பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறதே?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சமீபத்தில் நாக்பூரில் ஆளுநர் மாளிகையில் விருந்தினராக தங்கியிருந்த போது அவரது நண்பரான உள்ளூர் பா.ஜ.க. தலைவர் சோன்பா முசாலேவின் மகன் ரோஹித் சோன்பாஜி கொண்டு வந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சியுடன் ஏறி உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது பத்திரிகை செய்தியாயிற்று. இதைப் பார்த்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உள்ளூர் பா.ஜ.க. தலைவரின் விலை உயர்ந்த பைக் ஒன்றில் முக, தலைக்கவசம் இன்றி தொற்று நோய் காலத்தில் தலைமை நீதிபதி பயணம் செய்கிறார். ஆனால் உச்ச நீதிமன்றத்தை பூட்டி வைத்துள்ளார்.’ என்று பதிவிட்டார்.
இந்த தகவல் சில நிமிடங்களில் வைரலானது. இதை பார்த்த நீதிமன்றம், பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாமாகவே முன் வந்து பதிவு செய்தது. இந்த சூழலில் தான் மூத்த பத்திரிகையாளர் என். ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் மூவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். அதில் 1971 ஆம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 2 உட்பிரிவு (1) (சி) அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு என்ற போர்வையில் நீதிமன்றங்களை விமர்சனமே செய்யக் கூடாது என்று கூறுவது அடிப்படை உரிமையான பேச்சு உரிமைக்கு எதிரானது என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தை களங்கப்படுத்துவது என்பது ஒவ்வொரு நீதிபதியின் கண்ணோட்டத்தை பொறுத்தது. எனவே பிரசாந்த் பூஷன் பதிவிட்டுள்ள பதிவை பார்த்து ரசிக்க வேண்டுமேயொழிய அதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நினைப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல். மிகப் பெரிய அளவில் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் எதை கண்டிக்க வேண்டுமோ அதை கண்டிக்காமல், இதுபோன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறை காட்டுவது அதனுடைய மாண்பை பாதிக்கவே செய்யும்.
நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா மரணம் தொடர்பான செய்திகள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளதே?
இலங்கையைச் சேர்ந்த அங்கொடா லொக்கா என்ற தாதா தமிழகத்திற்கு சட்டவிரோதமாக எப்படி வந்தார்? தமது பெயரை பிரதீப் சிங் என்று எப்படி மாற்றிக் கொண்டார்? அவருக்கு ஆதார் அட்டை எப்படி கிடைத்தது? பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அங்கொடா லொக்கா பெங்களூரூ, சென்னை, கோவை போன்ற பல இடங்களில் சுற்றியுள்ளான். 2017 ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி விட்டான். நீதிமன்றம் அவனுக்கு எப்படி ஜாமீன் வழங்கியது? லொக்காவுக்கு அடைக்கலம் கொடுத்தவர் வழக்கறிஞர் சிவகாம சுந்தரி.
போதைப் பொருள் மற்றும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இந்த விசாரணையை சரியாக நடத்தியிருந்தால் ஆரம்பத்திலேயே அவனை கைது செய்திருக்க முடியும். தனது உருவ அமைப்பை மாற்றிக் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக கோவையில் அவன் தங்கியிருந்தது இப்போது அம்பலமாகியுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருவது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
பெட்ரோல்–டீசல் விலை உயர்வினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்களே?
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 1 பீப்பாய் 45.72 அமெரிக்க டாலர். இந்த நிலையில் கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் பெட்ரோல் – டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் ஏற்றியது எந்த வகையில் நியாயம்?
சர்வதேச சந்தையில் விலை குறையும் போது நியாயமாக பெட்ரோல் – டீசல் விலையை குறைத்திருக்க வேண்டும்.
2014 ஆம் வருடம் மே மாதம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது 1 லிட்டர் டீசல் விலை ரூ. 66.02. அன்றைக்கு எண்ணெய் கம்பெனிகள் அரசுக்கு கொடுத்த விலை ரூ. 50.05. இன்று டீசல் விலை ரூ. 68.22. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்கிற விலை ரூ.18.78 தான். அன்று மத்திய கலால் வரி 1 லிட்டருக்கு ரூ. 4.04. இன்றைக்கு ரூ 31.83 ஆக உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டில் பெட்ரோல் – டீசல் விற்பனையில் கலால் வரியில் மட்டும் ரூ 17 லட்சம் கோடி வருமானத்தை பெற்றிருக்கிறது. 2016 லிருந்து பெட்ரோல் 247 சதவிகிதமும், டீசல் விலையில் 296 சதவிகிதமும் மத்திய அரசு கலால் வரியாக உயர்த்தியிருக்கிறது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டு பல பொருட்களின் விலை உயர்கிறது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மூலம் மக்கள் மீது இருக்கும் சுமையை குறைக்காமல் பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம் 28 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றியிருக்கிறார். எனவே ராம பிரானுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அவர் அமைத்த ராம ராஜ்ஜியத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் வகையில் மக்கள் மீது இருக்கும் சுமையை எப்போது இறக்கப் போகிறார்?
தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதே?
தமிழகத்தில் ஆங்காங்கே கொலை, கொள்ளை, பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கெடுபிடி இருந்தாலும் அதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்களே தவிர ரவுடிகளுக்கோ, கூலிப்படையினருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுடைய குற்றச் செயல்கள் தங்கு தடையின்றி நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 57 கொலைகள், 168 கொள்ளைகள், 149 திருட்டுகள், வழிப்பறிகள், 29 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்னை மாநகரத்தில் தற்போது ரவுடிகளின் எண்ணிக்கை 7650 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை சென்னை மாநகரத்தில் 679 கிலோ கஞ்சா பிடிப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 68 லட்சம். அதுபோல 700 கிலோ குட்கா பிடிக்கப்பட்டுள்ளது. இதை கடத்தி விற்பவர்கள் என்று 183 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் கணக்கே இது என்றால் கணக்கில் வராத கஞ்சா, குட்கா டன் கணக்கில் இருக்கும் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் கூறுகிறது. தமிழகத்தில் குற்றச் செயல்களை ஒழிக்கவேண்டுமென்றால் அதில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்கவேண்டும். அதைத் தொடர்ந்து காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். அதைப் போலவே நீதிமன்றமும் இத்தகைய குற்றச் செயல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க முன்வர வேண்டும். இதன் மூலமே தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்.
காஷ்மீர் அவலங்களுக்கு எப்போது முடிவு வரும்?
‘அன்பே வா’ திரைப்படத்தில் . ‘காஷ்மீர், பியூட்டிபுல் காஷ்மீர்’ என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடுவார். சுற்றுலாவிற்கு பெயர் போன இடம். காஷ்மீர் ஆப்பிள் உலகப் புகழ் பெற்றது. இந்தியாவில் 75 சதவிகித ஆப்பிள் உற்பத்தி காஷ்மீரில் தான் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 2019 இல் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு தனி அந்தஸ்தை இழந்து 70 லட்சம் காஷ்மீர் மக்கள் வெளியுலகத்திற்கு தொடர்பில்லாமல் சிறையில் இருப்பதைப் போல வாழ்ந்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 4ஜி இணைய தள சேவை இன்னும் வழங்கப்பட வில்லை. தேசப் பாதுகாப்பு காரணமாக இந்த சேவை தரப்படவில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஊடகங்களும், பத்திரிகைகளும் முடக்கப்பட்டுள்ளன. தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக 500 க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் 200 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதற்கு ஒரே காரணமாக கூறப்படுவது தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதே.
ஓராண்டு காலம் ஊரடங்கு நீடிப்பதால் வர்த்தகம், சுற்றுலா, சேவைத் துறைகள், விவசாயம், கட்டுமானம், தொழில்துறை, போக்குவரத்து, கைவினை என பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு கூறுகிறது. காஷ்மீர் மாநில மக்கள் தற்போது சந்தித்து வரும் துன்பங்களிலிருந்து எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை.
சுற்றுச்சூழல் தாக்க மதீப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதே?
மீனவர் அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து உள்ளாட்சி அமைப்புகளின் இணைய தளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. மத்திய அரசை பொறுத்தவரை மும்மொழி கொள்கைகளை திணிக்க முயற்சிக்கிறது. மாநில மொழிகளை புறக்கணிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய அறிக்கைகளை கடந்த காலங்களில் தமிழாக்கம் செய்கிற பணியை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் மையம் (றிமிஙி) செய்து வந்தது. இப்போது பத்திரிகை தகவல் மையம் ஏன் தமிழாக்கம் செய்யவில்லை? சுற்றுச்சூழல் அறிக்கையை தமிழாக்கம் செய்தால் அனைவரும் படித்து புரிந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சமா?
புதிய தேசிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளாரே?
ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஆட்சியில் இருந்து நிறைவேற்றுகிற பிரதமர் மோடி மக்களை மத, மொழி ரீதியாக பிளவு படுத்துகிற புதிய கல்விக் கொள்கையை புதிய இந்தியாவின் அடித்தளமாக கருதுவதில் வியப்பு ஒன்றுமில்லை. குஜராத் மாநிலத்தில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி 11 ஆண்டுகாலம் முதலமைச்சராக மோடி இருந்தார். அதே குஜராத் பாணியை பின்பற்றி கடந்த 6 ஆண்டுகாலமாக பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்களை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ) ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறார். கோல்வாக்கர் கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மத, சாதி, இன, மொழி வேறுபாடுகளை கடந்த இந்திய கலாச்சார பண்புகளை சீர்குலைப்பதில் தற்காலிகமாக மோடி வெற்றி பெறலாம். ஆனால் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது.
கொரோனா தொற்று 20 லட்சத்தை தாண்டிவிட்டதே?
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தலைவர் ராகுல், “ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் 20 லட்சத்தை எட்டும் என்று ஏற்கனவே கணித்திருந்தேன். அதன்படி 7 ஆம் தேதியே 20 லட்சத்தை கடந்து விட்டது. 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன . மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அச்சமும், பாதுகாப்புமின்மையும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ளதை விட 4 மடங்கு பொருளாதார பாதிப்பு அதிகரிக்கப் போகிறது. பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கசப்பான செய்திகள் வரப்போகின்றன” என்று மிகத் துல்லியமாக எதிர்கட்சி தலைவர் மதிப்பீடு செய்துள்ளார். இதையெல்லாம் பிரதமர் மோடி கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனம் செய்வாரேயானால் பேரழிவிலிருந்து இந்தியாவை காப்பாற்ற முடியாது.
அயோத்தியில் புதிய மசூதி கட்ட அழைத்தால் பங்கேற்க மாட்டேன் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாரே?
அயோத்தியில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைக்காட்சியில், ‘அயோத்தியில் நடைபெறவுள்ள மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் ‘ஒரு முதலமைச்சர் என்பதை விட ஒரு யோகி என்ற முறையில் இந்த கேள்வியை எழுப்பினால், நான் ஓர் இந்து என்ற காரணத்தால் அங்கு போக மாட்டேன்’ என்று கூறினார். பா.ஜ.க. சார்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் உத்திர பிரதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் அந்த மாநிலத்தில் உள்ள மூன்றரை கோடி இஸ்லாமியர்களுக்கும் சேர்த்துதான் அவர் முதலமைச்சர்.
மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஓர் இந்து என்ற முறையில் எனது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு முழு உரிமை இருக்கிறது. மசூதிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு நான் அழைக்கப்பட்டால் பெரும்பாலான மக்களுடைய மதச் சார்பின்மை அச்சுறுத்தலுக்கு ஆளாகும்’ என்று கூறியிருப்பது குறித்து எவரும் அதிர்ச்சி அடையாமல் இருக்கமுடியாது. காந்தி, நேரு கண்ட இந்தியா இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது?
இலங்கையில் நடைபெற்றுள்ள தேர்தல் தீர்ப்பு கூறும் செய்திகள் என்ன?
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ராஜபக்ஷே கட்சி மூன்றில் இருபங்கு இடத்தை பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 71 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர். இதில் ராஜபக்ஷேயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 18 இல் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜபக்ஷே கட்சி 68 லட்சம் (ஏறத்தாழ 60 சதவிகித வாக்குகள்) வாக்குகள் பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலை பொறுத்தவரை 4 முறை பிரதமர் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கே கட்சியும், மைத்ரி பாலா சிரிசேனா கட்சியும் படுதோல்வி அடைந்திருக்கின்றன.
முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு மாகாணத்தில் 6 இடங்களையும், கிழக்கு மாகாணத்தில் சிறிய தமிழ் கட்சிகள் 4 இடங்களிலும் மொத்தம் 10 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன . இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமாக மலையகத் தமிழர்கள் கட்சியையும் சேர்த்து 25 தமிழர்கள் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாமல் பல்வேறு குழுக்களாக பிரிந்த காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்த வெற்றி குறித்து கருத்து கூறிய ராஜபக்ஷே, ‘தேர்தல் உத்திகளை கையாள்வதில் பிரதமர் மோடியின் கட்சியான பா.ஜ.க.வை பின்பற்றியதாக’ கூறியிருக்கிறார். இந்தியாவில் பெரும்பான்மை பேரின வாதத்தை முன்வைத்து மோடி வெற்றி பெற்றுள்ளதை போல இலங்கையில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இதன் மூலம் மோடி வழியில் ராஜபக்ஷே சென்று கொண்டிருப்பது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் நல்லதல்ல. இந்தியாவுக்கும் நல்லதல்ல.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இயக்குநர் ஆசாத் கிஷோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் கழித்து ரத்து செய்யப்பட்டுள்ளதே?
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்திய மேலாண்மை கழகம், இந்திய தொழில்நுட்ப கழகத்தைப் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்டது தான் அறிவியல் தொழில்நுட்பத்துறை. அந்த பொறுப்பில் மிகச்சிறப்பாக பணியாற்றிய ஆசாத் கிஷோருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்புகள் கடுமையான அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. அறிவியல் ரீதியாக பிரச்சனைகளை அணுகுவதில் ஆர்.எஸ்.எஸ் க்கு உடன்பாடில்லை. அந்த அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைக்கு எதிராக செயல்படுவதாக கூறி ஆசாத் கிஷோர் 5 ஆண்டு பதவி நீடிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சியில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது?