பி.ஐ. தகவலின்படி 50 நிறுவனங்கள் 76 சதவிகித மோசடிகளை செய்துள்ளன. இதனுடைய மதிப்பு மொத்த மோசடியில் 98 சதவிகிதமாகும். இந்த வகையில், ஏற்கனவே வங்கி மோசடிகளில் ஈடுபட்ட நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். தற்போது மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கப் போகிறதா ? அல்லது வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல பாஸ்போர்ட் அனுமதி வழங்கப் போகிறதா ?
தமிழ்நாட்டில் இரண்டாவது, மூன்றாவது தலைநகரமாக மதுரையும், திருச்சியும் வருவதற்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறதே ?
கொரோனா தொற்றில் சிக்கி பொருளாதாரப் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற மக்களின் பிரச்சினையை தீர்ப்பதை விட்டுவிட்டு இத்தகைய தலைநகர் பிரச்சினைகள் அவசியமா என தெரியவில்லை. ஏற்கனவே ஆந்திரபிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் புதிய தலைநகரமாக அமராவதி பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா பாணியில் பழிவாங்கும் அரசியல் மேற்கொள்கிற ஜெகன்மோகன் ரெட்டி, அமராவதி மட்டும் தலைநகரமாக இல்லாமல் கர்னூல், விசாகப்பட்டிணத்தையும் கூடுதல் தலைநகரங்களாக உருவாக்குவதற்கு திட்;டமிட்டார். ஆனால், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தற்போது இருக்கும் நிலை தொடர வேண்டும் என்று புதிய தலைநகரம் உருவாக்கும் முயற்சிக்கு தடை விதித்திருக்கிறது. இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றமும் மறுத்து வருகிறது. மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக முதலமைச்சராக வந்தவர்கள் அதில் கவனம் செலுத்தாமல் புதிய தலைநகரங்களை உருவாக்குவதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது ? ஏற்கனவே சிக்கலில் இருக்கிற நிர்வாகம் மேலும் இடியாப்ப சிக்கலாக மாறுவதற்குத் தான் இந்த தலைநகர் மாற்றங்கள் பயன்படும்.
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித வரம்பு இருப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே ?
1992 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்திரா சகானி வழக்கில் மொத்த இடஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேலே செல்லக் கூடாது என்று வரம்பு விதித்தது. கடந்த 30 ஆண்டுகளாக 50 சதவிகித வரம்பு இருந்தாலும் தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் 50 சதவிகித வரம்பை மீறி, இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. பின்தங்கிய சமுதாயத்தினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது தான் நியாயமானதாகும். அதற்கு மாறாக நீதிமன்றங்கள் 50 சதவிகித வரம்பில் கடுமையாக இருப்பது சமூகநீதிக்கு எதிரானதாகும்.